'பாலியல் வன்புணர்வு செய்தி வந்தால் சேனலை மாற்றிவிடுவோம்' - சவாலாக இருக்கிறதா ஆண் குழந்தை வளர்ப்பு?

Prasanth Karthick

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:12 IST)

பெண்களுக்கு எதிரான இரு சம்பவங்கள் கடந்த சில தினங்களில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கிறது. ஒன்று, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டது, மற்றொன்று மகாராஷ்டிராவின் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது.

 

 

அதிச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவ்விரு பாலியல் வன்புணர்வு சம்பவங்களும் ஆண் குழந்தைகள் - பெண் குழந்தைகள் இருவருடைய பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. பொதுவாக, இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்திய விவாதங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

 

ஆனால், சமீப தினங்களாக, ஆண் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துவதே, இத்தகைய சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதுகுறித்த விவாதங்களும், ஆண் குழந்தை வளர்ப்பு தொடர்பான கவுன்சிலிங், கருத்தரங்குகள், அமர்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. சமூக ஊடக 'இன்ஃப்ளூயன்சர்கள்' சிலரும் ஆண் குழந்தைகள் வளர்ப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.

 

இதையொட்டி, ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. பாலியல் வன்புணர்வு போன்ற பிரச்னைகளை மகனிடம் வெளிப்படையாகப் பேச முடிகின்றதா, ஆண் குழந்தைகள் வளர்ப்பில் மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளதா என்ற கேள்விகளை அவர்களிடம் முன்வைத்தோம்.

 

தொடுதல் குறித்த புரிதல்
 

சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த மாலா என்பவரிடம் பேசினோம். உணவு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் அவரின் மகன் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒற்றைப் பெற்றோராக, தன் பதின்பருவ மகனிடம் என்னவெல்லாம் பேச முடிகின்றது என்பதை அவர் பகிர்ந்துகொண்டார்.

 

“வீட்டில் மற்ற பெண்களை எப்படி மரியாதையாக நடத்துகிறோம் என்பதே முக்கியம். அப்படி மரியாதையாக நடத்தினாலே இம்மாதிரியான பிரச்னை வராது என நினைக்கிறேன். வீட்டு வேலைகளில் ஆண்-பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. என் மகளைப் போன்றே, வீட்டு வேலைகளில் என் மகனையும் பங்கெடுக்கச் செய்கிறோம். ‘ஆண்கள் அழலாம்’ என்று என் மகனிடம் கூறுகிறேன். இது முந்தைய தலைமுறையினரிடையே இல்லை,” என்கிறார் மாலா.

 

மாதவிடாய் குறித்துத் தன் மகனுக்கு இன்னும் முழுமையாகச் சொல்லவில்லை எனினும், அச்சமயங்களில் ஏற்படும் சோர்வு குறித்தும் அப்போது தனக்கும் சகோதரிக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருப்பதாக அவர் கூறுகிறார்.

 

“தொடுதல் குறித்த அடிப்படை புரிதலை ஏற்படுத்த முயல்கிறோம். எந்த சமயத்திலும் ‘நோ’ என்றால் அதன் அர்த்தம் விருப்பம் இல்லை என்பதுதான். வலுக்கட்டாயமாக எதையும் செய்யக்கூடாது. சக தோழிகளிடம் ஏற்படும் ஈர்ப்பு குறித்தும் புரிய வைக்கிறோம். தோழிகளை எல்லை மீறி கேலி செய்யக் கூடாது என்கிறோம்,” என்கிறார் மாலா.

 

“பாலியல் வன்புணர்வு போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு குறித்து வெளிப்படையாகப் பேச முடியவில்லை. குழந்தைகள் எல்லாவற்றையும் கவனிக்கின்றனர். ஒருவரின் அனுமதி இல்லாமல் எதையும் வற்புறுத்துவது கூடாது என என் மகனிடம் கூறியுள்ளேன்,” என்றார் அவர்.

 

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு சவாலாக இருப்பதாகவும் பள்ளிகளில் அவர்களது நடத்தைகள் குறித்த அச்சம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். தன்னுடைய மொபைலில் இருந்து யூடியூபை நீக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

 

'விவாதத்தை தொடங்கவில்லை'
 

கோயம்புத்தூரைச் சேர்ந்த *ராதிகாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகன் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

 

“இதுவரைக்கும் எந்த விவாதத்தையும் என் மகனிடம் தொடங்கவில்லை. மகனுக்கு 'டீன்-ஏஜ்' வந்துவிட்டது என என் கணவர் என்னிடம் கூறுவார். ஆனாலும், நாங்கள் இன்னும் அவனை சிறுவனாகத் தான் பார்க்கிறோம்,” என்கிறார்.

