நடிகர் ரஜினிகாந்த் தன் பணத்தை வட்டிக்கு விட்டதாக வருமான வரித்துறை ஆவணங்களில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியான நிலையில், இதனை மையமாக வைத்து ட்விட்டரில் அவரது எதிர்ப்பாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் 2002 - 2005 ஆண்டு காலகட்டத்தில் வருமான வரியை சரியாகச் செலுத்தவில்லை என்று கூறி, மூன்று நிதியாண்டுகளுக்கும் சேர்த்து 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்துசெய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், வழக்கு புதன்கிழமையன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
"ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை; ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக" வருமான வரித்துறையின் சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை தாக்கல் செய்திருந்த ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
டிஎம் கிருஷ்ணாவின் மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: அனுமதி மறுத்த கலாக்ஷேத்ரா
இந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு
அதன்படி, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் பணத்தை வட்டிக்குவிடும் வேலையைச் செய்துவந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 2002-03 ஆண்டு காலகட்டத்தில் 2.63 கோடி ரூபாயை வட்டிக்கு விட்டு, அதன் மூலம் 1.45 லட்ச ரூபாயை வட்டியாகப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் நிகர லாபமாக அவருக்கு 1.19 லட்ச ரூபாய் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.