சிந்து மாகாண வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் - இந்திய எதிர்ப்பை கடுமையாக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்!

வெள்ளி, 18 மார்ச் 2022 (09:43 IST)
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாம்ஷோரோ என்ற பகுதி குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை (மார்ச் 17) பகல் 12 மணியளவில் அடையாளம் தெரியாத பொருள் வானில் பறந்ததாகவும் அது ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையை ஒத்திருந்தது என்றும் அந்த மக்கள் கூறியதாக இந்திய செய்தி முகமையான ஏஎன்ஐ வியாழக்கிழமை நள்ளிரவு அதன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
 
இந்திய மண்ணில் இருந்து புறப்பட்ட ஏவுகணை வடிவிலான பொருள் ஒன்று கடந்த வாரம் பாகிஸ்தானின் மண்ணில் விழுந்து இரு தரப்பிலும் பதற்றத்தை தூண்டியிருந்தது. அந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாக தற்போது பாகிஸ்தான் வான் பகுதியில் பறந்த ஏவுகணை ஆக கருதப்படும் பொருள் அதன் சொந்த மண்ணுக்குள்ளேயே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த ஏவுகணையை ஒத்த பொருள், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சிலரது தகவல்களின்படி, அந்த ஏவுகணை காலை 11 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டதாகவும் அதன் டிஇஎல் எனப்படும் டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவும் நடவடிக்கை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு கடைசியில் சுமார் பகல் 12 மணிக்கு நடத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
 
இருப்பினும், ஏந்த ஏவுகணையை ஒத்த பொருள் வானில் பறந்த சில விநாடிகளுக்குப் பிறகு, ஏவுகணை பாதையில் இருந்து விலகி சிந்துவில் உள்ள தானா புலா கான் அருகே விழுந்தது.
 
சில பாகிஸ்தான் செய்திச் சேனல்கள் நடந்த சம்பவம் தொடர்பான தகவல்களை ஒளிபரப்பின. ஆனாலும் இதுவரை ஏவுகணை பறந்த தகவல் தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடாமல் அந்நாட்டு ராணுவம் அமைதி காக்கிறது.
 
இதேவேளை, இந்த சாதனம், வழக்கமான பரிசோதனைகளின்படி சுடப்பட்ட மோர்டார் டிரேசர் ரவுண்ட் என்று உள்ளூர் நிர்வாகம் கூறுகிறது. இது ஒரு ஏவுகணை நடவடிக்கை என்ற தகவலை நிர்வாகம் மறுக்கிறது என்றும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
ஆனால், அதிகபட்சமாக 5 கி.மீ தூரம் மட்டுமே செல்லக் கூடிய மோட்டார் டிரேசரால் வானில் அவ்வளவு உயரத்துக்கு செல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
 
பாகிஸ்தானின் ஏஆர்ஒய் செய்தி சேனலின் நிருபர் ஒருவரின் கூற்றுப்படி, "வானில் பறந்த பொருள், விமானம், ராக்கெட் அல்லது அது போன்ற ஏதாவது ஒன்று திடீரென கீழே விழுந்ததாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று கூறியுள்ளார்.
 
சிந்து மாகாணத்தில் உள்ள ஜாம்ஷோரோவில் பறக்கும் பொருள் வானில் இருந்து விழும் படத்தை சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 
அந்தப் பொருள் கீழே விழும்போது, எரிந்ததால் ஏற்படும் வெள்ளை நிற புகை வால் போல கீழே இறங்குவது போல படத்தில் தெரிந்தது.
 
இந்தியாவுக்கு எதிர்வினையா?
 
AEROSINT Division PSF எனப்படும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வு அமைப்பின் கணக்கு, அதன் ட்விட்டர் பக்கத்தில் அறியப்படாத பொருள் ஒன்றை பாகிஸ்தான் படைகள் சோதனை செய்ததாக கூறியுள்ளது.
 
"சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவைப் பொறுத்தவரை, இந்த நகரத்தின் அருகே உள்ள பாகிஸ்தானிய படைகள் அவற்றின் சோதனை வரம்புக்கு உட்பட்டு இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இதில் பீதியை உருவாக்க எந்த காரணமும் இல்லை" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
மேலும், "பரிசோதனை நடத்தப்பட்ட போது அந்த வான் பகுதியில் எந்த விமானமோ ஹெலிகாப்டரோ பறக்கக் கூடாது என்ற முன் அறிவிப்பு நடைமுறை ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டது,"என்றும் இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் NOTAM குறிப்பும் ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருக்கிறது AEROSINT Division PSF அமைப்பு.
 
NOTAM அல்லது விமான ஊழியர்களுக்கான முன்னறிவிப்பு. அது தொலைத்தொடர்பு மூலம் விநியோகிக்கப்படும் முன்னெச்சரிக்கை அல்லது அவசர அறிவிப்பு ஆகும், இது வானூர்தி வசதி, சேவைகள், அவற்றுக்கான பாதையில் அசாதாரண அல்லது ஆபத்தை எச்சரிக்கும் குறிப்பை உணர்த்த பயன்படுகிறது,
 
இந்த நிலையில், "கடந்த வாரம் இந்தியாவால் ஏவப்பட்ட ஒரு தற்செயலான ஏவுகணை போன்ற பொருள், பாகிஸ்தான் மண்ணில் விழுந்தது. அதற்கு கிட்டத்தட்ட பதிலடி தரும் நடவடிக்கையாகவே இந்த ஏவுகணையை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும்," என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ப்ளூம்பெர்க் புதன்கிழமை தெரிவித்தது.
 
