மத்திய கிழக்கை 2021இல் உலுக்கிய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் - நினைவுச்சுவடுகள்
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (23:29 IST)
காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மெதுவாகவே நடந்து வருகின்றன.
அது ஒரு சுருக்கமான மோதலாக இருந்தது, ஆனால் அதன் தீவிரம் உலகம் முழுவதும் எச்சரிக்கையையும் கவலையையும் உருவாக்கியது.2021ஆம் ஆண்டு மே மாதத்தில், இஸ்லாமியவாத குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் (IDF) இடையே கடுமையான மோதல் நடந்தது. அது 11 நாட்கள் நீடித்தது.அந்த காலகட்டத்தில், ஆயுதமேந்திய குழுக்கள் காஸா பகுதியில் இருந்து மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மற்றும் பிற பகுதிகளை நோக்கி 4,300 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவின, அதே நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் மக்கள் அடர்த்தியான பாலத்தீன பிரதேசத்தில் சுமார் 1,500 வான்வழி குண்டுவீச்சுகளை நடத்தியது, இஸ்ரேலின் நடவடிக்கைகள் காரணமாக 130 பொதுமக்கள் உட்பட குறைந்தது 230 பேர் இறந்தனர். பாலத்தீன குழுக்களால் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலில் 13 பேரையும் - காஸாவிலேயே சுமார் 15 பாலத்தீனர்களையும் கொன்றது.முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் இருவருக்கும் புனிதமான ஜெருசலேமில் இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் பாலத்தீன எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் வன்முறை மோதல்களால் உருவாக்கப்பட்ட பதற்றங்களுக்குப் பிறகு இந்த எழுச்சி தீவிரமானது.
இந்த நேரத்தில், இஸ்ரேலிய பிரதேசத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசத் தொடங்கியது. அதற்கு இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீச்சு மூலம் எதிர் தாக்குதல் தொடுத்தது.
கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மூவர் காயம்
இஸ்ரேல் - காசா மோதல்: எந்த நாடுகள் யார் பக்கம்?ஹமாஸ் போராளியான பாலத்தீன ஆசிரியரால் ஜெருசலேமில் இஸ்ரேலிய சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டது போன்ற செயல்பாடுகள் இருந்தபோதிலும், சண்டை நிறுத்த உடன்படிக்கை பெரும்பாலும் பராமரிக்கப்பட்டு வந்தது.பிபிசி முண்டோ இஸ்ரேலுக்கும் இந்த பாலத்தீன இஸ்லாமியவாத குழுவிற்கும் இடையிலான சண்டை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட நான்கு மாற்றங்களைப் பற்றி உங்களுக்கு விவரிக்கிறது.
1. ஹமாஸின் எழுச்சியும் வீழ்ச்சியும்
மே மாதம் மோதல் காஸாவில் விரிவான கட்டமைப்பு சேதத்துடன் முடிவடைந்தது, இதில் சுமார் 1,000 வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன. இருந்த போதிலும், ஹமாஸ் தன்னை மோதலில் வெற்றி பெற்றதாக அறிவித்தது.
மே மாதம் நடந்த இஸ்ரேலுக்கு எதிரான மோதலுக்குப் பிறகு, பாலத்தீனர்கள் இடையே ஹமாஸின் புகழ் உயர்ந்தது.
பாலஸ்தீன கொள்கை மற்றும் ஆய்வு ஆராய்ச்சி மையம் (PCPSR) ஜூன் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில், முக்கால்வாசி பாலத்தீனர்கள் இஸ்ரேலுடனான அதன் மோதலில் இந்த அமைப்புதான் வெற்றி பெற்றதாக நம்புவதாகத் தெரியவந்துள்ளது.மிக முக்கியமாக, 53% பாலத்தீனர்கள் இஸ்லாமிய இயக்கம் பாலத்தீன மக்களை "பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் மிகவும் தகுதியான" குழுவாகக் கருதுவதாகக் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது, இது பாலத்தீன அதிகாரத்தின் தலைவர் தலைமையிலான கட்சியான ஃபதாவை விட மிகவும் முன்னால் உள்ளது. அந்த முடிவு பாலத்தீன தலைமைக்காக ஃபதாவுடனான அதன் வரலாற்றுப் போரில் ஹமாஸை முன்னிலைப்படுத்தியது.இருப்பினும், இந்த டிசம்பரில் நடத்தப்பட்ட PCPSR கருத்துக் கணிப்பில், மே மாத மோதலுக்குப் பிறகு ஹமாஸ் அடைந்த புகழ் கணிசமாகக் குறைந்துள்ளது, இப்போது 34% பேர் மட்டுமே இந்த இஸ்லாமியக் குழு பாலத்தீனர்களை வழிநடத்தத் தகுதியானது என்று நம்புகிறார்கள், அதே நேரத்தில் 23% பேர் ஃபதாவை நோக்கிச் சாய்ந்துள்ளனர்.கருத்துக்கணிப்பாளரின் கூற்றுப்படி, இந்த முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட "ஹமாஸ் தலைமையின் மீதான தெளிவான ஏமாற்றத்தை" பிரதிபலிக்கின்றன.
