சீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?- உண்மையைத் தேடி பிபிசியின் பயணம்

சனி, 22 ஜூன் 2019 (19:13 IST)
சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பல லட்சம் முஸ்லிம் வீகர் இன மக்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.


 
ஆனால் ''தீவிரவாதத்தை'' தடுக்கும் மையங்களில் வீகர் இன முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து கலந்து கொள்வதாக சீனா கூறுகிறது. அவற்றில் ஒரு மையத்துக்குள் பிபிசி சென்று ஆய்வு செய்தது.
 
முன்னர் முகாம்களுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் காரில் சென்று கொண்டே, கம்பி வேலி மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களை பார்த்தது தான் நெருக்கத்தில் நான் பார்த்ததாக இருந்தது. சாதாரண உடையில் எங்களைப் பின்தொடர்ந்து வந்த காவலர்கள் நாங்கள் நெருங்கிவிடாதபடி தடுத்துவிடுவார்கள்.


 
இப்போது உள்ளே பார்வையிடுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.
 
அதை ஏற்றுக் கொள்வதன் ஆபத்து வெளிப்படையானதுதான். கவனமாக தயார் செய்யப்பட்டதைப் போல தெரிந்த பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சமீபத்தில் இருந்த பாதுகாப்பு கட்டமைப்புகள் நீக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்கள் காட்டின.
 
உள்ளே ஒவ்வொருவராக நாங்கள் பேசியதில், சிலர் பதற்றமாக இருப்பது தெரிந்தது. அவர்கள் ஒரே மாதிரியான கதைகளைக் கூறினர்.
 
அவர்கள் அனைவரும் ஜின்ஜியாங்கின் மிகப் பெரிய, பிரதானமாக முஸ்லிம் இன குழுவான வீகர் மக்களாக இருந்தார்கள். ''தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்'' என்று தங்களைப் பற்றி அவர்கள் கூறினர். தங்களுடைய ''சிந்தனைகளை மறு சீரமைப்பு'' செய்து கொள்வதற்காக தாங்களாக முன்வந்து அவர்கள் அங்கே வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
 
எங்களிடம் பேசுவதற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் வார்த்தைகள் மூலமாக சீனா தெரிவித்த கருத்துகள் இவை. அவர்களிடம் குறுக்கு விசாரணையாகக் கேள்விகள் கேட்பது தீவிர ஆபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.


 
வாய்தவறி அவர்கள் எதையாவது சொல்லிவிட்டால், அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? உண்மை நிலையில் இருந்து பிரசாரத்தை நாங்கள் எப்படி பாதுகாப்பாக பிரித்துப் பார்ப்பது?
 
தீவிரவாதமானதும் மறுபிறப்பும்
செய்தி சேகரிப்பில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்ட பல நிகழ்வுகள் உண்டு.
 
2004ஆம் ஆண்டில் இராக்கில் அமெரிக்காவால் நிர்வகிக்கப்பட்ட அபு கிராய்ப் சிறைக்குள் நிறைய செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துமீறல்கள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
குரல் எழுப்பிக் கொண்டு, அங்கே அடைக்கப்பட்டிருந்தவர்களை நெருங்காத அளவுக்கு செய்தியாளர்கள் மொத்தமாக, தள்ளியே வைக்கப்பட்டனர். சிலர் செயற்கைக் கால்களை அசைத்து தங்கள் நிலையை காட்டிக் கொண்டிருந்தனர்.
 
ஆஸ்திரேலியாவின் கடலோர அகதிகள் தடுப்புக் காவல் மையங்களுக்கு அபூர்வமாக மற்றும் கட்டுப்பாடுகளுடன் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட உதாரணம் இருக்கிறது.


 
உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான தடுப்பு முகாம்களை சீனா மூட வேண்டும் - துருக்கி
சீனாவில் காணாமல் போகும் பல்லாயிரம் உய்கர் முஸ்லிம்களுக்கு என்ன நேர்கிறது?
1930கள் மற்றும் 1940களில், தாங்கள் எந்த அளவுக்கு ''மனிதாபிமானம்'' மிக்கவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சொன்னென்பர்க் மற்றும் தெரெசியன்ஸ்டாட் முகாம்களுக்கு செய்தியாளர்களை ஜெர்மனி அரசு அழைத்துச் சென்றது.
 
அந்த அனைத்து நிகழ்வுகளிலும், உலக அளவில் முக்கியத்துவமான கதைகளுக்கு நிருபர்கள் சாட்சிகளாக இருந்தனர். அதனால் பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்பாடுகளுடன் அணுக அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷயங்கள் சொல்ல வைக்கப்பட்டன.
 
ஜின்ஜியாங்கில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. அங்கே உள்ள சூழ்நிலைகள் நன்றாகத்தான் இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காக மட்டுமின்றி, அவர்கள் சிறைவாசிகள் அல்ல என்று நிரூபிக்கும் வகையிலும் இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர்.
 
நல்ல வெளிச்சமான வகுப்பறைகளில் பள்ளிக்கூட மேசைகளில், வரிசை வரிசையாக வயது வந்தவர்கள் அமர்ந்து, சீன மொழியை கற்றுக் கொண்டு, ஒரே மாதிரியாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
 
சீனாவின் முஸ்லிம்கள் தங்கள் ''சிந்தனைகளை மறுசீரமைப்பு'' செய்து கொள்வதற்காக தங்கியுள்ள முகாம்களை பிபிசி பார்வையிட்டது. வகுப்பறைகளில் வரிசைகளாக அமர்ந்து கல்வி கற்கும் பெரியவர்கள்.
 
சிலர் நன்றாக பயிற்சி செய்த இசை மற்றும் நடனங்களை எங்களுக்காக செய்து காட்டினர். பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்த அவர்கள், மேசைகளை சுற்றி வந்து நடனம் ஆடினர். அவர்கள் முகங்களில் செயற்கையான புன்னகை தெரிந்தது.
 
மற்றவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டவாறு நடனம் ஆடினர். எங்களுக்குக் காண்பிக்கப்பட்ட காட்சிகளை சீன அதிகாரிகள் முழுமையாக நம்பினர் என்பதும், சிலருக்கு கண்ணீர் வந்ததும் தெளிவாகத் தெரிந்தது.
 
மக்கள் மறுபடி பிறந்தவர்களைப் போல இருந்தார்கள். ஒரு காலத்தில் அபாயகரமான அளவுக்கு தீவிரவாத செயல்பாடுகளுடனும், சீன அரசுக்கு எதிராக வெறுப்புடனும் இருந்த அவர்கள், இப்போது பாதுகாப்பாக பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறார்கள். அதே அரசாங்கம் உரிய காலத்தில் மேற்கொண்ட, நலன்சார்ந்த தலையீட்டு முயற்சிகளால் இது சாத்தியமாகியுள்ளது.
 
இதில் இருந்து மேற்கத்திய நாடுகள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தி.
 
மறுகல்வி அளிக்கும் கொள்கை தொடங்கப்பட்ட தேதியை சுட்டிக்காட்டும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை உற்றுப் பார்த்தார்.
 
''ஜின்ஜியாங்கில் 32 மாதங்களில் தீவிரவாதத் தாக்குதல் ஒன்றுகூட நடக்கவில்லை'' என்று அவர் கூறினார். ''இதுதான் எங்களுடைய தேசபக்தியுடனான கடமை'' என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்