கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி பேசியுள்ள சொற்கள் இவை. சகோதரனும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரியங்கா காந்தி தீவிரமான அணுகுமுறையுடன் பேசுகிறார்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி சவால் விடும் விதம் மற்றும் அவர் பேசும் வார்த்தைகளை பார்த்து அரசியல் நிபுணர்கள் பல அர்த்தங்களைக் கற்பிக்கின்றனர்.
பிரியங்கா காந்தியின் இந்த அவதாரம், சுழலில் சிக்கிய காங்கிரஸைக் கரைக்குக் கொண்டு வர உதவுவது மட்டுமின்றி, மீண்டும் ஒரு புதிய பயணத்திற்குத் தயார்படுத்தவும் உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.
பிரியங்கா காந்தியின் உண்மையான முகம் என்ன என்பதுதான் கேள்வி. இது அவருடைய 2.0 அவதாரமா? இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவரால் முடியுமா? அவரால் முடிந்தால், சமாளித்தால், நாட்டின் அரசியலிலும், 2024 பொதுத் தேர்தலிலும் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள, மூன்று அரசியல் நிபுணர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.
பிரியங்காவிடம் என்ன சிறப்பு?
ஹேமந்த்அத்ரி, மூத்தபத்திரிகையாளர்
"ராகுலுடன் ஒப்பிடும்போது பிரியங்கா மக்களுடன் உடனடியாகக் கலந்து விடுகிறார். ராகுல் காந்தி ஆங்கிலத்தில் சிந்தித்து மொழிபெயர்த்து இந்தியில் பேசுகிறார். பிரியங்கா காந்திக்கு இந்தியில் புரிந்து கொண்டு, இந்தியில் பேசுகிறார், இந்தியில் மட்டுமே சிந்திக்கிறார்."
"நாட்டில் 48 சதவீத பெண் வாக்காளர்கள் உள்ளனர், பிரியங்காவுக்குப் பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. ராகுல் காந்தியை பப்பு என்று பாஜக நிரூபித்துள்ளது, ஆனால் பிரியங்கா காந்தி மீது அப்படி எந்த வர்ணமும் பூசப்படவில்லை. எதிர்க்கட்சிகள் அவரைக் களங்கப்படுத்துவது கடினம். ப்ரியங்கா காந்தியை இந்திரா காந்தியின் பிம்பமாகப் பார்க்கிறார்கள்."
"அவர் அன்பாகவும் பேசுகிறார். தேவைப்படும் போது கோபத்தையும் காட்டுகிறார். இது வழக்கமான இந்திரா காந்தி ஸ்டைல். நாட்டில் 30-40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்திரா காந்தியின் வடிவத்தை பிரியங்கா காந்தியில் பார்க்கிறார்கள்."
பிரியங்காதேர்தலில்போட்டியிடவாய்ப்பு
"ராகுல் காந்தி ஜெயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, பிரியங்கா தேர்தல் அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த முறை தேர்தலில் போட்டியிட கட்சிக்கு உதவினார். ஆனால் இந்த முறை அவரே தேர்தலில் போட்டியிடலாம். ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படாவிட்டால், அவர் வயநாட்டில் போட்டியிடலாம்.”
"ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை மீட்க முடிந்தால், அவர் 2024 இல் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவார், ஏனென்றால் ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலில் இருந்து வெளியேற முடியாது. சோனியா காந்தி ஏற்கனவே ஓய்வு பற்றிப் பேசிவிட்டார். இப்போது அவருக்கு 'செய் அல்லது செத்து மடி' என்ற நிலை தான் நிலவுகிறது.”
"ப்ரியங்காவுக்கு கடினம்"
நீரஜாசௌத்ரி, மூத்தபத்திரிகையாளர்
"இந்தியாவில் 65 சதவீத வாக்காளர்கள் 35 வயதிற்குட்பட்டவர்கள். குடும்ப அரசியலுக்கு எதிராக இந்த இளம் இந்தியாவில் எதிர்ப்பு உணர்வு உள்ளது, பிரியங்கா காந்தியை இந்தியா எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்."
