2016ஆம் வருடம். டிசம்பர் நான்காம் தேதி. ஞாயிற்றுக் கிழமை. அன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பொன்னையன், தொலைக்காட்சிகளிடம் பேசினார்.
"ஜெயலலிதா நன்கு பேசுமளவுக்கும் தானாகவே உணவருந்தும் அளவுக்கும் குணமடைந்திருக்கிறார். அதிகாரிகளுக்கு ஆட்சி தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும் அரசியல்ரீதியான முடிவுகளை எடுப்பதிலும் முதல்வர் தற்போது ஈடுபட்டுவருகிறார். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை நேற்று வந்து பரிசோதித்தனர். அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதை அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுவரும் உடற்பயிற்சி முடிந்தவுடன் அவர் வீடுதிரும்புவார்." என்று பொன்னையன் கூறியது அனைத்து தொலைக்காட்சிகளிலும் பிற்பகலில் இருந்து திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு பெரும் எண்ணிக்கையில் செய்தியாளர்கள் குவிந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்ததது. பிறகு, முக்கியமான தலைவர்கள் வரும்போது மட்டும் செய்தியாளர்கள் அங்கு கூடினர்.
இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் மீண்டும் அப்பல்லோவில் ஊடகத்துறையினர் குவிய ஆரம்பித்தனர். ஆனால், அப்பலோ மருத்துவமனையில் இருந்து தகவல் ஏதும் இல்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தொலைக்காட்சிகளில் பொன்னையன் காலையில் அளித்த பேட்டி திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க மாலை எட்டு மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை முன்பாக மீண்டும் ஊடகங்கள் குவிந்துவிட்டன. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்று மட்டும் செய்திகள் கசிந்தன. யாரும் எதையும் உறுதிப்படுத்தவில்லை.
மருத்துவமனை நுழைவிடத்திற்கு முன்பாக சிறிது சிறிதாக அ.தி.மு.க. தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். இரவு 9.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது.
"க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலையில் திடீரென இதயத் துடிப்பு முடக்கம் (Cardiac arrest) ஏற்பட்டது. அவருக்கு அவசரகால சிகிச்சை நிபுணர்கள், இருதய நோய் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள் சிகிச்சையளித்துவருகின்றனர்" என்று மட்டும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் ஊடகங்களும் தொண்டர்களும் அப்பல்லோ மருத்துவனையின் முன்பாகவும் க்ரீம்ஸ் சாலையிலும் குவிய ஆரம்பித்தனர். காவல்துறையின் பாதுகாப்பு அதிகரித்தது.
மருத்துவமனையில் இருந்து புதிதாக தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், பல்வேறு வதந்திகள் வலம்வந்தன. நள்ளிரவைத் தாண்டியதும் மழைபெய்ய ஆரம்பிக்க, ஒதுங்க இடமின்றி நிறுத்தப்பட்ட கார்களிலும் நேரலை வாகனங்களிலும் ஊடகத்தினர் தஞ்சம் புகுந்தனர்.
ஐந்தாம் தேதி அதிகாலையில் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் முதலமைச்சருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நலம் தொடர்ந்து கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டது.
அதிகாலையில், ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நலம் தேறிவருவதாகவும் சில தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அந்தச் செய்தி உண்மையானதல்ல என்பது சீக்கிரத்திலேயே தெரியவந்தது.
ஐந்தாம் தேதி காலையிலும் மதியத்திலும் மருத்துவமனை தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. இருந்தபோதிலும் மருத்துவமனையைச் சேர்ந்த சிலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாகத் தெரிவித்துவந்தனர். லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீல் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிய செய்தியில், முதல்வரின் உடல்நிலையைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காலை 11 மணிக்குப் பிறகு சென்னை நகரம் வெறிச்சோடிப் போய் காட்சியளித்தது. நகரப் பேருந்துகள் மட்டுமே சாலைகளில் காணப்பட்டன. அண்ணாசாலை போன்ற நகரின் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் அனைத்தும் படிப்படியாக அடைக்கப்பட ஆரம்பித்தன. நான்கு மணியளவில் வாகனப் போக்குவரத்து குறைந்து, கடைகளும் முழுமையாக மூடப்பட எல்லோரும் ஒரு துக்கரமான செய்தியை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.
மாலை ஐந்து மணியளவில் திடீரென ஒரு தனியார் தொலைக்காட்சி முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்ததாக அறிவித்தது. இதையடுத்து, க்ரீம்ஸ் சாலையில் கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஓலமிட்டு அழ ஆரம்பித்தனர். தடுப்புகளைத் தாண்டி அப்பல்லோ மருத்துவமனை அமைந்திருக்கும் சாலைக்குள் புகுவதற்கும் முயற்சி செய்தனர். காவல்துறை அவர்களைக் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டிருந்தது.
