ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியை சங்கடத்தில் ஆழ்த்திய எழுத்துப்பிழை
வியாழன், 9 மே 2019 (20:56 IST)
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் புழக்கத்திற்கு வந்த ஆஸ்திரேலிய 50 டாலர் பணநோட்டில் சிறிய எழுத்தில் அச்சாகியுள்ள எழுத்து பிழை பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மஞ்சள் வண்ணத்திலுள்ள மில்லியன் கணக்கான பணநோட்டுகளில் "responsibility" என்பதை "responsibilty" என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எழுத்துப்பிழையோடு அச்சிட்டுள்ளது.
இந்த தவறை ஒப்புக்கொண்ட இந்த வங்கி எதிர்காலத்தில் அச்சிடப்படும் ஆஸ்திரேலிய டாலர் பணநோட்டுகளில் இந்த தவறு சரிசெய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
ஆனால், சுமார் 46 மில்லியன் புதிய டாலர் பண நோட்டுகள் நாடு முழுவதும் இப்போது புழக்கத்தில் உள்ளன.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு கடைசியில் இந்தப் புதிய நோட்டுகள் வெளியாகின.
கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் வரிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது mmmhotbreakfastமுடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது mmmhotbreakfast
"ஒரேயொரு பெண்ணாக இங்கிருப்பது பெரியதொரு பொறுப்பு. பிற பெண்களும் இங்கிருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன்," என்கிற உரையின் பகுதி சிறிய எழுத்துக்களில் பல முறை இந்த நோட்டில் அச்சிடப்பட்டுள்ளன.
ஆனால், "i" என்கிற ஆங்கில எழுத்தில்லாமல் "responsibilty" என்றே அச்சாகியுள்ளது.
இந்த பணநோட்டில் அச்சாகியுள்ள எழுத்தின் உருவை பெருக்கி பார்க்கும் கண்ணாடி கொண்டு இந்த எழுத்துப்பிழையை கண்டுபிடிக்க ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ளது.
50 ஆஸ்திரேலிய டாலர் பணநோட்டு அந்நாட்டில் பரவலாக புழக்கத்தில் இருந்து வருகின்ற ஒன்றாகும். பணம் வழங்கும் இயந்திரங்களிலும் பொதுவாக இது வழங்கப்படுகிறது. இதன் இன்னொரு பக்கத்தில் பூர்வகுடி எழுத்தாளரான டேவிட் உனைய்போன் படம் அச்சிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பண நோட்டின் சமீபத்திய பதிப்பு வெளியானபோது, எளிமையான பயன்பாட்டை மேம்படுத்தவும், கள்ளநோட்டுகள் அச்சடிப்பதை தடுக்கவும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
எழுத்துப்பிழை இருந்தாலும், இந்த பணநோட்டு இன்னும் செல்லுபடியாவது குறிப்பிடத்தக்கது.