இலங்கை: கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம்

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
இலங்கையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் - நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

 மரணமடைந்த மேற்படி பெண் - புற்றுநோய் மற்றும் இதயக்கோளாறு ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 47 வயதுடைய குறித்த பெண் - புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடந்த 09 மாதங்களாக இந்தியா - வேலூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் உறவினர் றம்ஸான் என்பவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி இவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேற்படி பெண், பின்னர் 22ஆம் திகதி அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே இந்தப் பெண் நேற்று மரணமடைந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்தது.

இவ்வாறு மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் - நேற்றைய தினமே சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கொடிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறந்த பெண்ணின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரின் கணவரும், குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்