ஆனால், சிறிது நேரத்திலேயே அப்போலோ மருத்துவமனை மீண்டும் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் பிழைத்திருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் அவரது உயிரைக் காப்பாற்ற போராடிவருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
முதலமைச்சர் இறந்துவிட்டதாக தனியார் தொலைக்காட்சியின் வெளியிட்ட செய்தி தவறானது என்றும் அவர்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது. இந்த அறிக்கை மாலை ஆறு மணிக்கு வெளியானது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அனைத்து அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையில் அந்த நேரத்தில் இருந்தனர். சிறிது நேரத்தில் திவாகரன் அங்கு வந்து சேர்ந்தார். இதற்குப் பிறகு, எல்லாத் தரப்பிலும் பெரும் மௌனமே நிலவியது.
இரவு பத்து மணிக்குப் பிறகு, எல்லோருக்கும் அந்த மோசமான செய்தியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை என்ற சூழல். ஊடகத்தினர் எல்லோரும் அப்பல்லோ மருத்துவமனைக்குள்ளிருந்து வரும் அந்த செய்தியறிக்கைக்காவே காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருப்பவர்களை ஒழுங்குபடுத்தும்நோக்கில் மருத்துவமனை வாசலுக்கு இருபுறமும் கயிறுகள் கட்டப்பட்டன. என்ன நடந்திருக்கக்கூடும் என்பது எல்லோருக்கும் தெரிந்துபோனது.
நேரம் சரியாக 11.45. அந்தச் செய்தியறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை. "செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவுடன் அனுமதிக்கப்பட்ட முதல்வர், உடல்நலம் தேறிவந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி மாலையில் திடீரென அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது. சர்வதேச அளவில் தற்போது கிடைக்கக்கூடிய ஒரே சிகிச்சை அதுதான். இருந்தபோதும் இன்று 11.30 மணியளவில் முதலமைச்சர் காலமானார்." என்றது அறிக்கை.
செய்தியாளர்கள் உடனடியாக அந்தச் செய்தியை தங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதில் பரபரப்பானார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் தொண்டர்களின் கூட்டம் அப்பல்லோ மருத்துமனைக்கு முன்பாக குறைவாகவே இருந்தது.
சிறிது நேரத்தில் சென்னை மாநகராட்சியின் வாகனம் மருத்துவமனைக்குள் நுழைந்தது.
இதற்கு சிறிது நேரம் கழித்து சசிகலா காரில் வெளியேறினார். அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் மொத்தமாக தங்களது கார்களில் அப்பல்லோவிலிருந்து வெளியேறினர்.
உடனடியாக ஓ. பன்னீர்செல்வம் புதிய முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டதாகவும் அவருக்கு அப்போதைய ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆறாம் தேதி அதிகாலை 1 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததாகவும் ஆளுனர் மாளிகை செய்திக் குறிப்பை வெளியிட்டது.
சுமார் இரண்டு மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை ஏற்றிய ஆம்புலன்ஸ் வாகனம் அப்பல்லோவிலிருந்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தை நோக்கிப் புறப்பட்டது.
போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் உடல் நுழைந்தபோது, தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு இல்லை. காலை 5 மணி வரையிலும் அவரது உடல் அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலும் சுமார் 100 தொண்டர்களே அங்கு கூடியிருந்தனர்.
பிறகு, அவரது உடல் எல்லோரும் பார்க்கும்வகையிலான குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் வழக்கமாக தலைமைச் செயலகத்திற்குச் செல்லும்பாதையில், முழு அரச மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டது.
ஆனால், அவரது இறுதிச் சடங்குகள் டிசம்பர் ஆறாம் தேதி மாலை 4.30 மணியளவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், வெளியூர்களில் வசிக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னைக்கு வருவதற்கு பெரிய அளவில் கால அவகாசம் கிடைக்கவில்லையென்றுதான் சொல்லவேண்டும். தவிர, தனியார் தொலைக்காட்சிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளை போட்டிபோட்டி ஒளிபரப்பிவந்தன.
பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற பிறகு, மாலை 4.30 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் வாலஜா சாலை வழியாக சென்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தை வந்தடைந்தது.
ஜெயலலிதா இந்துவாக இருந்தாலும்கூட, அவரது உடல் தகனம் செய்யப்படாமல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான இடம் தோண்டப்பட்டிருந்தது.
மறைந்த முதலமைச்சரின் நீண்ட காலத் தோழியான சசிகலா இறுதிச் சடங்குகளைச் செய்ய, அவரது உடல் குழிக்குள் இறக்கப்பட்டு, மூடப்பட்டது. மாலை 7 மணிக்குள்ளாக அனைத்து நிகழ்வுகளும் முடிவடைந்தன.
ஜெயலலிதா 70 நாட்களாக சிகிச்சைபெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை, அவரது போயஸ் தோட்ட இல்லம், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் ஆகியவை வெறிச்சோடிப்போய் காணப்பட, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம்கூட்டமாக வர ஆரம்பித்தார்கள்.
டிசம்பர் 4ஆம் தேதி முதல் தூக்கமின்றி, செய்திகளைத் தந்த செய்தியாளர்களும் காவல்துறையினரும் உறக்கம் தோய்ந்த விழிகளோடு வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.