டாஸ்மாக் மூலம் வெள்ளை பணமாக மாறிய ரூ. 64 கோடி கருப்புப் பணம் - ஆர்டிஐ தகவல்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:20 IST)
தமிழகத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலில் இரு்நத காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ. 64 கோடி ரூபாய்க்கும் மேலான கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் மோதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். அதன்படி, பிரதமர் உரையாற்றிய அன்று நள்ளிரவில் இருந்தே ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாத நிலை ஏற்பட்டது. என அறிவித்தார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்துள்ளவர்கள் உடனே வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனால் தங்கள் பணத்தை எடுக்கவும், மாற்றவும் பலர் வங்களில் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர்.

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

ஆனால் அந்த நடவடிக்கையால் தற்போதுவரை எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை அரசு வெளியிடவில்லை.

2016 ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநில வாணிக கழகம்(டாஸ்மாக்) மாநிலத்தில் உள்ள அனைத்து முதுநிலை மண்டல இயக்குநர்கள், மாவட்ட மேலாளர்கள், மற்றும் டிப்போ மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், "மத்திய அரசின் கொள்கை முடிவின்படி 8-11-2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில் 500,1000 ரூ செல்லாது என அறிவித்துள்ளது. எனவே 10-11-2016 அன்றுக்குள் சில்லறை வணிகம் மூலம் பெறப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி விட வேண்டும். மேலும் இதற்கு மேல் 500,1000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது," என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையினை மீறி தமிழகத்தில் ஈரோடு, தேனி, திருச்சி, தூத்துக்குடி, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் 10-11-2016 முதல் டிசம்பர் 31 வரை டாஸ்மாக் சில்லறை வணிகத்தின் மூலமாக 64 கோடி ரூபாய், 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளாக வாங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது.

சென்னையை சேர்ந்த ஆர்டிஐ செயல்பாட்டாளர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு பல கட்ட அலைகழிப்பிற்கு பின்னர் தமிழ்நாடு வணிக கழகம் அனுப்பிய பதிலில் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

"அரசின் உத்தரவையும் மீறி டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக பல நூறு கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி இருக்கிறார்கள்," என்கிறார் காசிமாயன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த பணம் அனைத்தும் அரசியல் வாதிகள் மற்றும் பெரும் வணிகர்களின் கருப்பு பணம் - பண மதிப்பிழப்பு கால கட்டங்களில் கமிஷன் அடிப்படையில் இந்த பணத்தை சிலர் வாங்கி டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு வெள்ளை பணமாக மாற்றி உள்ளனர்.

பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு 500,1000 ரூ நோட்டுகளை வாங்க கூடாது என அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட பிறகும், அதனையும் மீறி டிசம்பர் 31 வரை 500,1000 ரூ நோட்டுகளை வாங்கிய டாஸ்மாக் சில்லறை விற்பனை ஊழியர்கள், மற்றும் அதனை கண்கானிக்கும் மாவட்ட விற்பனை அலுவலர்கள், மற்றும் அவர்களை கண்கானிக்கும் மண்டல முதுநிலை மேலாளர்கள் என அனைவரும் மீதும் குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்னும் 13 மாவட்டங்களில் வணிக ரகசியம் என பதில் கூற மறுத்து விட்டார்கள். 25 மாவட்டங்களில் மட்டும் 64 கோடி கருப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது," என்றார்.

'கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான்'

பண மதிப்பிழப்பு காலத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான் என்கிறார் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.திருசெல்வன்.

இதுகுறித்து இவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிகாரிகள் 500 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவிப்பு எதுவும் முறையாக கொடுக்கவில்லை. அரசு கடை தானே என வாடிக்கையாளர்கள் பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க சொல்லி தகராறில் ஈடுபட்டார்கள். இதனால் வேறு வழியின்றி ஒரு சில கடைக்காரர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கினார்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் அதிகாரிகளின் துணையோடு டாஸ்மாக் வழியே சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கமிஷன் கொடுத்து கருப்பு பணத்தை மாற்றினார்கள். அன்றைய வருமானத்தை வங்கியில் செலுத்தும் பொழுது மொத்த தொகையும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாயாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அப்போதே நாங்கள் புகார் அளித்தோம். புகாரின் அடிப்படையில் மேல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள் அதில் ஊழல் நடைபெற்று இருப்பதை உறுதி செய்தார்கள். அப்போதே ஊழல் செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யவில்லை," என்றார்.

இதன் வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இதுகுறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்க முடியாது என பிபிசி தமிழிடம் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டபோது, "அரசியல்வாதிகளின் தலையீடு எதுவுமே கிடையாது வேண்டுமென்றால் இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம்" என்றார்.

"இந்த புகார் தொடர்பாக ஏற்கெனவே துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவலை அப்போது இருந்த துறை சார்ந்த அதிகாரிகள் தான் வழங்க வேண்டும். அதிகாரிகளிடம் இந்த புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகளின் தலையீடு எதுவுமே கிடையாது. வேண்டுமென்றால் இது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம். தவறு செய்திருந்தால் தற்போதைய அரசு தவறிழைத்தவர்களை விட்டு விடுமா?" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்