சிறுநீரக தாரை தொற்று: 'கணவருக்கு இருந்தால் மனைவிக்கும் சிகிச்சை அவசியம்'
சனி, 3 டிசம்பர் 2022 (13:11 IST)
சிறுநீரக தாரை தொற்று ஏற்பட்ட ஒருவர் மூலமாக அவருடைய துணைவர் அல்லது துணைவிக்கு எளிதாக தொற்று பரவும் என்றும் ஒருவர் குணமடைய வேண்டுமெனில், இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாந்தி தெரிவிக்கிறார்.
சிறுநீரக தாரை தொற்றை ஆரம்பக்கட்டத்தில் கவனிக்காமலிருந்தால், அதன் அதிகபட்ச பாதிப்பாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் மருத்துவர் சாந்தி கூறுகிறார்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுவது, மிகவும் குறைவாக சிறுநீர் வெளியேறுவது ஆகியவை ஆரம்ப அறிகுறிகள் என்றும் ஒருசிலவேளைகளில், குளிர்ஜுரம், தலைவலி போன்றவைகூட அதன் காரணமாக ஏற்படும் என்கிறார்.
கர்ப்ப காலத்தில் ஏற்படுவது ஏன்?
ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகம் இந்த பிரச்னையை சந்திப்பதற்கான காரணங்களை விளக்கினார் மருத்துவர் சாந்தி.
''பெண்களின் உடல்கட்டமைப்பும் ஒரு காரணம். சிறுநீர் வெளியேறும் குழாய்க்கு அருகே பிறப்புறுப்பு துவாரம் இருக்கிறது. அதில்தான், மாதவிடாய் வெளியேறும், உடலுறவுக்கான வாயிலாகவும் அது அமைகிறது. அதோடு மலதுவாரமும் அருகில் இருக்கிறது. இதனால் தொற்று ஏற்பட்டால் பரவுவது மிகவும் எளிதாக இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நீளமான நாப்கின்தான் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். அது சிறுநீர்க்குழாய்,பிறப்புறுப்பு மற்றும் மலதுவாரம் என மூன்றிலும் படும் வகையில்தான் வைக்கப்படுகிறது என்பதால் தொற்று பரவுவது வெகு எளிது,''என்கிறார்.
மேலும், ''கர்ப்பகாலத்தில், கர்ப்பப்பை விரியும். சிறுநீர் பையை அது அழுத்தும்,அதனால், ஒருசில சமயம் சிறுநீர் கழித்தால்கூட, ஒரு சிறிய அளவு சிறுநீர் மீண்டும் சிறுநீர் பையில் தங்கியிருக்கும் என்பதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்,''என்கிறார்.
அடுத்ததாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது எப்படி என கேட்டபோது, தொற்று ஏற்பட்ட ஆண் அல்லது பெண்ணிடம் இருந்து உடலுறவின்போது அவரது துணைவருக்கு பரவுகிறது என்கிறார்.
''உடலுறவு கொள்வதற்கு முன்பும், பின்னரும் பிறப்புறுப்பை தண்ணீரால் கழுவவேண்டும். ஒருவருக்கு தொற்று இருந்தால், மற்றவருக்கு எளிதாக அந்த சமயத்தில் பரவிவிடும். அதனால், ஒருவருக்கு தொற்று இருந்தால், இருவரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொண்டு, இருவரும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைதான் நாங்கள் பரிந்துரை செய்கிறோம்,''என்கிறார் சாந்தி.
தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்தவில்லை என்றாலும்கூட சிறுநீரக தாரை தொற்று ஏற்படும் என்றும் ஒருநபர் குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது என்கிறார்.
''நம்மில் சிலர் வேலை காரணமாக இருந்தாலும், வீட்டில் ஓய்வில் இருந்தால் கூட, தண்ணீர் குடிப்பதைப் பெரிதும் மறந்துவிடுவது உண்டு. உடலின் தண்ணீர் தேவைக்கு ஏற்ப குடிக்காமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஆகியவை ஏற்படும்,''என்கிறார் அவர்.
என்ன பரிசோதனை?
சிறுநீரக தாரை தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது பற்றி பேசிய அவர், ''சிறுநீர் கழித்த பின்னர், சுத்தமாக கழுவுவது, உடலுறவுக்கு முன்பும், பின்பும் கழுவுவது, தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பதைப் பின்பற்றுவது, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கினை நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும். அறிகுறிகள் இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டால் உடனே யூரின் கல்ச்சர் என்ற பரிசோதனை செய்துகொள்வது அவசியம்,'' என்கிறார் மருத்துவர் சாந்தி.