இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராகிறார் 'தங்க மங்கை' பி.டி. உஷா
திங்கள், 28 நவம்பர் 2022 (10:44 IST)
இந்திய தடகள உலகில் “வேக ராணி” என்றும் “பய்யோலி எக்ஸ்பிரஸ்” என்றும் அழைக்கப்படும் பி.டி. உஷா, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராகவுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 27 கடைசி நாளாக இருந்த நிலையில், போட்டி ஏதுமின்றி அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
தற்போது 58 வயதாகும் பி.டி. உஷா, பல்வேறு ஆசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அவர், 1986ஆம் ஆண்டு தென்கொரிய தலைநகர் சோலில் நடந்த போட்டியில் வென்ற நான்கு தங்கம் உட்பட ஆசியப் போட்டிகளில் 11 பதக்கங்களை வென்றுள்ளார்.
1983 முதல் 1998ஆம் ஆண்டு வரையிலான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 தங்கங்கள் உட்பட 23 பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும், அஜய் பட்டேல் கூட்டமைப்பின் மூத்த துணை தலைவராக எந்தப் போட்டியுமின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தற்போது குஜராத் மாநில ரைஃபிள் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.
இந்திய பழுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவரான சாதேவ் யாதவ், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் பொருளாளராகவும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சௌபே கூடுதல் செயலாளாராகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பெண் கூடுதல் செயலாளருக்கான தேர்தலில், அலக்நந்தா அஷோக், ஷாலினி தாக்கூர் சாவ்லா, சுமன் கௌஷிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
“பய்யோலி எக்ஸ்பிரஸ்”
பி.டி. உஷா, கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் அமைந்திருக்கும் பய்யோலி என்ற குக்கிராமத்தில் வளர்ந்தார். அதனால் தான் அவருக்கு பய்யோலி எக்ஸ்பிரஸ் என்ற பட்டப்பெயர் வந்தது.
அவர் நான்காம் வகுப்பு படிக்கும்போது, தடகள உலகுக்குள் மிகப்பெரிய வெற்றியோடு தான் காலடி எடுத்து வைத்தார்.
அவர் படித்த பள்ளியிலேயே படித்த மாவட்ட சாம்பியனுடன், பி.டி. உஷாவை அவருடைய உடற்பயிற்சி ஆசிரியர் போட்டியிர வைத்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றார். அந்த மிகப்பெரிய வெற்றியோடு, தடகளத்தில் தனக்கான பாதையை உஷா உருவாக்கத் தொடங்கினார்.
16 வயதில் ஒலிம்பிக்ஸ்
கேரள விளையாட்டுப் பள்ளியின் ஆசிரியர் ஓம் நம்பியார், உஷாவின் தடகள வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அவருடைய திறமையைக் கண்டுகொண்ட ஓம் நம்பியார், தடகள போட்டிகளுக்காகவே அவரை மெருகேற்றத் தொடங்கினார்.
மாவட்டப் போட்டிகள், மாநிலப் போட்டிகள், தேசியப் போட்டிகள் என்று உஷா ஜொலிக்கத் தொடங்கினார். 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்ஸில், 16 வயதாக இருக்கும்போது பி.டி. உஷா இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நட்ந்த ஒலிம்பிக்கில் தடகள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக அவர் முத்திரை பதித்தார்.
ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டு நான்காம் இடத்தைப் பிடித்திருந்தாலும், அவருடைய அந்த ஓட்டம் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது. ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பெற்றாலும், இந்தியாவின் தங்க மங்கையாகவே உஷா கருதப்பட்டார்.
அந்தத் தோல்விக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட அடுத்த சில போட்டிகளிலும் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
ஆனால், தன்னால் மீண்டெழ முடியும் என்பதை 1986ஆம் ஆண்டு நடந்த ஆசியப் போட்டிகளில் நிரூபித்துக் காட்டினார்.
400 மீட்டர் தடை தாண்டும் போட்டி, 400 மற்றும் 200 மீட்டர் தடகளம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன் பிறகு, 1983ஆம் ஆணும் அர்ஜுனா விருதும் 1985ஆம் ஆண்டும் பத்மஸ்ரீ விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டார்.
103 சர்வதேசப் பதக்கங்களை குவித்திருந்தாலும், நூலிழையில் தவறிவிட்ட ஒலிம்பிக் பதக்கம் உஷாவின் மனதில் நிறைவேறாத ஆசையாகவே இருந்து வந்தது.
தன்னால் ஒலிம்பிக்கில் வெல்ல முடியாவிட்டாலும், தன் பயிற்சி மையம் மூலமாவது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற வேண்டும் என தொடங்கப்பட்டதுதான் உஷா தடகளப்பள்ளி.