விளாடிமிர் புதின் ரஷ்ய அதிபராக வாழ்நாள் முழுக்க நீடிப்பாரா?

வியாழன், 25 ஜூன் 2020 (23:24 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேலும் இரண்டு பதவிக் காலங்கள் அதிபர் பதவியில் நீடிப்பதற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் ரஷ்ய மக்கள் இன்று வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு ஒரு வாரம் முன்கூட்டியே தொடங்கப்படுகிறது .

சுமார் 11 கோடி மக்கள் இதில் வாக்களிப்பார்கள்.

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது.

ஒருவேளை இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் 2024 ஆண்டில் பதவிக்காலம் முடியும் அதிபர் புதின், ஆறு ஆண்டுகள் கொண்ட மேலும் இரண்டு பதவிக் காலங்களில், அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.
கருத்தறியும் வாக்கெடுப்பு ஏன் நடக்கிறது?
 
ரஷ்யாவின் அரசியல்சாசனத்தைத் திருத்துவதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை 2020 ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்வைத்தார்.

 
அதிபர் பதவியில் இருப்பவர் மேலும் இரண்டு முறை தலா ஆறு ஆண்டு காலம் அப்பதவி வகிப்பதற்கான வாய்ப்பு குறித்து வாக்கெடுப்பு என்பதும் அதன் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இருந்தது.

அந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பு ஏப்ரல் 22 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இப்போது ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும் அது இன்றே தொடங்கியுள்ளது

சமூக இடைவெளி பராமரித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வாக்கெடுப்பு ரஷ்யா முழுக்க தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் நடைபெறும். இப்போது கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளிலும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வாக்குப் பதிவு மையத்தில் எத்தனை பேர் நுழையலாம் என்பதற்கான வரையறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. மாஸ்கோ போன்ற சில பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு நடைமுறைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 
புதினின் திட்டம் என்ன?
 
ரஷ்யாவின் 21 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களைப் பொருத்த வரையில் விளாடிமிர் புதினை மட்டுமே உயர் அதிகாரம் கொண்டவராகப் பார்த்திருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட அவர்,
அதிபராக (2000 - 2008), பிரதமராக (2008-2012), மீண்டும் அதிபராக (2012)ல் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்து வருகிறார்.

மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதிபர் புதின் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றாலும், அதற்கான வாய்ப்பு இல்லை என இதுவரையில் அவர் மறுக்கவில்லை. அதனால், வாழ்நாள் முழுக்க, அல்லது குறைந்தபட்சம் 2036 வரையில் அதிகாரத்தில் இருப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொள்கிறார் என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னாள் விண்வெளி வீராங்கனையும், நாடாளுமன்ற உறுப்பினரும், புதினின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவருமான வேலன்டினா டெரெஷ்கோவா ஏற்கெனவே இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அதிபர் பதவிக்கான கால வரம்புகளை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதினே தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கான ஏற்பாடாக இது கருதப்படுகிறது. இதற்கு மக்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது - 2018ல் கடைசியாக அவர் தேர்தலை சந்தித்தபோது, 76 சதவீத வாக்குகளுடன் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்