செவ்வாய்க் கிழமை இரவு பத்தே முக்கால் அளவில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, அ. அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பின்னணி என்ன?
அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் அன்வர் ராஜா. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா 2001- 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர். இதற்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார்.
சசிகலாவின் ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்துவந்தார். வி.கே. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவந்தார். தவிர, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணியாக இருந்துவரும் நிலையில், தொடர்ந்து அ.தி.மு.க. அடைந்துவரும் தோல்விக்கு பா.ஜ.கவுடனான கூட்டணியே காரணம் என்று விமர்சித்து வந்தார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியை அன்வர் ராஜா கடுமையாக விமர்சிப்பது போல ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் அவர் பழனிச்சாமியை ஒருமையில் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 24ஆம் தேதி அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, தற்போதைய தலைமை வலிமையற்றதாக இருப்பதாகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காக சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதனைக் கேட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது. அன்வர் ராஜாவை ஒருமையில் குறிப்பிட்டு, "சசிகலா ஆளையெல்லாம் ஏன் பேச விடுறீங்க?" என்று குரல் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்தக் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில்தான் அன்வர் ராஜாவை நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க வழிகாட்டும் குழுவில் உறுப்பினராக இருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பா.ஜ.கவில் சமீபத்தில் இணைந்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பது தொடர்பான ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டம் நடக்கவிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் அ. அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.