பிரிட்டன் பிரதமரை கடுமையாக விமர்சித்த டிரம்ப் - கசிந்த இமெயிலில் இருந்த செய்தி என்ன?
செவ்வாய், 9 ஜூலை 2019 (21:27 IST)
அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதருடன் பணிபுரிய டிரம்ப் மறுத்ததை தொடர்ந்து தூதருக்கான முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பிரிட்டனின் பிரதமர் அலுவலகம்.
அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் டிரம்பின் நிர்வாகம் "திறமையற்ற ஒன்று" என்று விமர்சனம் செய்த இமெயில் கசிந்த பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து பதிவிட்ட ட்வீட்டுகளில் தெரீசா மே பிரெக்ஸிட் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இமெயில் கசிந்த விஷயம் "துரதஷ்டமான" ஒன்று என்றும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே "சிறப்பான மற்றும் நீடித்த" உறவு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பில், சர்வதேச வர்த்தக செயலர் லியம் ஃபாக்ஸுடன் சேர்ந்து சர் கிம், டிரம்பின் மகள் இவாங்காவை சந்திக்கவுள்ளார் என பிபிசி நியூயார்க் செய்தியாளர் நிக் ப்ரியாண்ட் தெரிவித்துள்ளார்.
"இந்த இமெயில் கசிவு விவகாரம் எவ்வளவு துரதிஷ்டமானது என்பதை நாங்கள் அமெரிக்காவுக்கு விளக்கி விட்டோம். இந்த விவகாரம் அமெரிக்காவுடனான நெருக்கத்தை பாதிக்காது. மேலும் இருநாட்டு உறவில் உள்ள மதிப்பையும் குறைக்காது" என பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"தாங்கள் இருக்கும் நாடுகளில் நடக்கும் அரசியல் குறித்து நேர்மையான விமர்சனங்களை வழங்கும் சுதந்திரம் தூதர்களுக்கு இருக்க வேண்டும். எனவே சர் கிம்மிற்கு தெரீசா மே ஆதரவளித்துள்ளார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இருக்கும் நீண்டகால உறவால் இருநாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒரு தொடர்பு உள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் உள்ள நன்மதிப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் வெளியுறவுச் செயலருமான லார்ட் ஹேக், பிரிட்டன் அரசு பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், எதையும் பெரிதாக்க வேண்டாம்." என்றும் தெரிவித்துள்ளார்.
"உலகில் உள்ள எந்த ஒரு தூதரிடமிருந்து உங்களால் நேர்மையான ஓர் அறிக்கையை பெற இயலாது. அவர்களின் எந்த ஒரு பேச்சுவார்த்தைகளாவது வெளியில் கசிந்தால் நாம் அவர்களை பணியைவிட்டு நீக்க வேண்டிய சூழல்தான் ஏற்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் தூதரின் இமெயில்கள் ஞாயிறன்று `மெயில்` ஊடகத்தில் வெளியானது அதில் டிரம்ப் மற்றும் அவரின் நிர்வாகத்தை சர் கிம், கடுமையாக விமர்சித்திருந்தார்.
வெள்ளை மாளிகை "குழப்பமானதாகவும் திறனற்றதாகவும்" உள்ளது என அதில் தெரிவித்திருந்தார்.
சர் கிம்மின் இமெயில் வெளியானது குறித்து டிரம்ப், "நாங்கள் அவரின் பெரிய ரசிகர் இல்லை. அவர் பிரிட்டனுக்கு ஒழுங்காக பணியாற்றவும் இல்லை" என தெரிவித்தார்.
மேலும் அடுக்கடுக்கான பல ட்விட்டுகளில் தெரீசா மே மற்றும் பிரெக்ஸிட்டையும் விமர்சித்திருந்தார்.
"பிரிட்டனுக்கு புதிய பிரதமர் கிடைக்கப்போகிறார் என்பது பிரிட்டனுக்கு ஒரு நல்ல செய்தி." என்று அவர் தெரிவித்திருந்தார்.