சபரிமலை தீர்ப்பு மறு ஆய்வு: 4 கேள்விகள் 4 பதில்கள்
புதன், 13 நவம்பர் 2019 (21:23 IST)
மாதவிடாய் ஏற்படும் வயதினர் என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வயது வேறுபாடு இல்லாமல் எல்லா வயதுப் பெண்களும் இந்தக் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது, நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் அது குறித்த ஐந்து முக்கிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும் இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
1.இந்த வழக்கு எப்போது தொடுக்கப்பட்டது?
1990ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி வெளியான ஜன்மபூமி மலையாள நாளிதழில், தேவசம் போர்டின் ஆணையராக இருந்த சந்திரிகா என்பவரின் பேரக்குழந்தைக்கு முதல்முறை உணவூட்டும் நிகழ்வில், அக்குழந்தையின் தாயான சந்திரிகாவின் மகள் இருக்கும் படம் வெளியானது.
இதையடுத்து கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்க கூடாது என திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக எஸ் .மகேந்திரன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் 1991ஆம் ஆண்டு தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலைக்குள் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் நுழை விதிக்கப்பட்டுள்ள தடையை உறுதி செய்தது.
2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபரிமலை கோவிலுக்குள் 10 -50 வயதுள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கேரளாவில் இடது ஜனநாயக் முன்னணி அரசு அனைத்து வயது பெண்களும் நுழைய ஆதரிப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
2018ஆம் ஆண்டு ஐந்து நீதிபதி கொண்ட அமர்வு இதுகுறித்த விசாரணையை தொடங்கியது.
செப்டம்பர் 28ஆம் தேதி சபரிமலை கோயிக்குள் பெண்கள் செல்லலாம் என அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.
2.சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.
மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்புக்கு எதிராக 49 மறு ஆய்வு மனுக்களும், நான்கு ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மறு சீராய்வு மனுக்களின் விசாரணை 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
3.சபரிமலை ஐயப்பசாமியின் கதை என்ன?
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதில் ஐயப்பனும் விதிவிலக்கல்ல.
அக்கோயிலின் புராணக்கதைபடி, ஐயப்பன் பிரம்மச்சரியம் எடுத்துக் கொண்டு துறவி வாழ்க்கை வாழ உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனை சுற்றி பல கதைகள் உள்ளன.
இரண்டு ஆண் கடவுள்களுக்கு ஐயப்பன் பிறந்தார் என்றும் இதனால் பெற்ற சக்தியில் அதுவரை வீழ்த்த முடியாத ஒரு பெண் அரக்கியை வீழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது.
வீழ்த்திய பிறகுதான் அவர் ஓர் இளம்பெண் என்றும், அரக்கியாக வாழ அவருக்கு சாபம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிய வந்தது.
உடனே ஐயப்பன் மீது காதல் வயப்பட்ட அப்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். காட்டுக்குள் சென்று பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பதுதான் தன் விதியில் எழுதப்பட்டிருப்பதாக கூறி ஐயப்பன் மறுத்துவிட்டார்.
ஆனால் அப்பெண் விடாப்படியாக கேட்க, என் ஆசீர்வாதம் பெற புதிய பக்தர்கள் என்று வராமல் இருக்கிறார்களோ, அன்று திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஐயப்பன் கூறியிருக்கிறார். அந்த நாள் இன்னும் வரவேயில்லை.
சபரிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள இரண்டாவது கோயிலில் அப்பெண் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு கோயில்களுக்கும் பெண்கள் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் அது இரு கடவுள்களையும் ஐயப்பனை காதலித்த பெண்ணின் தியாகத்தையும் அவமதிப்பது போல ஆகிவிடும் என்று நம்பப்படுகிறது.
4.கேரள அரசின் நிலை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு தாங்கள் ஆதரவாக உள்ளதாகவே கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தது.
கேரள அரசும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
மேலும் தீர்ப்பை எதிர்த்து வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது செப்டம்பர் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பதால் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு தமது அரசு பாதுகாப்பு வழங்கும் என்று தெரிவித்திருந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.