ரஷ்ய விமான விபத்து: அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து 41 பேர் பலி
திங்கள், 6 மே 2019 (20:51 IST)
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கி, தீப்பிடித்துக் கொண்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.
சமூக வலைதளங்களில் காணப்படும் வீடியோக்களில், எரிந்து கொண்டிருக்கும் அந்த விமானத்தில் இருந்து தப்பிக்க பயணிகள் அவசரகால வழியை பயன்படுத்துவது தெரிகிறது
இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள், விமானப் பணியாளர் ஒருவர் உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
78 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர். தீப்பிடித்த இந்த விமானத்தில் யாரும் தப்பித்திருந்தால் அது ஒரு "பேரதிசயம்" என சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புறப்பட்டவுடனேயே "தொழில்நுட்பக் காரணங்களுக்காக" அந்த விமானம், விமான நிலையத்துக்கு திரும்ப வேண்டிய சூழல் இருந்ததாக ரஷ்ய அரசின் ஏரோஃபிளாட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்டவுடன் ஏதோ "கோளாறு" தெரிந்ததால் விமானக் குழுவினர் உடனடியாக எச்சரிக்கை சமிக்ஞை விடுத்தனர்
விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ஓடுபாதையில் அதன் இஞ்சின் தீப்பிடித்துவிட்டதாக ஏரோஃபிளாட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"பயணிகளை காப்பாற்ற விமானக் குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பயணிகள் 55 நொடிகளில் வெளியேற்றப்பட்டனர்". என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.