கொரோனா வைரஸ் புதிய திரிபு பிரான்ஸ் நாட்டில் தொற்றியது கண்டுபிடிப்பு
சனி, 26 டிசம்பர் 2020 (23:57 IST)
பிரிட்டனில் புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு பிரான்ஸில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். டிசம்பர் 19ஆம் தேதி அவர் லண்டனிலிருந்து பிரான்ஸ் சென்றுள்ளார்.
அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவி வருவது கண்டறியப்பட்டபின் டஜன் கணக்கான நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன.
பிரான்ஸ் தனது எல்லைப்பகுதியை மூடியிருந்தது. இருப்பினும் அந்த தடை புதன்கிழமையன்று நீக்கப்பட்டது. ஆனால், பயணம் செய்ய விரும்புவோர் கொரோனா நெடிகவ்-ஆக இருக்க வேண்டும்.
பிரான்ஸில் முதல் தொற்று
பாதிக்கப்பட்ட நபருக்கு டிசம்பர் 21ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது என பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளிலும் இந்த புதிய கொரோனா திரிபு தொற்றியவர்கள் கண்டறியப்படுகின்றனர். வெள்ளியன்று பிரிட்டனிலிருந்து ஜப்பான் சென்ற ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
கடந்த வாரம் பிரான்ஸ் தேசிய பொது முடக்கத்தை நீக்கியது. இருப்பினும் முழுமையான தளர்வுகள் செய்யும் வகையில் அந்நாட்டில் தொற்று குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.