"கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?" - உயர்நீதிமன்றம் கேள்வி
வெள்ளி, 10 ஜூலை 2020 (12:52 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி - கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அந்த செய்தி இது குறித்து மேலும் விவரித்துள்ளது. சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தணிகாசலம், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு, மருந்துகளை விற்பனை செய்தார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க போலீசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி முன்பு நேற்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். 'தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு காரணம் என்ன? அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறும்போது, அதை அரசு பரிசோதனை செய்வதை விட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?' என்று நீதிபதிகள் கேட்டனர்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது, 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று திருவள்ளுவரின் திருக்குறள் கூறுகிறது. அதை அரசு செய்யவில்லை. சித்த மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினால், அவர்களது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் சூழல் நம் நாட்டில் நிலவுகிறது.
மேலும், 'சித்த மருத்துவத்தில் மத்திய, மாநில அரசு பாகுபாடு காட்டுகிறது. அந்த மருத்துவத்தை புறக்கணிக்கின்றன. தற்போது ஆங்கில மருந்துவம் செய்யும் பல மருத்துவமனைகளில், அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. சித்த மருத்துவ சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான சிறை கைதிகள் உள்பட 400 பேர் சித்த மருத்துவத்தினால் குணமடைந்துள்ளனர். ஒரு உயிர் பலி கூட ஏற்படவில்லை. சித்த மருத்துவம் குறித்து அரசிடம் இதுபோன்ற மனப்போக்கு இருந்தால், இந்த மருத்துவம் யாருக்கும் பயனின்றி போய் விடும். யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என்று கூறினால், அதை அரசு கவனத்துடன் எடுத்து பரிசீலிக்க வேண்டும்' என்றும் நீதிபதி கூறினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தையும், மத்திய, மாநில அரசுகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கின்றோம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?. அவர்களது மருந்து பரிசோதனை செய்யப்பட்டதா? அதில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா? மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.