யுக்ரேன் அகதிகள்: எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் எங்கு செல்லக்கூடும்?

வெள்ளி, 4 மார்ச் 2022 (08:57 IST)
யுக்ரேனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
 
ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) மதிப்பிட்டுள்ளது.
 
இந்த கூட்டமைப்பு அகதிகள் மீதான தனது விதிகளை தளர்த்தியுள்ளது மற்றும் தனது உறுப்பு நாடுகள் அகதிகளை "திறந்த கரங்களுடன்" வரவேற்பதாகவும் கூறியுள்ளது.
 
யுக்ரேனின் அகதிகள் எந்தெந்த நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்?
போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் மோல்தோவா போன்ற மேற்கில் உள்ள அண்டை நாடுகளுக்கு எல்லைகளைக் கடந்து மக்கள் செல்கின்றனர்.
போலந்து சில நாள்களுக்கு முன்பு வரை 2 லட்சத்து 80 ஆயிரம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஐநா கூறுகிறது. ஒவ்வொரு நாளும் மேலும் 50,000 பேர் வருவதாக போலந்து அரசு தெரிவிக்கிறது.
 
காயமடைந்த யுக்ரேனியர்களை அழைத்துச் செல்வதற்கு போலந்து, ஒரு மருத்துவ ரயிலையும் தயாரித்து வருகிறது. மேலும் அவர்களை அனுப்ப 1,230 மருத்துவமனைகளின் பட்டியலையும் தயாரித்துள்ளது.
 
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பாக 2014 ல், ரஷ்யா கிரைமியாவை தன்னுடன் இணைத்ததிலிருந்து, பத்து லட்சத்திற்கும் அதிகமான யுக்ரேனியர்கள் போலந்தில் குடியேறியுள்ளனர்.
 
மற்ற நாடுகளைப் பொருத்தவரை, ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான ஐ.நா வெளியிட்ட நிலவரம்.
• ஹங்கேரி 71,158
 
• ருமேனியா 43,184
 
• மோல்தோவா 41,525
 
• ஸ்லோவாக்கியா 17,648
 
இப்போது ஒரு நாளைக்கு 10,000 அகதிகளை தான் ஏற்றுக்கொள்வதாக ஸ்லோவாக்கியா கூறுகிறது.
 
அகதிகள் அண்டை நாடுகளுக்குச் செல்வதற்கு ஆவணங்கள் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயணக் கடவுச்சீட்டுகள், அவர்களுடன் பயணிக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களை அவர்கள் கைவசம் வைத்திருப்பது நல்லது.
 
அகதி என்று அழைக்கப்பட, அவர்கள் யுக்ரேனிய குடிமக்களாக இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு மாணவர்கள் போல யுக்ரேனில் சட்டப்பூர்வமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
 
ஆயினும் சில எல்லைச்சாவடிகளில் பலர் சுமார் 15 கிமீ நீளமான வரிசைகளில் பல நாட்களாகக் காத்திருக்கின்றனர். மேலும் பலரால் யுக்ரேனிய நகரங்களுக்கு வெளியே செல்லும் ரயில்களில் ஏற முடியவில்லை.
 
நாடுகள் என்ன உதவி செய்கின்றன?
 
யுக்ரேனின் எல்லையில் உள்ள போலந்து மற்றும் பிற நாடுகளில், தங்குவதற்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லாவிட்டால், அகதிகள் வரவேற்பு மையங்களில் தங்கலாம். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
ஹங்கேரி மற்றும் ருமேனியாவில், அகதிகளுக்கு உணவு மற்றும் உடைக்கான பண உதவித்தொகை வழங்கப்படுகிறது. உள்ளூர் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இடம் வழங்கப்படுகிறது.
 
அகதிகள் வரவேற்பு மையங்களில் எவ்வளவு காலம் செலவிடலாம் என்பதற்கான கால வரம்புகளை நாடுகள் வைத்திருந்தன. ஆனால் பெரும்பாலான நாடுகள் அவற்றை தள்ளுபடி செய்யக்கூடும் என்றும் யுக்ரேனியர்கள் தேவைப்படும் காலம் வரை அவற்றில் தங்கலாம் என்றும் கூறுப்படுகிறது.
 
இடம்பெயர்வு அலையை சமாளிக்க செக் குடியரசு, தயார்நிலை திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அகதிகள் தேவைப்பட்டால் தங்குவதற்கு, எளிய நடைமுறை மூலம் சிறப்பு வகை விசாவிற்கு விண்ணப்பிக்க இந்தத் திட்டம் உதவும்.
 
அகதிகளுக்காக பிரிட்டன் என்ன செய்கிறது?
யுக்ரேனியர்களுக்கு பிரிட்டன் குடிமக்கள் உறவினர்களாக இருந்தால், அவர்கள் பிரிட்டன் வரலாம் என அந்த நாடு தெரிவித்துள்ளது. கீயவில் உள்ள செயலாக்க மையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு நகரமான 'லிவிவ்' இல் உள்ள அலுவலகம் செயல்படுகிறது. மேலும் அருகிலுள்ள நாடுகளில் இருந்தும் மக்கள் விண்ணப்பிக்கலாம்.
 
பிரிட்டிஷ் விசாவைப் பெறக்கூடிய குடும்ப உறுப்பினர்கள்:
 
• மனைவி அல்லது சிவில் கூட்டாளி.
 
• குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் உடனிருக்கும் திருமணமாகாத கூட்டாளி.
 
• 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
 
• பேரக்குழந்தை 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் பெற்றோரில் ஒருவர்
 
• பராமரிப்பாளர்களாக இருக்கும் வயது வந்த உறவினர்கள்.
 
எத்தனை யுக்ரேனியர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்?
 
யுக்ரேனில் இப்போது குறைந்தபட்சம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர், போர் காரணமாக தங்கள் சொந்த நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளதது.
 
இந்த எண்ணிக்கை 70 லட்சமாக உயரக்கூடும் என்றும் 1 கோடியே 80 லட்சம் யுக்ரேனியர்கள் போரால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.
 
"இவை மிகவும் தோராயமான மதிப்பீடுகள் என்றாலும், எண்ணிக்கை மிகப்பெரியவை. மேலும் வரலாற்று எண்ணிக்கையில் இருக்கும் இந்த வகையான அவசரநிலைக்கு நாம் தயாராக வேண்டும்."என்று மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி மேலாண்மைக்கான ஐரோப்பிய ஆணையர், ஜேனஸ் லெனார்சிக் கூறினார்,
 
Caption- ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்கள் இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு மையங்களில் வாழ்கின்றனர்
 
அகதிகளுக்கு என்ன உரிமைகள் உள்ளன?
போரிலிருந்து வெளியேறும் யுக்ரேனியர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தனது 27 உறுப்பு நாடுகளில் தங்கி பணியாற்றுவதற்கான உரிமையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் சமூக நலன், வீட்டு வசதி, மருத்துவ சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பு ஆகியவற்றையும் பெறுவார்கள்.
 
1990 களில் பால்கனில் நடந்த போருக்குப் பிறகு வரையப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு அறிவிக்கைக்கு இணங்க இது அமைந்துள்ளது. ஆனால் இது வரை அது பயன்படுத்தப்படவில்லை.
 
யுக்ரேனியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தாங்கள் விரும்பும் இடத்தில் குடியேறுவதற்கு வசதியாக, அகதிகளுக்கான வழக்கமான விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
 
உங்கள் கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?
 
தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணைய தளத்தில் வெளியிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்