நிர்மலா சீதாராமன்: ‘’வங்கிகள் இணைப்பால் யார் வேலையும் பறிக்கப்படாது’’
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (17:12 IST)
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது வங்கி ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளது குறித்து பேசிய நிதிஅமைச்சர், வங்கிகள் இணைக்கப்படுவதால் ஒரு வங்கி ஊழியரின் வேலைகூட பறிக்கப்படாது என அழுத்தமாக பதிவுசெய்தார்.
''பொதுத்துறை வங்கிகளை மேலும் மேம்படுத்துவதற்காகத்தான் இணைக்கிறோம். ஒரு வங்கி ஊழியரின் வேலையைக்கூடப் பறிக்கமாட்டோம். இதுவரை அவர்கள் செய்த அதே வேலையை தொடரப்போகிறார்கள். அவர்கள் செய்யும் வேலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் வங்கியோடு நான்கு வங்கிகளை இணைத்தோம். வேலைவாய்ப்பை யாரும் இழக்கவில்லை,'' என தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு(என்எஸ்எஸ்ஓ) வெளியிட்ட கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் உழைக்கும் வயதில் உள்ள மக்கள் தொகையில் பாதிபேர் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தவிதத்திலும் பங்களிக்கவில்லை என தெரிவித்துள்ளது. தற்போது மோட்டார் வாகனத்துறையில் கடுமையான வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்பு இழப்புகளை சரிசெய்ய அரசு என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற கேள்வியை முன்வைத்தது பிபிசிதமிழ்.
''என்எஸ்எஸ்ஓ வெளியிட்ட புள்ளிவிவரத்தில் அமைப்பு சார்ந்த தொழில்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் மட்டுமே கணக்கெடுப்பில் வந்தன. இந்தியாவில் அமைப்புசாராத தொழிலில்தான் பெருமளவு மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். அந்த துறையில்தான் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. அந்த துறைகள் பற்றி புள்ளிவிவரங்கள் இந்த கணக்கெடுப்பில் இல்லை. மோட்டார் வாகனத்துறையில் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து அந்த துறைசார்ந்தவர்களோடு நாங்கள் பேசிவருகிறோம். அதேபோல அமைப்புசாராத துறையை சேர்ந்தவர்களோடும் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்,''என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அமைப்புசாராத தொழிலில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க அமைச்சர் முன்னெடுப்புகளை எடுக்கலாமா என கேட்டபோது, விவரங்களை சேகரிக்கும் துறை மற்றொரு அமைச்சகத்திடம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அமைப்புசாராத துறைகளில் ஒன்றான விவசாயத்துறையை சேர்ந்தவர்களோடு ஆலோசனைகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மோட்டார் வாகனத்துறையில் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து விளக்கமாக பேசிய அவர், ''உச்சநீதிமன்ற ஆணையின்படி, இந்தியாவில் மாசுக்கட்டுப்பாடு விதிகளின் படி மார்ச் 2020ல் இருந்து எல்லா மோட்டார் வாகனங்களிலும் மேம்படுத்தப்பட்ட பிஎஸ்6 என்ற தரத்தில் என்ஜின் பொருத்தப்படவேண்டும்.
தற்போதுள்ள பிஎஸ்4 என்ஜின் பயன்பாடு நிறுத்தப்படவேண்டும். இதனால் பிஎஸ்6 வாகனங்கள் தற்போது விலை அதிகமாக உள்ளன. அவை அடுத்த ஆண்டு விலை குறைய வாய்ப்புள்ளது என்பதால் அப்போது வாங்கலாம் என வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப்போடுகிறார்கள்,''என்கிறார்.
''மோட்டார் வாகன நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்க சிரமப்படுகிறார்கள். முற்றிலுமாக பிஎஸ்6 தரத்திற்கு மாறுவதற்கு ஜிஎஸ்டி வரி குறைக்கவேண்டும் என்றும் கோருகிறார்கள். இது ஜிஎஸ்டி கவுன்சில் தீர்க்கவேண்டிய பிரச்சனை. இதனை படிப்படியாக சீர்செய்ய நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்,''என்றார்.
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட காணொளியில் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டதற்கு அவசரமாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான் காரணம் என்றும் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளதற்கு நிதி அமைச்சராக அவரது பதில் என்ன என செய்தியாளர்கள் கேட்டபோது அவர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.