கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம் - அரசுக்கு எதிராக பொங்கும் கோபம்

வியாழன், 4 ஜூன் 2020 (16:58 IST)
மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக  கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா நோயுடன் போராடி வந்த மருத்துவர் ஹூ வேஃபெங், ஜூன் 2ஆம் தேதி காலமானார். சிகிச்சையின்போது, இவரது கல்லீரல்  சரியாக செயல்படாமல் போனதால், உடல் கருப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கியது. அந்த தகவல் பல ஊடகங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பின.
 
இவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சீன சமூக வலைத்தளங்களில் கோபம் நிறைந்த  கருத்துகள் வலம்வர இவரது மரணம் காரணமாகிவிட்டது.
 
யார் இந்த ஹூ?
 
சீனாவில், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய, வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய மருத்துவமனையில், சிறுநீரக நிபுணராக பணியாற்றி வந்தவர்  இவர். கடந்த ஜனவரி மாதம், இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களாக, இவருக்கு வேறு ஒரு  மருத்துவமனையில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மார்ச் மாத மத்தியில், இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், ஏப்ரல்  கடைசியிலும், மே மாதமும், இவர் பெருமூளை ரத்தக்கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
 
ஏப்ரல் மாதம், சீனாவின் அரசு ஊடகம், மருத்துவர் ஹூ மற்றும் அவருடன் பணியாற்றும் இதய மருத்துவர் ஈ ஃபான் ஆகியோரின் நோய் குறித்து செய்தி  வெளியிட்டது. வைரஸுக்கு எதிராக இவர்களின் போராட்டம் என்று வெளியிடப்பட்ட செய்தியால், இவர்கள் உடனடியாக பிரபலம் ஆனார்கள்.
 
சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வீபோவில், இவர்கள் குறித்த காணொளிகளைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். இவர்களின் நிற மாற்றத்திற்கு  கல்லீரல் சரியாக வேலை செய்யாததே காரணமாக இருக்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
 
”கருமையான முகங்களைக்கொண்ட வூஹான் மருத்துவர்கள்” என்ற தலைப்பில் இவர்கள் பிரபலம் ஆகினார்கள். இவருமே, இந்த நோயால் அதிகமாக பாதிப்பிற்கு  உள்ளாகி இருந்த நிலையில், இவர்களின் இந்த போராட்டத்திற்கு மக்களிடையே பெரிய பாராட்டு கிடைத்தது. தி கம்யூனிஸ்ட் யூத் லீக், “மரணத்திற்கு எதிராக  போராடும் தேவதைகள்” என்று அவர்களை பாராட்டிய அதே வேளையில், வீபோவில் இருப்பவர்களோ, மக்கள் பணியாற்றும்போது, அந்நோயின் பாதிப்பு  இவர்களுக்கும் இவ்வளவு ஏற்படுகிறதே என வருத்தம் தெரிவித்தனர்.
 
சீன மக்களுக்காக சேவையாற்றிய பிறகு, மீதமுள்ள வாழ்க்கையிலும், இரு மருத்துவர்களும், இந்த கருமையான உடலுடன் இருக்கப்போகிறார்கள். அவர்கள்  வாழ்க்கையில், இந்த நிறம் எப்படி ஒரு ‘தழும்பாக’ அமைந்து விட்டது என்று அப்போது சமூக வலைத்தளப் பயனர்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
 
சீனா டெய்லி என்ற ஊடகம், கடந்த மே 6ஆம் தேதி இதய மருத்துவர் ஈ ஃபான் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டதாகவும், மருத்துவர் ஹூவின் உடல்நிலையில்  முன்னேற்றம் இல்லை என்றும் தெரிவித்தது.
 
சர்ச்சைகள்
 
சீனாவின், தி நேஷனல் கிளோபல் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகள், ”கொரோனா வைரசை முதலில் கண்டுபிடித்து எச்சரித்து, பிறகு அதே  வைரசுக்குப் பலியான லீ வென்லியாங் பணியாற்றிய அதே மருத்துவமனையில் டாக்டர் ஹூவும் வேலை செய்தார்” என்று குறிப்பிட்டன.
 
கடந்த டிசம்பர் மாதம், இந்த வைரஸ் பரவல் குறித்த தகவலை வெளியில் கூறினார் மருத்துவர் லீ. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களை அவர் எச்சரித்தார்.
 
