கொரோனா வைரஸ்: புதிய பாதுகாப்பு வழிமுறைகள்

சனி, 8 ஜனவரி 2022 (15:32 IST)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நலன் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை கடந்த ஜனவரி 5ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
 
ஒமிக்ரான் திரிபின் பரவல் வேகமெடுத்துள்ளதால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கோவிட் அறிகுறிகள் தென்படாதவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் தொற்று உறுதியாகி ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், அதன் பின்பு தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்று உறுதியாகும்வரை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறியுள்ளது.
 
ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ள முக்கிய வழிமுறைகள் இதோ...
 
அறிகுறிகள் இருந்தால் காட்டாயம் செய்ய வேண்டியவை:
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு, எந்த வித அறிகுறிகளும் இல்லை எனில் 7 நாட்கள் வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
கொரோனா அறிகுறிகள் உள்ள நபரோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
 
கொரோனா அறிகுறிகள்:
காய்ச்சல், சளி, தலைவலி, தொண்டை வலி, வாசனைகள் தெரியாமல் போவது, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், நாக்கில் சுவை தெரியாமல் போவது போன்றவை கொரோனா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகள்.
 
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வோர் என்ன செய்ய வேண்டும்?
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.
 
ஒரு மணி நேரத்துக்குள் மூன்று முறை பரிசோதித்தும் 93 சதவீதத்துக்கு குறைவாக ஆக்சிஜன் அளவு இருந்தாலோ, சுவாசிக்க முடியாத நிலை அல்லது தலைசுற்றல் இருந்தாலோ, தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் 100 டிகிரி குறையாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
 
வீட்டிலேயே இருப்பது, அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வது, வீட்டிலும் மற்ற குடும்ப உறுப்பினர்களோடு நெருக்கமாக இல்லாமல் தனித்து இருப்பது, நன்றாக ஓய்வெடுப்பது அவசியம்.
 
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். தனிமைப்படுத்திக் கொள்ளும் அறையில் காற்று உள்ளே வந்து வெளியே செல்வதற்கான வழி இருக்க வேண்டும்.
 
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வோர் செய்யக் கூடாதவை:
வீட்டில் ரெம்டிசீவர் மருந்து மற்றும் பியூடசனைடு (Budesonide) நெபியுலைசர்களைப் பயன்படுத்த வேண்டாம்.
 
மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டாம்.
 
அதே போல சிடி ஸ்கேன்களையும் எடுக்க வேண்டாம்.
 
சிகிச்சை என்ன:
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் நிறைய சூப், இளநீர் குடிக்கலாம். மார்பு தரையில் படும்படி குப்புறப் படுப்பது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.
 
ஆறு மணி நேர இடைவெளியில் பாராசிடமால் மாத்திரை மற்றும் தேவைப்பட்டால் இருமல் மருந்து எடுத்து கொள்ளலாம். அது போக ஆவிபிடிப்பது மற்றும் சூடான நீரில் வாய் கொப்பளிப்பதும் நலம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்