இதனிடையே, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் இயக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாகப் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளன.
இதில், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஊரடங்கு முழுமையாக தளர்வு செய்யப்படாத காரணத்தினால், பேருந்துகளில் ஐந்திற்கும் குறைவான நபர்களே பயணம் செய்தனர். மேலும், பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து பணிமனை வந்த பின்பும் கிருமிநாசினிகள் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்குச் செல்லும் வழியில் தமிழகப் பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டார்.
பேருந்துகள் தமிழகப் பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நேரடியாகக் காரைக்காலுக்கு இயக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் காரைக்காலுக்குப் பேருந்து சேவை தொடங்கவுள்ளது.