அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தேக்கத்தை போக்க முயலும் அமெரிக்கா, இரான்
செவ்வாய், 30 நவம்பர் 2021 (16:17 IST)
இரான் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தை முறியாமல் காப்பாற்றுவதற்கான பேச்சுவார்ர்தை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வியன்னாவில் தொடங்குகிறது.
ஈரான் மீதானப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அந்நாட்டின் அணுசக்திச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் 2015 உடன்படிக்கைக்கு அமெரிக்கா திரும்பும் சாத்தியங்களை அதிகாரிகள் ஆலோசிப்பார்கள்.
பொருளாதாரத் தடைகள் நீங்குமா?
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து, இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, இரான் ஒப்பந்தத்தின் முக்கியக் கூறுகளை மீறியது.
இரான் இந்த மீறல்களைச் சரிசெய்தால், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொருளாதாரத் தடைகளை நீக்க விரும்புகிறார். ஆனால் அமெரிக்கா முதல் அடியை வைக்க வேண்டுமென ஈரான் விரும்புகிறது.
அணு ஆயுதம் தயாரிப்பதற்கான செயல்பாடுகளா?
அணு ஆயுதம் தயாரிக்க வழிசெய்யும் வகையில், யுரேனியத்தை செறிவூட்டும் திட்டத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை ஈரான் அடைந்திருப்பதால், நேரம் அதிகமில்லை என மேற்கத்திய அரசியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றர்.
ஈரானோ, தனது அணுசக்தி திட்டம் முழுதும் அமைதி சார்ந்தது என்று கூறுகிறது.
உடன்பாடு எந்நிலையில் உள்ளது?
விரிவான கூட்டுச் செயல்திட்டம் (Joint Comprehensive Plan of Action - JCPOA) என்று இன்னும் அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் கூட்டணியின் ஐந்து நாடுகளான சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றுடன் இரானின் பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியத் தலைநகரில் ஏப்ரல் மாதம் துவங்கின, இதில் அமெரிக்கப் பிரதிநிதிகள் மறைமுகமாகப் பங்கேற்றனர்.
என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அது எப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதன் மீது வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையிலான உடன்பாடு ஜூன் மாதம் நடந்த இரான் அதிபர் தேர்தலுக்கு முன்பே "பெரிதளவு முழுமையடைந்துவிட்டதாக" ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்திருக்கிறார்.
ஈரானின் நிலைப்பாடு என்ன?
அதிபர் தேர்தலில், மேற்குலகின் கடும் விமர்சகரான எப்ராஹிம் ரயீசி, JCPOAவுக்கும் பராக் ஒபாமா அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நிகழ்த்திய மிதவாதியான ஹசன் ரூஹானியைத் தோற்கடித்தார்.
ஆகஸ்ட் மாதம் பதவியேற்கும் முன், தாம் பேச்சுவார்த்தைகளை மேலும் இழுக்க விரும்பவில்லை என்று ரைசி உறுதியளித்தார், ஆனால் இம்மாதத் துவக்கம் வரை அவர் வியென்னா பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பச் சம்மதிக்கவில்லை. ஈரான் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்பவர்கள் அதன் நலன்களைப் பாதுகாப்பதிலிருந்து "எவ்வகையிலும்" பின்வாங்க மாட்டனர் என்று அவர் வலியுறுத்தி வந்திருக்கிறார்.
அமெரிக்கா "தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்"; உடனடியாக அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும்; எதிர்காலத்தில் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் ஒருதலைபட்சமாக ஒப்பந்தத்தைக் கைவிடக்கூடாது - என்பகோருகிறது ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம்.
அமெரிக்கா என்ன சொல்கிறது?
பைடனின் ஈரான் சிறப்புத் தூதுவரான ராபர்ட் மால்லே, இரான் ஒப்பந்தத்திற்குள் திரும்பி வருவதற்காக அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார், இரானின் பொருளாதாரத்தை முடக்கிய டிரம்ப் அரசின் பொருளாதாரத் தடைகளை நீக்குவது உட்பட. ஆனால் "பேச்சுவார்த்தைக்கான சாளரங்கள் எப்போதும் திறந்தே இருக்காது," என்றும் அவர் இரானை எச்சரித்துள்ளார்.
"இது காலம் சார்ந்த கடிகாரமல்ல, தொழில்நுட்பம் சார்ந்த கடிகாரம். ஒரு கட்டத்தில், ஈரான் திரும்பமுடியாத முன்னேற்றங்களை நிகழ்த்தப்போவதனால், JCPOA மிகவும் பலவீனப்பட்டிருக்கும், அந்நிலையில் நாம் பேச்சுவார்த்தை நிகழ்த்த முடியாது - செத்த உடலுக்கு உயிர்கொடுக்க முடியாது," என்று சென்ற மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அமெரிக்க அரசின் செயலாளர், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது அணுசக்தி திட்டத்தை "பெட்டியில் போட்டுப் பூட்டாவிட்டால்", "அத்தனை நடவடிக்கைகளும் தங்கள் வசம்" இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
யுரேனியம் தயாரிப்பில் மும்முரமாக இருக்கும் ஈரான்
JCPOAவின் முக்கியக் கவனம் இரான் செறிவூட்டிய யுரேனியம் தயாரிப்பதில் இருந்தது, இது அணு உலைகளில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது, ஆனால் இது அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
பொருள் கையிருப்பு; அதன் தூய்மை; செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மையவிலக்கி இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள்; செறிவூட்டல் நிகழக்கூடிய இடங்கள் - ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளுக்கு இரான் சம்மதித்தது.