ஆரம்பத்தில் எச்சரிக்கை செய்ய முயன்ற லீயின் குரலை சீன அதிகாரிகள் அடக்க முயன்று அவரை கண்டித்தது, அவர் இறந்தபோது தெளிவாக  தெரியவந்துவிட்டது. இது மக்களிடையே பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது.இந்த இரு மருத்துவர்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா என்பது இன்னும் தெளிவாக  தெரியவில்லை.
 
இவர்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பணியாற்றியுள்ளனர். வூஹானில் இருக்கும் மத்திய மருத்துவமனையில் சுமார் 4,200 பணியாளர்கள் இருப்பதாகவும்  தகவல்கள் கூறுகின்றன.இவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவி இருக்குமா என்பதும் தெளியாக தெரியவில்லை. இருவருக்குமே ஜனவரி மாத  மத்தியிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, அந்த நேரத்திலேயே குறிப்பிட்ட மருத்துவமனையில் 68 பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்ததாகவும்,  200க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. இந்த இரு மருத்துவர்களின் மரணத்திற்கும் மக்கள் ஒரே மாதிரி கோபத்தை  வெளியிட்டுள்ளனர்.
 
மருத்துவர் லீயின் மரணத்திற்கான காரணம் இன்னும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. ஆனால், குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, ”அவரின் நிலைமை மிகவும்  மோசமாக இருந்ததாகவும், மனதளவில் அவர் உறுதியாக இல்லை” என்றும் எழுதி இருக்கிறது.சினோ வீபோ சமூக வலைதளத்தில், ஆயிரக்கணக்கான மக்கள்,  #WuhanCentralHospitalDoctorHuWeifengPassesAway என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
 
ஒரு பக்கம், காலமான ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மருத்துவருக்காக, பலரும் மெழுவர்த்தியின் படத்தை பகிர்ந்து வரும் நிலையில், மறுபக்கம்  அவர் எப்படி இறந்தார் என்று மக்கள் கேள்விகளை முன்வைப்பதோடு, அந்த மருத்துவமனையில் தலைமை அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற  கருத்துகளும் வலம் வருகின்றன.
 
”வூஹான் மத்திய மருத்துவமனையின் தலைவர்கள் எப்போது கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்?” என்று ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். ”வூஹான் மத்திய  மருத்துவமனையில், கொரோனாவிற்கு பலியாகும் ஐந்தாவது ஊழியர் இவர்” என்று எழுதியுள்ளார் இன்னொருவர்.
 
அரசுக்கு எதிரான பத்திரிக்கையான எப்போச் டைம்ஸ் பத்திரிக்கை, “அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த அதிகாரி, கொரோனா பரவலின் ஆரம்ப  காலத்தில், ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய எச்சரிக்கைகளை கொடுக்காமல், அவர்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, பல நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்க வைத்துள்ளார்” என்று எழுதியுள்ளது.
 
மருத்துவர் ஹூவின் உடல்நிலை சீராக இல்லாமல் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளாத சில சமூக வலைத்தளப் பயனர்கள், மருத்துவரின் மறைவு குறித்து நிர்வாகத்தின் கருத்து என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.வெளிப்படைத்தன்மை
 
மருத்துவர் ஹூவின் மரணத்தைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையிலிருந்து வெளியாகும் தரவுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பலர் வீபோவில்  கேள்வி எழுப்பி உள்ளனர்.” பல நாட்களுக்கு முன்பே, வூஹானில் உள்ள நோயாளிகள் அனைவரும் வெளியேறிவிட்டார்கள்தானே? என்று ஒரு சமூக ஊடக பயனர்  கேட்டுள்ளார்.
 
இதன்மூலம், கொரோனா பரிசோதனையின் போது, எதிர்மறை முடிவுகள் வந்திருந்தாலும், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள வேறு நோய்களுக்காக சிலர் அங்கு  இன்னும் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், வூஹானில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவித்தது.வூஹானில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோயால்  பாதிக்கப்பட்டு இருந்தனர்.
 
வூஹான் மத்திய மருத்துவமனையே இதன் முக்கிய புள்ளியாக இருந்தது.சீனாவின் ஷின்ஹூ செய்தி நிறுவனம், “வூஹானில் உள்ள மருத்துவமனைகளிலேயே  இங்கு தான் பாதிப்பு அதிகம்” என்று குறிப்பிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்