பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

சனி, 12 ஆகஸ்ட் 2017 (13:40 IST)
உதயநிதி ஸ்டாலின் இதுவரை 7 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். மனிதன் தவிர, பிற படங்கள் எல்லாமே ஜாலியான, நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படங்கள். ஏழாவது படமான பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தபோது, அதேபோன்ற எண்ணம்தான் எழுந்தது. ஆனால், நடப்பதோ வேறு.


 


கூத்தப்பாடியில் வசிக்கும் கணேசன் (உதயநிதி ஸ்டாலின்) நண்பர் டைகர் பாண்டியுடன் (சூரி) சேர்ந்து பொறுப்பில்லாமல் சுற்றுகிறவர் அல்லது பொறுப்போடு சுற்றுகிறவர் (இதைப் படிக்கும்போதே குழப்பினால், படம் பார்த்தவர்களுக்கு எவ்வளவு குழப்பமாக இருக்கும்?!).

பக்கத்து ஊரைச் சேர்ந்த ஊத்துக்காட்டான் (பார்த்திபன்) ஒரு விளம்பரப் பிரியர். அவரது தங்கையை கல்யாணம் செய்துகொண்டவரின் ஊருக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருப்பதைப் பார்க்கும் கணேசன், தன் ஊருக்கும் அதுபோன்ற வசதிகள் வேண்டுமென்பதற்காக ஊத்துக்காட்டானின் மகளைக் (நிவேதா பெத்துராஜ்) காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், தொடர்ந்து கணேசனுக்கு நல்ல பெயர் கிடைப்பதால், கடுப்பாகும் ஊத்துக்காட்டான் கணேசனின் காதலுக்கு எதிராகச் செயல்படுகிறார்.

கதையே பலவீனமாக இருப்பதால், திரைக்கதையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. படத்தின் துவக்கத்திலிருந்தே கதாநாயகன், பொறுப்பானவரா, இல்லை பொறுப்பில்லாமல் ஊர்சுற்றுபவரா என்பது குழப்பமாக இருக்கிறது. வில்லன், காமெடி வில்லனா இல்லை கொடூர வில்லனா என்பதிலும் குழப்பம்.

படத்தின் எந்தக் காட்சியிலும் ஒன்ற முடியாத அளவுக்கு மேலோட்டமான காட்சிகள். இடைவேளைக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிறது. படம் சுத்தமாக நகராமல் நின்றுவிடுகிறது. இந்தப் பலவீனமான கதையை நகைச்சுவை மூலம் கலகலப்பாக கொண்டுசெல்ல முயற்சிக்கிறார்கள். சூரி, மயில்சாமி போன்றவர்கள் இதற்காக படாதபாடுபட்டாலும் சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது.




கதாநாயகி திடீரென காதலிக்கிறார். திடீரெனப் பிரிகிறார். திடீரென சேர்கிறார் என்று படம் பார்ப்பவர்களுக்கு தலைசுற்ற வைக்கிறார்கள். இதற்கு நடுவில் சண்டைகள், திடீர் பாடல்கள் வேறு. உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை, மனிதன் படத்தோடு ஒப்பிட்டால் இந்தப் படம் ஒரு பின்னோக்கிய பயணம்.

வில்லனாக வரும் பார்த்திபன், வித்தியாசமாக ஏதோ செய்ய முயற்சிக்கிறார். நாயகி நிவேதா பெத்துராஜ், நகைச்சுவை நடிகர்கள் சூரி, மயில்சாமி ஆகியோருக்கு மற்றும் ஒரு படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்