A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்

வெள்ளி, 26 ஜூலை 2019 (19:25 IST)
சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு, காதல் - அதில் வரும் பிரச்சனைகள் என்று ஒரு 'டெம்ப்ளேட்' வைத்திருக்கிறார். இந்தப் படமும் அதே பாணிதான்.
   
திரைப்படம் A 1 (அக்யூஸ்ட் நம்பர் 1)
   
நடிகர்கள் சந்தானம், தாரா அலிஷா, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், டைகர் தங்கதுரை, டோனி, சாய்குமார்
   
இசை சந்தோஷ் நாராயணன்
   
இயக்குநர் ஜான்சன்

ஐயங்கார் வீட்டுப் பெண்ணான திவ்யாவுக்கு (தாரா அலிஷா), வேறு ஜாதியைச் சேர்ந்த சரவணனைப் (சந்தானம்) பார்த்தவுடனேயே பிடித்துவிடுகிறது. ஆனால், அவன் ஐயங்கார் இல்லை என்பது பிறகு தெரியவே, அவனை விட்டு விலகிவிடுகிறாள். பிறகு தன் தந்தை அனந்தராமனைக் (யடின் கார்யேகர்) காப்பாற்றியவன் என்பதால் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால், தந்தை அந்தக் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே சரவணனின் நண்பர்கள் அனந்தராமனைக் கொன்றுவிடுகிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து எப்படி சரவணன் மீள்கிறான், திவ்யா - சரவணன் கல்யாணம் நடக்கிறதா என்பது மீதிக் கதை.
சந்தானத்திற்கே உரிய வழக்கமான காதல் - காமெடி திரைப்படம். சந்தானமும் அவருடைய கூட்டாளிகளும் அடிக்கும் ஒன் - லைன்களால் போரடிக்காமல் நகர்கிறது முதல் பாதி.

ஆனால், இரண்டாம் பாதியில் கதாநாயகியின் தந்தை அனந்தராமன் கொல்லப்பட்ட பிறகு, படமும் அனந்தராமனுக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்கிறது. இதற்குப் பிறகு, படம் முடியும்வரை ஒரே இடத்திலேயே கதை நகர்வது சலிப்பூட்ட ஆரம்பிக்கிறது.

இதற்கு நடுவில் மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர் சிறு திருப்பங்களின் மூலம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். கடைசியில் வரும் சிறிய திருப்பம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், அந்தத் திருப்பம் வரும்போதே, படம் முடிவுக்கு வருகிறது என்பதால் ஆசுவாசம் ஏற்படுகிறது.

படம் நெடுக சந்தானம் அடிக்கும் 'கவுன்டர்' வசனங்கள் சற்று சிரிக்க வைக்கின்றன. ஆனால், அதை மட்டுமே வைத்து முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

நாயகி தாரா அலிஷாவுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகம். சந்தானத்தின் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நீண்ட நாட்களுக்குப் பிறகு கலக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் 'மாலை நேர' பாடல் மனதில் நிற்கிறது. அந்தப் பாடல் தவிர, படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே ரசிக்கும் வகையில் இருக்கின்றன. பாடல்களின் நீளம் குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

சுமார் இரண்டு மணி நேரத்தில் நிறைவடைகிறது படம். சந்தானத்தின் ஒன் - லைன்கள் தவிர, படத்தின் குறைவான நீளமும் இந்தப் படத்தின் மற்றொரு ஆசுவாசமளிக்கும் அம்சம். சந்தானத்தின் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்