ட்ரம்பின் அங்க அடையாளங்கள் என்ன? போலீஸ் எடுத்த புகைப்படம், கைதி எண் வெளியீடு

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:55 IST)
கடந்த 2020 இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதன் முடிவுகளை மாற்ற முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஜார்ஜியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இதையடுத்து, ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா சிறையில் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) சரணடைந்தார். அங்கு கைதிகளுக்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு, சில நிமிடங்களில், இரண்டு லட்சம் டாலர்கள் பிணையின் கீழ் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.
 
 
கடந்த ஐந்து மாதங்களில் ஏற்கனவே மூன்று முறை ட்ரம்ப் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக கைது செய்யப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
ஆனால் இந்த முறை அட்லாண்டா சிறைச் சாலையில் கைதிகளுக்கு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் ட்ரம்புக்கும் கடைபிடிக்கப்பட்டது.
 
குறிப்பாக, சிறையில் கைதிகளை போலீசார் எடுக்கும் “மக் ஷாட்” எனும் புகைப்படம் ட்ரம்புக்கும் எடுக்கப்பட்டது.
 
அத்துடன், வெள்ளை நிற ஆண், உயரம்: 6 அடி, 3 அங்குலம், எடை: 97 கிலோ, மஞ்சள் அல்லது ஸ்ட்ராபெரி நிற முடி, நீல நிற கண்கள் கொண்டவர் என்று ட்ரம்பின் அங்க அடையாளங்கள் தொடர்பாக போலீசாரின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும், சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேலும் கைதிகளுக்கு அளிக்கப்படுவது போல, P01135809 என்ற அடையாள எண் ட்ரம்புக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.
 
கைதிகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் முடிந்து, ட்ரம்ப் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆனது.
 
அப்போது சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
தேர்தல் முறைகேடு வழக்கில் ட்ரம்ப் சிறையில் இருந்து உடனே விடுவிக்கப்பட்டிருந்தாலும்,நீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
 
குறிப்பாக, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் பகிரக்கூடாது. சாட்சிகளை அச்சுறுத்தும் விதத்திலான கருத்துக்களையும் அவர் கூறக்கூடாது.
 
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிற நபர்களை தொடர்பு கொள்ள விரும்பினால், வழக்கறிஞர்கள் மூலம் மட்டுமே அதை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ட்ரம்புக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
 
 
இதனிடையே, தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்த சில நிமிடங்களில் ஜாமீனில் வெளிவந்த ட்ரம்ப், தன் மீதான இந்த வழக்கை “நீதியின் கேலிக்கூத்து” என்று விமர்சித்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பிடனை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் நான் களமிறங்க உள்ளேன்.
 
இந்த நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
 
மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்த ட்ரம்ப்
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
 
அதில், “"Election interference. Never surrender!" என்று ஆங்கிலத்தில் குறுந்தகவலை அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன், அட்லாண்டா சிறையில் போலீசார் எடுத்த தமது “ மக் ஷாட்” புகைப்படத்தையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
 
கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜோ பிடன் மீது, ட்ரம்ப் முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதையடுத்து ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு, ஜனவரி 2021 இல் முடக்கப்பட்டது.
 
டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஃபிராங்க் சினாட்ரா, அல் கபோன் ஆகிய அமெரிக்க பிரபலங்களின் வரிசையில், மக் ஷாட் புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமாகவும், இப்புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரையும் ட்ரம்ப் பெற்றுள்ளார்.
 
சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பின் வீடு திரும்புவதற்கு முன், விமான நிலையில் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர், 2020 அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகளை சந்தேகிக்க தமக்கு அப்போது உரிமை இருந்தது என்று கூறினார்.
 
“அந்த தேர்தல் ஒரு மோசடியான தேர்தல்;முறைகேடு நடைபெற்ற தேர்தல் என்று கருதினேன். அவ்வாறு கருதுவதற்கு தமக்கு உரிமை உண்டு” என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
“ ஹிலாரி கிளிண்டன் (ஜார்ஜியா மாகாண கவர்னருக்கான முன்னாள் வேட்பாளர்), ஸ்டேசி ஆப்ராம்ஸ் உள்ளிட்ட பலர் இதே வழிமுறையை பின்பற்றுவதை நீங்கள் பல ஆண்டுகளாக பார்த்து கொண்டுதான் இருக்கிறீர்கள்” என்றும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார்.
 
கடந்த 2020 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்கு சீட்டுகளில் மோசடி நடைபெற்றதாக ட்ரம்ப் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார்.
 
அதிபர் தேர்தலில் ஜோ பிடனிடம் 12 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.
 
அதையடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றும் நோக்கில் செயல்பட்டது தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேர் மீது கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
 
 
கடந்த 2020 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், ட்ரம்ப் பேசியதாக கூறப்பட்ட ஒரு தொலைபேசி உரையாடல் வெளியானது.
 
அதில், “ ஜோ பிடனை வெல்வதற்கு வசதியாக, அவரைவிட 11,780 வாக்குகளை அதிகம் பெறும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று ஜார்ஜியா மாகாணத்தின் உயர்நிலை தேர்தல் அதிகாரி ஒருவருக்கு வாக்கு எண்ணிக்கையின்போது ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததைப் போன்ற உரையாடல் இடம்பெற்றது.
 
இந்த குற்றச்சாட்டின் பேரில் தான் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
அதில் தேர்தல் மோசடியில் ஈடுபட்டது, தேர்தல் அதிகாரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ய தூண்டியது, ஆள்மாறாட்ட சதி செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில், ட்ரம்புடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் சுமார் 10 பேர் ஏற்கனவே ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் நியூயார்க் நகர முன்னாள் மேயர் ரூடி கியுலியானி, வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் ஆகியோர் அடங்குவர்.
 
முன்னதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 25 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதிக்குள், போலீசில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்