ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்கு பெறுவர் என நம்பிக்கை!
திங்கள், 16 நவம்பர் 2020 (15:45 IST)
அடுத்த வருடம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் பங்கு பெறுவர் எனத் தான் உறுதியாக நம்புவதாகச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளைக் காண வருவதற்கு முன் பார்வையாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதா என்பதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதிசெய்ய வலுவான முயற்சிகளை மேற்கொள்ளும் என தாமஸ் பேக் தெரிவித்துள்ளார்.
தற்போது தாமஸ் பேக் அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் கலந்தாலோசிக்க ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற வேண்டியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
"முடிந்தவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் அதன் காரணமாக அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்கள் இடம்பெறுவர் என்ற நம்பிக்கை வருகிறது," என ஜப்பான் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ் பேக் தெரிவித்தார்.
முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்க ஜப்பான் செல்கிறீர்களா என்று செய்தியாளர்கள் தாமஸ் பேக்கிடம் கேட்டபோது அவர் உறுதியாக `இல்லை` என பதிலளித்தார். அவருக்கு முன்னதாக ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோவிட் 19 இருந்தாலும் இல்லையென்றாலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என உறுதியாக தெரிவித்திருந்தார்.
அதேபோல ஜப்பானின் ஒலிம்பிக் பொறுப்பு அமைச்சர் ஹாஷிமோட்டோ, 2021ஆம் ஆண்டு சூழல் எப்படியிருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
அடுத்த வருடத்திற்குள் கோவிட் -19 தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையிலும், பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து 90சதவீதம் பேரை வைரஸ் தொற்றிலிருந்து காக்கும் என ஆரம்பக் கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கும் நிலையில்தான் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த செய்தி வந்துள்ளது.