"இதுவே பாலத்தீனியர்களுக்கு கடைசி வாய்ப்பு" - ட்ரம்ப்; "சதித்திட்டம் இது" - பாலத்தீனம்

புதன், 29 ஜனவரி 2020 (13:19 IST)
பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
 
இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம்.
 
அமெரிக்கா அறிவித்துள்ள திட்டத்தின்படி ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக இருக்கும்.
 
பாலத்தீன சுதந்திர அரசை முன்மொழிந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையாண்மையையும் அங்கீகரித்துள்ளார்.
 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதி திட்டத்தை வெள்ளை மாளிகையில் அறிவித்த டிரம்ப், "இதுதான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு" என்றும் கூறினார்.
 
பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "இது சதித்திட்டம்" என்று கூறி அமெரிக்காவின் முன்மொழிவினை புறக்கணித்துள்ளார்.
 
ஜெருசலேம் பற்றிய இந்த 6 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?
எங்களது உரிமை விற்பனைக்கு அல்ல
 
மஹ்மூத் அப்பாஸ், "நான் டிரம்பிற்கும், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும் ஒன்றை சொல்ல விழைகிறேன். ஜெருசலேம் விற்பனைக்கு அல்ல, எங்கள் உரிமைகளைப் பேரம் பேச முடியாது. அவை விற்பனைக்கு அல்ல. உங்களது சதித்திட்டம் வெல்லாது," எனக் கூறி உள்ளார்.
 
சர்வதேச அளவில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான செயல்திட்டமானது டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷனரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டது.
 
ஒரு பக்கம் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இஸ்ரேல் ராணுவம் மேற்கு கரையில் தமது படைகளை மீண்டும் நிறுத்தியது. இதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காசாவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
 
மேற்கு கரையில் 4 லட்சம் இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. சர்வதேச சட்டத்தின்படி அவை சட்டவிரோதமானது. ஆனால், இஸ்ரேல் இதில் முரண்படுகிறது.
 
திட்டத்தின் முக்கிய முன் வரைவுகள் என்னென்ன?
எந்த பாலத்தீனரும், இஸ்ரேலியரும் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட மாட்டார்கள். அதாவது, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை.
 
இஸ்ரேலின் பகுதியாக டிரம்ப் கூறும் திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தின் மீது இஸ்ரேலுக்கு உள்ள இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்திய ரீதியிலான சமரசங்களைக் காட்டுவதாக டிரம்ப் தெரிவிக்கும் ஒரு கருத்துரு வரைபடமும் இந்த திட்டத்தில் உள்ளடங்கும்.
 
பாலத்தீன தரப்புக்குக் கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு தலைநகரை இந்த வரைபடம் அளிக்கிறது. இங்கு அமெரிக்கா தங்களின் தூதரகத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்த பிராந்தியத்தில் 15 சதவீதத்துக்கு மேலாக பாலத்தீனர்களுக்கு கட்டுப்பாடு கிடைப்பதாக தெரிவித்துள்ள பாலத்தீன விடுதலை அமைப்பான பிஎல்ஓ, இதனை ''வரலாற்று சிறப்பு வாய்ந்த பாலத்தீனம்'' என்று கூறுகிறது.
 
ஜெருசேலம் ''பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்''. இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலத்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்