"இன்றைய காலகட்டத்தில் காங்கிரஸின் போட்டியாளர்கள் மிகவும் பலமாக உள்ளனர். அரசு மிகவும் பலமாக உள்ளது. மிகப்பெரிய தேர்தல் எந்திரம் உள்ளது. ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை எப்படி ஆதரிக்கிறது, அவர் எந்த அளவுக்கு வீதியில் இறங்கிக் களப்பணியாற்றுகிறார் என்பதைப் பார்த்துத் தான் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்”
ப்ரியங்காவின்இலக்கு
"உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், பெண்களுக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்தது. பெண்கள் பெரிய ஓட்டு வங்கியாக உருவெடுத்து வருகின்றனர். இதை நரேந்திர மோதி புரிந்து கொண்டு லாபமடைந்துள்ளார்."
“பிஹாரிலும் நிதிஷ்குமார் இந்த வாக்கு வங்கியைக் குறிவைத்து லாபமடைந்தார். பிரியங்கா காந்தியால் இந்த வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.”
காங்கிரஸிடம்உள்ளமாற்றுவழிகள்
"காங்கிரஸ் கட்சி சங்கடத்தில் உள்ளது, பிரியங்கா காந்தி வலுவாக உருவெடுத்தால், அது கட்சிக்கு நன்மை பயக்கும். தேசிய அளவில் மற்ற காங்கிரஸ் தலைவர்களை விட பிரியங்கா காந்தி மக்களுடன் மிகவும் சிறப்பாகத் தொடர்பு கொள்ள முடியும்."
ப்ரியங்கா மீதான நம்பிக்கை
விஜய்த்ரிவேதிவிஜய்த்ரிவேதி, மூத்தபத்திரிகையாளர்
“நாட்டில் உள்ள மாநிலங்களின் தலைமைக்கு ராகுலை விட பிரியங்கா காந்தி மீது அதிக நம்பிக்கை உள்ளது. 3-4 ஆண்டுகளில் காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலோர் ராகுல் காந்தியால் வெளியேறினர், பிரியங்கா காந்தியால் யாரும் வெளியேறவில்லை. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அல்லது ஜோதிராதித்ய சிந்தியா அல்லது வேறு எந்த தலைவரானாலும் சரி, ராகுலுடன் ஏற்பட்ட பிணக்கினால் தான் விலகினர்.”
"இமாச்சலில் காங்கிரஸ் பிளவுபட்டது, அது பிரியங்கா காந்தியால் தீர்க்கப்பட்டுத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஹிமாச்சல் வெற்றியின் பெருமை பெரும்பாலும் ப்ரியங்காவையே சேரும்.”
"ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு இடையேயான உட்கட்சி மோதலை பிரியங்கா முடிவுக்குக் கொண்டு வர முடியும், மேலும் சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேலும் பிரியங்காவால் ஆதரிக்கப்பட்டவர், அதன் பிறகு அவர் அரசாங்கத்தை அமைத்தார்."
ப்ரியங்காவின்அரசியல்
"பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வந்ததில் இருந்து, அவர் ஆக்ரோஷமான அரசியலைத் தான் முன்னெடுத்து வருகிறார். லக்கிம்பூர் கேரி சம்பவத்தின் போது பிரியங்கா காந்திதான் முதலில் வந்தார்."
"உ.பி. தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, ராகுல் காந்தி பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை. அங்கு பிரியங்கா காந்தி மட்டுமே தெரிந்தார். 'பெண் தான். போராடமுடியும்” என கோஷம் போட்டார். அமைப்பின் பலவீனம் காரணமாக, சீட் கிடைக்காமல் போனது. ஆனால் அவர் தனியாளாகப் பலமாகப் போராடினார்."
"நாட்டில் மாநிலங்களின் தலைமைப் பொறுப்பில் மல்லிகார்ஜுன் கார்கே முக்கியப் பங்காற்றுகிறார். பிரியங்கா காந்தியால் களத்தில் இறங்கித் தலைமை தாங்க முடியும்.”
எந்தஅளவுநம்பிக்கை?
"பிரியங்கா காந்தி வந்து களத்தையே மாற்றி விடுவார் என்று நினைத்தால் அதுவே தோல்வி தான்”
"காங்கிரஸ் கட்சி வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறது. அதை ஃபோர்ப்ஸ் பட்டியலில் கொண்டு வரலாம் என்று முயற்சிப்பது அறிவீனம். முதலில் அதை கீழ் நடுத்தர நிலைக்கும் பிறகு மேல் நடுத்தர நிலைக்கும் கொண்டு வர முயற்சிக்கலாம். காங்கிரஸ் 50 இடங்களைக் கைப்பற்றினாலே ப்ரியங்காவுக்கு வெற்றி என்று கொள்ளலாம்”