மிகையீல் கோர்பச்சேவ் காலமானார்: சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர்

புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:55 IST)
சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்திய சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் என்று வரலாற்றில் பல அடையாளங்கள் கொண்ட மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார்.


1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வந்த இவர் நாட்டின் இரும்புத் திரை கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை உலகுக்கு திறந்து விட்டார். உள்நாட்டிலும் பல சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தார். ஆனால், கடைசியில் சோவியத் ஒன்றியம் சிதைவதை இவரால் தடுக்க முடியவில்லை. ரஷ்யா, யுக்ரேன் உள்ளிட்ட பல நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் சிதைவை அடுத்த தனித்தனி நாடுகளாக உருவாயின.

மிகையீல் கோர்பச்சேவ், வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்று கூறி ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்டரஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். "மிகையீல் கோர்பச்சேவ் இரக்கம் மிகுந்த அரசியல் தலைவர். அமைதிக்காக சோர்வின்றி பாடுபட்ட, பலமுனை உறவுகளுக்கு ஆதரவான, மிக உயர்ந்த தலைவர் ஒருவரை உலகம் இழந்துவிட்டது" என்று அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கோர்பச்சேவ் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் என்று ரஷ்ய செய்தி முகமையான இன்டர்ஃபேக்சிடம் தெரிவித்துள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்.

"நம்பகமான, மரியாதைக்குரிய தலைவர்," என்று அவரை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் புகழ்ந்து உரைத்துள்ளார்.

கோர்பச்சேவின் துணிச்சலையும், நம்பகத் தன்மையையும் எப்போதும் வியந்து வந்ததாகவும், சோவியத் சமூகத்தை அவர் திறந்துவிட்டது, புதினின் ஆக்கிரமிப்புக் காலத்தில் எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நீண்ட காலம் நீடித்த, தீவிர நோய் ஒன்றின் காரணமாக அவர் இறந்துவிட்டதாக மாஸ்கோவில் அவர் சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சேருவதும், வீட்டுக்குத் திரும்புவதுமாக அவர் இருந்தார். சிறுநீரக கோளாறு ஒன்றுக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கடந்த ஜுன் மாதம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அவரது மறைவுக்கான காரணம் தற்போது விவரிக்கப்படவில்லை.

வரலாறு

1985ம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அதன் வழியாக நாட்டின் தலைவராகவும் ஆனவர் கோர்பச்சேவ்.

அப்போது அவரது வயது 54. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோவின் இளம் உறுப்பினர் அவர். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் சுமார் ஓராண்டு இருந்த கோன்ஸ்டான்டின் செர்னென்கோ தமது 73வது வயதில் இறந்த நிலையில் இளம் தலைவரான இவர் பதவிக்கு வந்தார்.

கடுமையான கட்டுப்பாடுகளால் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் மக்கள் அரசாங்கத்தை விமர்சிக்க அனுமதிக்கும் 'கிளாஸ்னாஸ்ட்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த சொல்லுக்கு 'வெளிப்படையாக' என்று பொருள். அதே நேரம் சோவியத் ஒன்றியத்தின் பல பகுதிகளில் தேசியவாத உணர்ச்சியைக் கிளறினார். இதன் பலனாக ஒன்றியம் சிதறியது.

அமெரிக்காவுடன் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு உலக அமைதிக்கு பங்களித்தார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சிலருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தபோது சோவியத் ஒன்றியத்தின் சார்பில் அவர் தலையீடு செய்யவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்