விமான நிலையங்கள் தனியார்மயம்: லாபத்தில் பங்கு கேட்கும் தமிழ்நாடு அரசு

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:39 IST)
'விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்கும்போது மாநிலத்துக்கும் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

'தனியாருக்குக் கிடைக்கும் லாபத்தில் இருந்து பாதிக்குப் பாதி மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். இது மாநில அரசின் உரிமை. மத்திய அரசுக்கு தனியாக நிலமோ, நாடோ இல்லை' என்கிறார், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
 
25 விமான நிலையங்கள்
மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையேயோன உரசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே செல்கிறது. இந்நிலையில், 'தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் வருவாயில் மாநில அரசுக்குப் பங்கும் நிலத்துக்கு ஈடாக லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
 
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய தொழிற் கொள்கையில், 'விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் கொள்கைகளை விமான நிலையங்களின் ஆணையமான ஏஏஐ (AAI) தீவிரமாகக் கடைபிடித்து வருகிறது.
 
இதற்கான ஒட்டுமொத்த திட்ட மதிப்பீட்டில் நிலத்தில் விலை என்பது பெரும் பங்காக உள்ளது. மாநில அரசின் நிலங்களை விமான நிலையங்களின் ஆணையம் கையகப்படுத்தி மாற்றுகின்றபோது இந்தச் சொத்துகள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றும்போது அதன்மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் லக்னெள, குவாஹாட்டி, ஆமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகியவற்றை தனியார்மயமாக்கும் வகையில் அதானி குழுமத்துக்கு மத்திய அரசு குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.
 
மேலும், ஏஏஐயால் நடத்தப்பட்டு வரும் 25 விமான நிலையங்களை 2025 ஆம் ஆண்டுக்குள் தனியார்மயமாக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கோழிக்கோடு, விஜயவாடா, திருப்பதி, வாரணாசி, புவனேஸ்வர், அமிர்தசரஸ், ராஞ்சி, சூரத் உள்பட 25 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
4 கேள்விகள்
''மாநில அரசின் புதிய தொழிற்கொள்கையை எப்படி எடுத்துக் கொள்வது?'' என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
 
''மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மாநில அரசின் உதவியுடன்தான் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்கின்றனர். நிலம் என்பது மாநில அரசுக்குச் சொந்தமானது. அதற்காக இழப்பீடு கொடுக்கப்பட்டாலும் மாநில அரசின் உதவி என்பது முக்கியமானது.

இதனை பொதுநோக்கத்துக்காக பயன்படுத்துவதால்தான் மாநில அரசு உதவி செய்கிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியாருக்கு விற்கும்போது அந்த நோக்கம் மாறுபடுகிறது. அதனை சட்டரீதியாக தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் என்பது மாநில அரசிடம் இல்லை.
 
உதாரணமாக, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்காக பல கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள். இதே சுரங்கத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நிலங்களைக் கையகப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம் போட்டு, மக்கள் நலன் என முடிவெடுத்து செயல்படுத்துகின்றனர்.
 
இதில், தனியார்கள் லாபம் அடையும்போது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களால் முடியாது. நிலத்தைக் கொடுத்துவிட்டால் மாநில அரசின் அதிகாரமும் முடிந்துவிடும். அப்படியானால், அதைத் தடுப்பதற்கு குறைந்தபட்ச பலன்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியான நடவடிக்கைதான். அந்தப் பணத்தை மாநில அரசின் திட்டங்களுக்குச் செலவழிக்க முடியும்'' என்கிறார்.
 
முன்னுதாரணம் என்ன?
''இதற்கு முன்னுதாரணம் உள்ளதா?'' என்றோம். '' 2011 ஆம் ஆண்டு என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மாநில அரசே பங்குகளை வாங்க வேண்டும் என வி.சி.க வலியுறுத்தியது.

அப்போதிருந்த அ.தி.மு.க அரசு, அந்தப் பங்குகளை வாங்கியது. அந்த வகையில் நெய்வேலி நிறுவனத்தில் மாநில அரசின் பங்கு என 5 சதவீதம் வந்துவிடுகிறது. அதன்பிறகு தனியார்மயத்துக்குள் மத்திய அரசு செல்லவில்லை. தற்போது தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கையின் மூலம் தங்கள் இஷ்டத்துக்கு நிலங்களை விற்பதற்கு ஓரளவுக்கு தடை போடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 
எனவே, மாநில அரசின் முடிவு என்பது சரியானது. பொதுத்துறை பங்குகளை தொடர்ந்து தனியார்மயமாக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை தனியார்மயமாக்குவதில்லை.

தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்கின்றனர். அதைத் தடுக்கும் வழியில் முதல் முன்னுரிமை அடிப்படையில் மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். அரசிடம் இருந்தால் அது மக்கள் கைகளில் இருக்கிறது என்றுதான் பொருள். தமிழ்நாட்டுக்குள் தனியார்மயம் செய்கிறார்கள் என்றால் அதை மாநில அரசே வாங்க வேண்டும்'' என்கிறார்.
 
கேரள அரசின் எதிர்ப்பு
''திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு முயற்சித்தபோது அந்த ஏலத்தில் பங்கேற்ற கேரள அரசுக்கு உரிமம் கிடைக்கவில்லை. பிரதமருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதினாரே?'' என்றோம்.
 
'' ஆமாம். ஆனால் முதல் முன்னுரிமை என்பது மாநில அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்களால் முடியாது என்றால் தனியாருக்குக் கொடுக்கலாம். உள்கட்டமைப்பின் மூலம் மாநில அரசுக்கு லாபம் வரும் என்றால் தனியாருக்கு ஏன் விற்க வேண்டும்? மாநிலத்துக்கு லாபம் வரும் என்றால் மத்திய அரசுக்கு எவ்வளவு லாபம் வந்திருக்கும்? இது அவர்களுக்கே முரண்பாடாக இலலையா? லாபத்தில் பங்கு கேட்பது என்பது மாநில அரசின் உரிமை. மத்திய அரசுக்கு தனியாக நிலமோ, நாடோ உள்ளதோ? மாநில அரசின் ஆட்சியாளர்கள் மீதுதான் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர். தனியாருக்குக் கிடைக்கும் லாபத்தில் இருந்து பாதிக்குப் பாதி மாநில அரசுக்கு லாபம் கொடுக்க வேண்டும்'' என்கிறார்.
 
''தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளதா?'' என்றோம். '' இதனை நிறைவேற்ற விடமாட்டார்கள். நமக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனை ஏமாற்றும் வகையில் செஸ், சர் சார்ஜ் என்ற பெயரில் வரியாக வாங்குகின்றனர். விமான நிலைய விவகாரத்தைப் பொறுத்தவரையில் பிற மாநிலங்களிலும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி விவாதமாக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்'' என்கிறார்.
 
தேசிய நில மேலாண்மைக் குழு எதற்காக?
''அண்மையில் தேசிய நில மேலாண்மைக் குழு (national land management committee) என்ற ஒன்றை மத்திய அமைச்சரவை ஏற்படுத்தியுள்ளது. இதன் வேலை என்னவென்றால், மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை மானிடைஸ் செய்வதுதான். மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மாநில அரசுதான் நிலம் கொடுக்கிறது. அந்தவகையில், மாநில அரசுக்கு நிச்சயமாக பங்கைக் கொடுக்க வேண்டும்.
 
உதாரணமாக, சென்னைத் துறைமுகம் என்பது மத்திய அரசுக்குச் சொந்தமானது. ஆனால், அதற்கான நிலத்தை மாநில அரசு கொடுத்தது. இதற்காக தமிழ்நாடு தொழில் மையத்துக்கு (DIC) லாபத்தில் பங்கு கொடுக்கின்றனர். விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் விகிதாச்சார அடிப்படையில் மாநில அரசு கேட்பது என்பது நியாயமானது'' என்கிறார், சி.ஐ.டி.யு அமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரான நரேந்திரன்.
 
பா.ஜ.க சொல்வது என்ன?
மாநில அரசின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, '' உள்கட்டமைப்பு வளர்ச்சியடையும்போது அதன்மூலம் வரக்கூடிய வருமானம் என்பது மாநில அரசுக்குத்தான் செல்கிறது. விமான நிலைய கட்டமைப்புகளை தனியார்கள் மேற்கொள்கின்றனர். அரசாங்கங்களால் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வகிக்க முடியவில்லை. காரணம், அதற்கான அமைப்பு நம்மிடம் இல்லை. தனியாரிடம் செல்லும்போது விரைவாகவும் எளிதாகவும் வேலை முடியும்'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், '' தனியார் என்றாலே கார்ப்பரேட் நிறுவனங்களாக ஏன் பார்க்க வேண்டும்? அரசாங்கத்திடம் முதலீடு இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறவர்களிடம் லாபம் கேட்க முடியாது. அப்படிப் பார்த்தால் மாநில அரசே முன்வந்து பல்லாயிரம் கோடிகளை செலவழித்து விமான நிலையங்களை கட்டட்டுமே? விமான நிலையத்தை நிறுவி நிர்வகிப்பது என்பது வியாபாரம். இதில் பங்கு என்பது எங்கிருந்து வருகிறது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
 
மேலும், '' தனியார் லாபம் சம்பாதிப்பார்கள் என்ற அச்சம் இருந்தால் மாநில அரசின் நிதியில் இருந்து இவர்கள் உருவாக்கட்டும். கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தொழில்வளம் பெருகி வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநில அரசின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்