பிபிசி தமிழின் தமிழர் குரல்: 'நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க கூட்டணி அவசியம்' - திருமாவளவன்

வெள்ளி, 22 மார்ச் 2019 (15:39 IST)
2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார்.
இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம்.
 
இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். நிகழ்ச்சியை பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.
 
திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவரின் பதில்கள் பின்வருமாறு:-
 
கேள்வி: வரும் மக்களவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். பொதுவாக, கூட்டணிக்காக எந்த மாதிரியான சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது?
 
பதில்: இந்திய தேர்தல் களத்தில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி அமைக்கப்படுகிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளும், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. அதனால், இதில் ஏதேனும் ஒரு கட்சியுடன்தான் விசிக போன்ற வளரும் கட்சிகள் சேர முடியும்.
 
எந்த அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட, வளர்ந்த கட்சிகள் தான் தீர்மானிக்கிறார்கள். நான் விரும்பினால் மட்டுமே ஏதாவது ஒரு கட்சியில் இடம் பெற்றுவிட முடியாது. அதனை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அதற்கு நிறுவப்பட்ட வாக்கு வங்கியை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
 
கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட கொடுக்கப்படும் தொகுதிகள் இங்கு மிகவும் முக்கியமானது. தேர்தல் கூட்டணியை வெற்றிக்கான உக்தியாகதான் ஒவ்வொரு கட்சிகளும் பார்க்கின்றன. கூட்டணி என்பது வாக்கு வங்கிகளை பரிமாறுக் கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம்.
 
கொள்கை மற்றும் கோட்பாடுகளும் இங்கு முக்கிய இடம் பெறுகிறது. கூட்டணி என்று வரும்போது, சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், முற்றிலும் கொள்கை மாறுபட்டிருக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க முடியாது. உதாரணமாக நாங்கள் பாஜகவுடன் சேர முடியாது.
 
நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்றால், வளர்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டியது அவசியம்.
 
மக்கள் மன்றத்தில் பேசும் பேச்சு, சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.
 
வெற்றி பெற்ற எங்கள் உறுப்பினர்கள் மீது எந்த ஆளுங்கட்சியும் ஆதிக்கம் செலுத்த முடியாது.
 
அதனைத் தொடர்ந்து சத்யபாமா கல்லூரி, லயோலா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் திருமாவளவன் பதிலளித்தார்.
மாணவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பை வழங்குகிறோம்.
 
கேள்வி: ஒவ்வொரு கிராமங்களிலும் ஜாதிய குடியிருப்புகள் இருக்கிறது. இதை எப்படி ஒழிப்பீர்கள்?
 
பதில்: ஜாதி என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று உலகில் வேறெங்கும் கிடையாது. பொருளாதாரம், பணம், அணுகுமுறை ஆகியவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நாம் கூறலாம். ஆனால், சமூக ரீதியாக இப்படி இங்குமட்டும்தான் இருக்கிறது.
 
ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் மட்டும் இன்று பேசவில்லை. இதெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இதற்கு முன் போராடியவர்கள் தோற்று போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 
ஜாதி ஒழிப்பு என்பது ஒரு தலைமுறையில் ஏற்படும் மாற்றம் கிடையாது. பல தலைமுறைகள் ஆகும். இதற்கு கல்வி அவசியம்.
 
கேள்வி: உங்கள் கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெற்றுவது குறித்து சொல்லுங்கள்.
 
பதில்: மதத்தை வைத்து ஆதாயம் தேடுவதுதான் ஆபத்தானது. அரசு மதம் சார்ந்து இருக்கக் கூடாது. மக்கள் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதுதான் மதசார்பின்மை. ஆனால், அரசாங்கத்துக்கு மதம் இருக்கக்கூடாது.
 
முஸ்லிம் அமைப்பால் மதவாதம் பேச முடியாது. என்னதான் நினைத்தாலும் இந்தியாவில் ஒரு முஸ்லிம் அல்லது கிறித்துவர் கட்சி தொடங்கி பிரதமராக முடியாது. அது இங்கு நிச்சயம் சாத்தியமேயில்லை.
 
நாங்கள் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாடு. அது இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
 
கேள்வி: உங்களுடைய அரசியல் பயணத்தில் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்களா? எது தடையாக இருக்கிறது
 
மக்களை அமைப்பாக்குவதுதான் என் இலக்கு. அடிதட்டு மக்களை அமைப்பாக்குவது அவ்வளவு எளிதானதல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்