டிரம்ப் திரும்பக் கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இரான் 2019ம் ஆண்டிலிருந்து இந்தக் கட்டுபாடுகளை மெல்ல மீறத் தொடங்கியது. இரான் அணு ஒப்பந்தத்தை "கருவிலேயே குறைபட்டது" என்று குறிப்பிட்ட டிரம்ப், அதற்கு ஒரு மாற்றினை ஆலோசிக்கும்படியும் இரான் தலைவர்களை வலியுறுத்த நினைத்தார்.
அனுமதிக்கப்பட்டதைவிட பல மடங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்திருக்கிறது இரான். இதில் 60% தூய்மையானதும் அடக்கம் - இதற்கும் அணு ஆயுதம் செய்வதற்குத் தேவையான 90% தூய்மையினை அடைவதற்கும் இடையே ஒரு சிறு தொழில்நுட்பப் படி மட்டுமே உள்ளது.
இரான் நூற்றுக்கணக்கான மேம்படுத்தப்பட்ட மையவிலக்கி இயந்திரங்களை நிறுவியிருக்கிறது; முன்னர் மாற்றியமைக்கப்பட்ட நிலத்தடி மையங்களில் யுரேனியம் செழுமையூட்டும் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது; மேலும் அணுகுண்டு தயாரிப்பில் முக்கியமாகப் பயன்படும் செழுமையூட்டப்பட்ட யுரேனியம் உலோகம் தயாரிப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஈரானிய அணுசக்தி மையங்களுக்குச் செல்வதற்கான அனுமதியும் பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது.
வியென்னாவில் நம்பிக்கையைவிட பனிமூட்டமே அதிகம்
அலசல்
ஜேம்ஸ் லாண்டேல்
தூதாண்மை செய்தியாளர்
இந்தப் பேச்சுவார்த்தைகளைச் சூழ்ந்துள்ள உணர்வு நல்லவிதமாக இல்லை.
இரானின் புதிய அரசு காலம் தாழ்த்தியிருக்கிறது, வியன்னாவுக்குத் திரும்பிவர கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு அது புதிய, பிரம்மாண்டமான கோரிக்கைகளுடன் வருகிறது. தனது அணுசக்தி செயல்பாடுகளைப்பற்றி பேசப்போவதில்லை என்று இரான் கூறியிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முழுதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்குவதைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும். தடைகள் அனைத்தையும்.
உடனடியாக. சரிபார்க்கக்கூடிய வகையில். எதிர்கால அமெரிக்க அரசு உடன்பாட்டிலிருந்து விலகாது என்ற உத்தரவாதத்துடன்.
அமெரிக்காவும், மூல அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளும் ஜூன் மாதம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தைகள் துவங்க வேண்டும் என்று கோரியிருகின்றன, அப்போது இரண்டு தரப்புகளும் ஒப்பந்தம் சாத்தியமானது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தன.
இரான் துரிதபடுத்தப்பட்ட தனது அணுசக்தி திட்டத்தைப்பற்றிப் பேச மறுத்தால், அமெரிக்க அரசியல் நிபுணர்கள் இரான் அணு ஆயுதம் பெறுவதைத் தவிர்ப்பதற்கு "மற்ற வழிமுறைகள்", "மற்ற கருவிகள்" பற்றிப் பேசுகிறார்கள் - இது இரானின் கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதலையோ, சைபர் தாக்குதலையோ நிகழ்த்த அனுமதிப்பதற்கான மறைமுகமான சொல்லாடலாகும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், டெஹ்ரானின் புதிய அரசின் நோக்கங்கள் என்னவென்று மேற்கத்திய சக்திகளுக்கு இன்னும் தெரியவில்லை: அது ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவசியமான சமரசங்களுக்கு ஒப்புக்கொள்ளவும் தீவிரமாக இருக்கிறதா?
தமக்கு வேண்டியதிலை என்று அது கூறிவரும் அணு ஆயுதம் செய்யத் தேவைப்படும் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான கால அவகாசம் வேண்டி இரான் இவை அனைத்தையும் செய்கிறதா?
நிறைய விஷயங்கள் இந்தக் கேள்விக்கான பதிலைச் சார்ந்தே இருக்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிலகாலம் இழுக்கப்படும், தற்போது வியன்னாவில் நம்பிக்கையைவிட பனிமூட்டமே அதிகம் தென்படுகிறது.