நீலகிரி: 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - அரிதாகி வருவது ஏன்?

Prasanth Karthick

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:55 IST)

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன.

 

 

நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக் காரணம் என்ன? நீலக்குறிஞ்சி மலர்களின் பண்புகள் என்ன? இவை எந்தச் சூழலில் வளர்கின்றன? இந்த மலர் உள்ளூர் கலாசாரத்தில் எத்தகைய முக்கியத்துவம் வகிக்கிறது?

 

நீலகிரி மலைக்குப் பெயர்கொடுத்த மலர்

 

தமிழர்களின் ஐந்திணைகளில் ஒன்றான மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சிக்கு, அந்தப் பெயர்க்காரணம் வந்ததற்கு அங்கு பூக்கும் நீலக்குறிஞ்சிதான் காரணம் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

ஆங்கிலேயர் டபிள்யு.பிரான்சிஸ் எழுதிய ‘நீலகிரி அகராதி’ என்ற நூலில், நீலகிரிக்கு நீலமலை என்று பெயர் வந்ததற்கான காரணம், இந்த நீலக்குறிஞ்சி என்று பதிவிடப்பட்டுள்ளது.

 

ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா (Strobilanthes Kunthiana) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக்குறிஞ்சி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதால் அரிதிலும் அரிதான ஓர் இனமாகக் கருதப்படுகிறது.

 

ஆசியப் பல்லுயிர்ச் சூழலைப் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு வரும் இந்தோனேஷியாவின் சூழலியல் இதழான டேப்ரோபணிகா (Taprobanica, The Journal of Asian Biodiversity) இந்த நீலக்குறிஞ்சியின் தன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

 

நீலக்குறிஞ்சி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

 

நீலக்குறிஞ்சியைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்களான பிரதீப் மற்றும் பின்ஸி ஆகியோர், இதுபற்றி பல அரிய தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டர்.

 

“தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரங்களில்தான் நீலக்குறிஞ்சிச் செடிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே, இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது,” என்கின்றனர் அவர்கள்.

 

இந்த மலர்களிடம் வசீகரிக்கும் வாசம் இல்லாவிடினும் ஒரு மென்மையான வாசம் இருக்கும். பூக்கும் காலங்களில் இவற்றை 10-க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருகின்றன. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் இந்த செடிகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை, என்கின்றனர் அவர்கள்.

 

வளர்ச்சி தடைபடக் காரணம் என்ன?

 

"தேனி மாவட்டம் மேகமலையிலுள்ள குறிஞ்சி மலர்ச்செடி, ஒன்றரை மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இந்தச் செடிகள், பழங்களை விளைவித்து, அதிலிருந்து விதைகளை வெடித்துச் சிதறச் செய்தபின், மடிந்து விடுகின்றன. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே இவை வளர்வதால், தாவர உண்ணிகள் மேயும்போது, இந்தச் செடிகளையும் மேய்ந்து விடுகின்றன. அதனால் பூக்கும் முன்னே அழிந்து விடுவதும் அதிகம் நடக்கிறது,” என்கிறார் ஆராய்ச்சியாளர் பிரதீப்.

 

மேலும், “வன உயிரினங்களைப் போலவே, மனிதர்களாலும் இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் இவர்கள். குறிப்பாக, கடும் வெப்பத்தால் இயற்கையாகவோ அல்லது மனிதச் செயல்களாலோ ஏற்படும் காட்டுத்தீயால் நீலக்குறிஞ்சி அழிந்துவிடுகிறது," என்று ஆராய்ச்சியாளர் பிரதீப் தெரிவிக்கிறார்.

 

உயரமான புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் இவை வளரும்போது, காற்றின் வேகமும் இதன் வளர்ச்சிக்குத் தடையாகி, அதன் உயரம் குறைந்து போகக் காரணமாக இருப்பதாகச் குறிப்பிடுகிறார் பின்ஸி.

 

சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிரச்னைகள்

 

இவர்கள் இருவரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் முழுவதிலும், தங்கள் தாவரவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நீலகிரி வனக்கோட்டத்தில் மட்டுமின்றி, தென்காசியின் குற்றாலம், தேனியின் மேகமலையிலும், வெவ்வேறு வகையான குறிஞ்சி வகைகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேகமலையில் 500 மீட்டரிலிருந்து 900 மீட்டர் வரை உயரமுள்ள மலைப்பகுதிகளில், வேறு விதமான குறிஞ்சி பூப்பதை இவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகைக் குறிஞ்சி, ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாக அங்குள்ள உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

நீலகிரி, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசம் என்பதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர்த்து, வேறு பகுதிகளிலும் ரிசார்ட்கள் மற்றும் தனியார் விடுதிகளில் பலரும் தங்குகின்றனர்.

 

காப்புக்காட்டுக்குள் உள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களைக் காண்பிப்பதாகக் கூறி, அங்குள்ள வழிகாட்டிகள் பலரும், பல ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, வனத்துறையின் முறையான அனுமதியின்றி மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார், ஊட்டியிலுள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள்.

 

கடந்த வாரத்தில், வனப்பகுதிக்குச் செல்லும் சாலையில் வந்த சுற்றுலா வாகனத்தை வனத்துறையினர் சோதனையிட்டபோது, அந்த காரின் பின்பகுதியில், ஏராளமான நீலக்குறிஞ்சிச் செடிகள், வேரோடு பறிக்கப்பட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நீலக்குறிஞ்சி எந்தப்பகுதியில் பூத்திருப்பது என்பதைக் கூட, தாங்கள் குறிப்பிட விரும்புவதில்லை என்கின்றனர் அப்பகுதியில் உள்ளவர்கள். இதையே வனத்துறையினரும் வலியுறுத்துகின்றனர்.

 

கண்காணிக்கும் வனத்துறையினர்

 

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கெளதம் பிபிசி தமிழிடம் கூறுகையில், “நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி மற்றும் கோத்தகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், 20 ஹெக்டேருக்கும் (50 ஏக்கர்) அதிகமான பரப்பளவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்களிலும் பல இடங்களில் பூத்திருப்பதால், ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்தபடி அதை ரசிக்கின்றனர்,” என்றார்.

 

மேலும், “சாலையோரம் நின்று இப்பூக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை நாம் தடுப்பதில்லை. ஆங்காங்கே வனத்துறை ஊழியர்களை நிறுத்தி, செடிகளைப் பறிக்காதவாறும் உள்ளே செல்லாத வகையிலும் கண்காணித்து வருகிறோம். காப்புக்காட்டுப் பகுதிக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு யாரும் செல்ல முடியாத வகையில் தீவிரமாகக் கண்காணிக்கிறோம்,” என்றார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்