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இதேபோன்ற ஏவுகணையை ஏவ தயாராக அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஏவுகணை சோதனை நடத்தும் போது பாகிஸ்தானுக்கு அதன் ஆரம்ப மதிப்பீட்டில் "ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்" என்றும் அதனாலேயே அது செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறுகிறது ப்ளூம்பெர்க்.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 2
 
Twitter பதிவின் முடிவு, 2
மார்ச் 9ஆம் தேதி தலைநகர் புது டெல்லிக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் (125 மைல்) தூரத்தில் உள்ள அம்பாலா என்ற விமானப்படை தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஒத்த வடிவிலான பொருள் வழக்கமான பரிசோதனையின்போது திடீரென இயங்கி பாகிஸ்தான் மண்ணில் விழுந்ததாக கூறப்பட்டது.
 
போர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்களை சரிபார்க்கும் வழக்கமான பயிற்சியின் போது மனித மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை கூறியது. நடந்த சம்பவத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் விழுந்த பொருள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
 
வட இந்திய நகரமான சிர்சாவில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு நகரில் விழுந்த அந்த ஏவுகணை போன்ற பொருள் தங்கள் மண்ணை நோக்கி பறந்து வந்ததை பாகிஸ்தான் விமானப்படை கண்காணித்ததாக தெரிவித்துள்ளது.
 
பொதுவாக க்ரூஸ் ஏவுகணைகளை இயக்கும் போது அவை எங்கு தாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் அவை துல்லியமாக இலக்கை தாக்கும். ஆனால் பாகிஸ்தான் மண்ணில் விழுந்த பொருள் ஆயுதமற்ற நிலையில் வெறும் கலனாகவே விழுந்திருக்கிறது.
 
இந்த நிலையில், இந்தியா இரு தினங்கள் கழித்து தனது நிலையை தெளிவுபடுத்தி நடந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தது. இதற்கிடையே, இந்திய ஏவுகணையை ஒத்த பொருள் தங்கள் மண்ணில் விழுந்த தகவலை பாகிஸ்தான் ராணுவமும் மிகப்பெரிய அளவில் செய்தியாளர்கள் சந்திப்பைக் கூட்டி பகிர்ந்தது.நடந்த சம்பவத்துக்கும் தமது எதிர்ப்பை பாகிஸ்தான் ராணுவம் பதிவு செய்தது. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் விரும்பியிருந்தால் திருப்பித் தாக்கியிருப்போம். ஆனால், கட்டுப்படுத்திக் கொண்டோம் என்று ஒரு கட்சிப்பேரணியில் பேசினார்.
 
இந்த நிலையில், செவ்வாய்கிழமை (மார்ச் 16) நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்செயலான ஏவுகணை இயக்கத்துக்கு வித்திட்ட சம்பவத்துக்கான காரணத்தை முறையான விசாரணை மூலம் வெளிப்படுத்தும் என்று உறுதியளித்தார். "இந்தியா தனது ஏவுகணை அமைப்புகளின் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது என்று," என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 
"இந்த ஆய்வில் ஏதேனும் குறைபாடு இருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக சரிசெய்யப்படும்" என்று சிங் கூறினார்.
 
இந்தியாவின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
 
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான ஷெர்ரி ரஹ்மானும் இந்த விஷயத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ராணுவ செலவில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது, அப்படியிருக்க இந்தியா எப்படி 'வழக்கமான சோதனையின்' போது இவ்வளவு பெரிய தவறைச் செய்ய முடியும்?
 
"எப்படி ஒரு ஏவுகணை 'தற்செயலாக' எல்லை தாண்டி பக்கத்து நாட்டில் வந்து விழும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. அணுசக்தி வளமுள்ள நாடுகளுக்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் தெளிவாகத் தேவை. இந்தியா இதை இன்னும் சிறப்பாக விளக்க வேண்டும் என்று ஷெர்ரி ரஹ்மான் வலியுறுத்தினார்.
 
இந்த விஷயத்தில் சர்வதேச சமூகம் மெளனம் சாதிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தான் இப்படியொரு ஏவுகணையை ஏவி அது இந்திய மண்ணில் விழுந்திருந்தால் அதைப்பார்த்துக் கொண்டு அந்த நாடு (இந்தியா), இன்னும் அமைதியாக இருக்குமா? என்று ஷெர்ரி கேள்வி எழுப்பினார். இதேவேளை, செய்தியாளர் சந்திப்பில் செவ்வாய்கிழமை பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இந்த விஷயத்தில் இந்தியாவின் கூற்றை ஏற்பது போல அமெரிக்க வெளியுறவுத்துறை வெளிப்படுத்திய கருத்துக்கு எதிர்வினையாற்றினார்.
 
இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட பரிசோதனை ஏவுகணை வெறும் தற்செயலான விஷயமே தவிர வேறில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியிருந்தார். இதை சுட்டிக்காட்டிய மஹ்மூத் குரேஷி, இந்தியாவின் தற்செயல் ஏவுகணை விவகாரத்தை ஐநா பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஜெர்மனிக்கும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
பிடிஐ செய்தி நிறுவன தகவலின்படி, இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கை போதுமானதாக இல்லை என்று மஹ்மத் குரேஷி நிராகரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கூட்டு விசாரணைக்கு அவைப்பு விடுக்கும் குரேஷி, ஏவுகணை சோதனை பரிசோதனை நடவடிக்கையின் அங்கமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, பராமரிப்பு விவரம், அது பறந்து வந்த பாதை போன்ற தொழில்நுட்ப தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இப்படியொரு சம்பவத்தால், பெரும் அசம்பாவிதம் நடந்திருந்தால் அது பிராந்திய அமைதிக்கு கடும் ஆபத்தை விளைவித்திருக்கும் என்றும் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்