 

"பாலியல் வன்புணர்வு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமயங்களில், வேறு சேனல்களை மாற்றிவிடுவோம் அல்லது அதுகுறித்து கவனிக்காதது போன்று அமைதியாக கடந்துவிடுவோம்," என்கிறார் அவர்.

 

“அடிப்படை விஷயமாக எல்லோரையும் மரியாதையாக நடத்த வேண்டும் என்று மட்டும் மகனுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்,” என்றார், ராதிகா.

 

‘குட் டச், பேட் டச்’
 

பதின்பருவத்தினர் என்று அல்லாமல், குழந்தைகள் எந்த வயதில் இருந்தாலும் அதற்கேற்ப அளவில் விவாதங்களைத் தொடங்க வேண்டும் என்பதே, உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 

சென்னையை சேர்ந்த பிரேமிக்கு, 3-ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் பிரேமி, ஒற்றை பெற்றோராக உள்ளார். இந்த வயதில் தன் மகனுக்கு ‘தொடுதல்’ குறித்த புரிதலை அடிப்படையாக சொல்லித் தருவதாக அவர் தெரிவித்தார்.

 

“ ‘குட் டச், பேட் டச்’ (நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்) குறித்து என் மகனுக்குச் சொல்லித் தருகிறேன். பாலியல் வன்புணர்வு குறித்து எதுவும் இப்போது என் மகனிடம் பேச முடியாது. யார் என்ன செய்தாலும் நீ சக மாணவியையோ, மாணவனையோ அடிக்கக் கூடாது என என் மகனிடம் கூறுவேன். இந்தளவுக்குதான் இப்போது விவாதத்தைத் தொடங்க முடியும்,” என்றார் பிரேமி.

 

தன் மகன் வளரும்போது, மேலும் சில விஷயங்களைப் புரியவைப்பதாக அவர் கூறுகிறார். அதில், சக மனிதர்களை மதிப்பது முக்கியமானது என்கிறார் அவர்.

 

“பெண்ணை மரியாதையுடன் நடத்தினாலே இந்தப் பிரச்னைகள் நடக்காது. அதைத்தான் நான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்களது வழியிலேயே சென்று, வீட்டில் நடக்கும் உதாரணங்களைக் காட்டித்தான் பேச வேண்டும். ஆண் குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. ஒருநாள் விஷயமல்ல இது. தினமும் கற்றுக்கொடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார் பிரேமி.

 

'மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்'
 

எந்த வயதாக இருந்தாலும், இதுகுறித்த விவாதங்களை தொடர்ச்சியாக மகன்களிடம் நடத்த வேண்டும் என்பதற்கு கவிதா வினோத் உதாரணமாக திகழ்கிறார்.

 

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கவிதா வினோத்திற்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவருக்கு 19 வயது, மற்றொருவருக்கு 21 வயது. கல்லூரி மூன்றாமாண்டு படிக்கும் தன் 19 வயது மகனுக்கு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து பேசும் போது, நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும் என கூறுவதாக அவர் தெரிவித்தார். இண்டீரியர் டிசைனிங் நிறுவனத்தை கவிதா வினோத் நடத்தி வருகிறார்.

 

“என் கணவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியே சென்றுவிடுவதால், நான் தான் பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறேன். என மகன்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன். கொல்கத்தா ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து என் மகனும் அவனுடைய நண்பர்களும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். பதிவுகளுடன் நிறுத்திக் கொள்ளாமல், நாம் மாற்றத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும் என அவனிடம் கூறினேன்,” என்கிறார் அவர்.

 

டிஜிட்டல் யுகத்தில் ஆண் குழந்தைகளை வளர்ப்பது சவாலாக இருப்பதாக அவர் கூறுகிறார். “நாம் எதை தடுக்கிறோமோ அதைத்தான் சென்று பார்க்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். நான் என் மகன்கள் செல்போனில் எந்த விஷயங்களை தேடுகின்றனர் (ஹிஸ்ட்ரி) என்பதையெல்லாம் முன்பு பார்த்திருக்கிறேன். இப்போது, அவர்கள் செல்போனை ‘லாக்’ செய்துவிட்டனர்,” எனக் கூறி, இதில் உள்ள சவால்களைப் பகிர்ந்தார்.

 

“என் மகன்களிடம் 18 வயதிலேயே, ஒரு பெண்ணுக்குப் பிடிக்கவில்லையென்றால் முழுவதும் தவிர்த்துவிட்டு, அவர்களிடமிருந்து கடந்து சென்றுவிட வேண்டும், அவர்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை அழுத்தமாக கூறியிருக்கிறேன்,” என்கிறார் அவர்.

 

'தயக்கம் இருக்கிறது'
 

டெல்லியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியரான *அழகேசன், 13 வயது மகனின் தந்தை. இன்னும் தன் மகனிடம் பாலியல் வன்புணர்வு போன்ற விஷயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்கிறார்.

