The Family Man - Season 2 விமர்சனம்: எப்படியிருக்கிறது சர்ச்சைகளுக்கு இடையே வெளியான அமெஸான் தொடர்?

வெள்ளி, 4 ஜூன் 2021 (11:20 IST)
நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா, ஷரீஃப் ஹாஸ்மி, தேவதர்ஷிணி, மைம் கோபி, அழகம் பெருமாள், அத்னான்சாமி, சீமா பிஸ்வாஸ்; இசை: சச்சின் - ஜிஹார்; ஒளிப்பதிவு: கேமரோன் எரிக் ப்ரைசன்; இயக்கம்: ராஜ் & டிகே. வெளியீடு: அமெஸான் ஓடிடி.
 
The Family Man முதலாவது சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தத் தொடரின் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது. இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது.
 
முதலாவது சீஸனின் கதை இதுதான்: தேசியப் புலனாய்வு முகமையின் TASC என்ற பிரிவில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவில் முக்கியமான புள்ளி. ஆனால், வீட்டில் மனைவி (ப்ரியாமணி), குழந்தைகளுக்கு ஸ்ரீ காந்த் மீது பெரிய மதிப்பு ஏதும் இல்லை. இந்த நிலையில் ஒரு தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் மூன்று அப்பாவிகளைச் சுட்டுக்கொன்றுவிடுகிறான். பிறகு, காஷ்மீருக்கு அனுப்பப்படுகிறான். அங்கிருந்தபடி, ஒரு பெரிய தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கிறான். ஆனாலும் அச்சுறுத்தல் தொடரும் என்ற வகையில் முதல் சீஸன் முடிவுக்கு வந்தது.

இந்த இரண்டாவது சீஸனின் கதை மும்பை, லண்டன், வட இலங்கை, சென்னை என நான்கு இடங்களில் நடக்கிறது என்றாலும் சென்னையில்தான் பெரும் பகுதி கதை நகர்கிறது. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், அவர்களைக் கொல்ல நினைக்கிறது ஐஎஸ்ஐ. இதற்காக தமிழ் போராளிக் குழு ஒன்றுடன் இணைந்து கொள்கிறது. இந்தக் கொலை முயற்சியிலிருந்து கதாநாயகனும் அவனது குழுவினரும் எப்படி பிரதமரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்த சீஸனின் மையச் சரடு.
 
முதல் சீஸனிலேயே விஜயகாந்த், அர்ஜுன் நடித்த தேசபக்தி படங்களின் பாணியில் தீவிரவாதிகள் VS பாதுகாப்புப் படை என்ற பாணியில்தான் கதை அமைந்திருந்தது. ஆனால், திரைக்கதையின் பலத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த உற்சாகத்தில், இந்த முறை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ஐஎஸ்ஐ மற்றும் தமிழ் போராளிக் குழுக்களை இணைத்திருக்கிறார்கள்.
 
ஆனால், இந்த இணைப்பில் எந்த பொருத்தமும் இல்லை என்பதால், பல காட்சிகள் அபத்தமாக நீள்கின்றன. ஐஎஸ்ஐ எதற்காக இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களுடன் இணைகின்றன அல்லது தமிழ் போராளிக் குழுக்கள் ஏன் ஐஎஸ்ஐ உதவியைப் பெறுகின்றன என்பதற்கான காரணங்கள் எதுவுமே தொடரில் சரியாக இல்லை. தவிர, தமிழ் போராளிக் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுவது போன்ற காட்சிகள் அனைத்துமே 1980களின் சூழலை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
ஒரு காட்சியில், தமிழ் போராளிக் குழுக்களின் கடத்தல் தளமாக காட்டப்படும் வேதாரண்யம் போன்ற ஒரு இடத்தில் ஊரே சுற்றி வளைத்து, ஒரு காவல் நிலையத்தை தாக்கி, அங்கிருக்கும் தற்கொலைப் படை போராளியான ராஜியை (சமந்தா) மீட்டுச் செல்கிறது. அடுத்த காட்சியில், மொபைல் போனில் அந்தப் போராளியின் படத்தை வைத்து விசாரித்துக்கொண்டு திரிகிறார்கள் என்ஐஏ அதிகாரிகள்.
 
பிரதமரைக் கொல்வதற்காக போராளிக் குழுக்கள் செயல்படுத்தும் திட்டம் அதற்கு மேல் அபத்தமாக இருக்கிறது. பிரதமரைக் கொல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, மும்பையில் கதாநாயகனின் மகளைக் கடத்தி, மிரட்டும் கதை ஒன்று தனியாகச் செல்கிறது.
 
மொத்தமாக ஒன்பது எபிசோடுகளைக் கொண்ட இந்த ஒட்டுமொத்தத் தொடரிலும் சற்றேனும் ரசிக்கும்படி இருப்பது, கதாநாயகன், அவனது மனைவி, குழந்தைகளுக்குள் நடக்கும் பிரச்சனைகள்தான். மற்றபடி, போராளிகளின் பின்னணி காட்சிகள், அதன் பின்னால் இருக்கும் அரசியல், அவர்களது கொலை முயற்சிகள் போன்ற எல்லாமே அபத்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
முதல் சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் மனோஜ் பாஜ்பாய் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, துவக்க காட்சிகளில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது, ஒரு இளவயது நிர்வாகியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல, குடும்பத்தினருடனான காட்சிகளிலும் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.
 
கதாநாயகியாக வரும் ப்ரியாமணி, குழந்தைகள் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த சீஸனில் உமையாள் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் தேவதர்ஷிணி நடித்திருக்கிறார்கள். ஆனால், அவரது பாத்திரம் தொடரோடு பொருந்தவேயில்லை. பாதியில் காணாமலும் போய்விடுகிறார்.
 
தற்கொலைப் படை போராளி ராஜியாக நடித்திருக்கிறார் சமந்தா. சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் பல காட்சிகளில் பிதாமகன் விக்ரமைப் போல நடித்திருக்கிறார்.
 
இதற்கு அடுத்த சீஸனும் வரவிருக்கிறது. இந்த மூன்றாவது சீஸனில் ஆபத்து சீனாவிலிருந்து வரும் போலிருக்கிறது. இந்த இரண்டாவது சீஸன் அனுபவத்தை வைத்துப் பார்த்தால், மூன்றாவது சீஸனில் தாக்குதல் எப்படியிருக்குமோ என்ற பயம் வருகிறது. The Family Man முதல் சீஸன் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. ம்ஹும்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்