 

"இம்மாதிரியான விஷயங்கள் நாட்டில் நடக்கின்றன எனச் சொல்வோம். அவனாகவே வந்து என்னிடம் கேட்கத் தயங்குவார்கள். உடை மாற்றுவது உள்ளிட்ட விஷயங்களில் இப்போதுதான் சில புரிதல்கள் வர ஆரம்பித்திருக்கிறது. அந்தரங்க உறுப்புகளில் சுகாதாரத்தைப் பேணுவது குறித்துச் சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் அவர்.

 

ஆனாலும், சில விஷயங்களைப் புரியவைக்க வேண்டும் என தான் நினைப்பதாகவும் ஆனாலும் தனக்கு தயக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

“நான் படித்தவனாக இருந்தாலும் தயக்கம் இருக்கவே செய்கிறது. நான் பேசுவதை எப்படி என் மகன் எடுத்துக்கொள்வான் என தோன்றுகிறது,” என்றார் அவர்.

 

'அதிகாரப் பிரயோகம் கூடாது'
 

சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகரான நந்தினி ராமன், குழந்தைகளுக்குக் கவுன்சிலிங் அளித்து வருகிறார். ஆண் குழந்தை வளர்ப்பில் முக்கியமானது 'மரியாதையை' கற்றுத்தருவதான் என அழுத்தமாகக் கூறுகிறார்.

 

"எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்களிடத்தில் எதையும் அன்பாகக் கூறவேண்டும். பாலியல் வன்புணர்வு ஒருவரின் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பது. அது பெரும்பாலும் ஆண் ஒருவர் பெண்ணின் மீது பிரயோகிப்பதாக உள்ளது. அதனால் யாருடனும் அதிகாரமாகவோ, வலுக்கட்டாயமாகவோ நடந்துகொள்ளக் கூடாது என்பதை, குறிப்பாக ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்கிறார் நந்தினி ராமன்.

 

ஆண் குழந்தைகள் தொடர்ந்து அதிகமாகக் கோபத்துடன் இருப்பது, தனிமைப்படுத்திக்கொள்ளுதல், தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, பதட்டம் ஆகிய அறிகுறிகள் இருந்தால், அவற்றை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, மனநல ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.

 

"எந்த விஷயத்தைச் செய்தாலும், எதிரில் இருப்பவர்களுக்கு முழு ஒப்புதல் இருக்கிறதா என்பதைச் சிறிய விஷயங்களிலும் குழந்தைகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்கிறார் அவர்.

 

எப்படி புரிய வைப்பது?
 

ஆண் குழந்தைகளிடம் வளரிளம் பருவ மாற்றங்கள், பாலியல் வன்புணர்வு விழிப்புணர்வு குறித்து எப்படிப் பேசுவது என, சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சில்வினா மேரி பிபிசி தமிழிடம் பேசினார்.

 

“ஆண் குழந்தைகளை வளர்ப்பது சிரமமான ஒன்றுதான். குடும்பத்தில் அம்மா, சகோதரிகள் உள்ளிட்ட பெண்களை எப்படி நடத்துகின்றனர் என்பதைத்தான் குழந்தைகள் உதாரணங்களாகக் கொள்வார்கள். பெண்கள் என்ன மாதிரியான வேலைகளைச் செய்கின்றனர் என்பதைப் பார்ப்பார்கள். வீட்டில் பெண்களுக்கு மரியாதை இல்லை, வீட்டிலுள்ள ஆண்கள், பெண்களைத் தாக்கினால், ‘வீட்டு வேலைகள் நமக்கான வேலைகள் அல்ல’, ‘பெண்களைத் தாக்குவது சரி’ என்ற எண்ணங்கள் ஆண்களுக்குத் தோன்றும். பெண்கள் நமக்கு சமமானவர்கள் என்ற புரிதல் இருக்காது,” என்று கூறுகிறார் அவர்.

 

ஆண் குழந்தைகளுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும் குறித்து பெற்றோர் புரியவைக்க வேண்டும் எனக்கூறும் அவர், 8-9 வயதை தாண்டும் போதே குழந்தைகளைத் தனியறையில் உறங்க வைக்க வேண்டும் என்று கூறுகிறார். “அப்போதுதான் அவர்களுக்குத் தங்களைக் குறித்த புரிதல் வரும். தனிமனிதர்களாக வருவார்கள். அவர்களுக்குப் புரியாத விஷயங்களை வெளியிலிருந்து பெற்றோர் வழிகாட்ட வேண்டும்,” என்கிறார் சில்வினா மேரி.

 

“எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அதை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தினமும் நடைமுறை உதாரணங்களிலிருந்து இதைப் பழக்க வேண்டும். பிடித்தது வேண்டும் என்றால் அதைக் கொடுத்துப் பழக்கக் கூடாது. அடுத்தவர் விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்