விளம்பரம்
2. பாலத்தீனர்களுக்கு அதிக வேலை… இஸ்ரேலில்
காஸாவில் வேலையின்மை விகிதம் 40% க்கும் அதிகமாக உள்ளது. பல காரணிகள் அந்த பிராந்தியத்தில் பொருளாதார நிலைமைகளை மிகவும் கடினமாக்குகின்றன. இஸ்ரேல் மற்றும் எகிப்தால் கடைப்பிடிக்கப்படும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், காஸாவாசிகளுக்கு வெளியே வாழ்வாதாரத்தை உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்துகின்றன.
இஸ்ரேல் அந்த நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட காசா மக்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தியது.
காஸா குடியிருப்புவாசிகளுக்கு இஸ்ரேல் அதிக வேலை அனுமதிகளை வழங்கும் என்று அக்டோபரில் வதந்திகள் பரவியபோது, காஸாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.மே மாதத்தில் மோதல் முடிவடைந்ததிலிருந்து, இஸ்ரேலிய அதிகாரிகள் மீண்டும் காஸாக்களுக்கான பணி அனுமதிகளை வழங்கத் தொடங்கினர், அவற்றின் எண்ணிக்கை பாதுகாப்புக் கருத்தில் படிப்படியாக அதிகரித்தது.
செப்டம்பரில், இஸ்ரேல் காசா குடியிருப்புவாசிகளுக்கு 7,000 வேலை அனுமதிகளை வழங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது, ஆனால் அக்டோபரில் மேலும் 3,000 பேரை சேர்ப்பதாக அறிவித்தது. இதன் மூலம் மொத்த வேலை அனுமதி எண்ணிக்கை 10,000 ஆனது. இப்பகுதியில் நிலவும் பலவீனமான அமைதியைப் பாதுகாப்பதற்கான விருப்பத்தின் அடையாளமாக இந்த செயல்பாடு நிபுணர்களால் விளக்கப்பட்டது.ஆனால் அது மட்டும் அல்ல: இஸ்ரேல் மீன்பிடி மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளது, அதில் காசா மக்களும் மீன்பிடிக்க முடியும். காஸா நீரிணை ஏற்றுமதியை எளிதாக்குகிறது, மேலும் நவம்பரில் கத்தார் அரசாங்கம் ஹமாஸுக்கு வழங்கும் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாதாந்திர பரிமாற்றங்களை மீண்டும் செயல்படுத்த அங்கீகாரம் அளித்தது.
3. சுரங்கத்தில் ஒரு "ஸ்மார்ட்" சுவர்
டிசம்பர் 7 அன்று, காஸாவுடனான தனது எல்லையைச் சுற்றி ஒரு "ஸ்மார்ட்" தடுப்பைக் கட்டும் பணியை முடித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
காஸாவின் எல்லையில் 65 கிலோமீட்டர் நீளமுள்ள "ஸ்மார்ட் தடுப்பு" கட்டுமானத்தை இஸ்ரேல் முடித்தது.
சுரங்கம், வேலிகள், சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஒரு கடல் தடையை உள்ளடக்கிய அமைப்பு, 2014 போருக்குப் பிறகு வடிவமைக்கப்பட்டது, இந்த சுரங்கம் வழியாகவே ஹமாஸ் போராளிகள் எல்லையைக் கடந்து இஸ்ரேலின் துருப்புக்களை ஆச்சரியப்படுத்தினர். "ஸ்மார்ட் வேலி" 65 கிலோமீட்டர் நீளமும் ஆறு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த சுரங்கத்தின் ஆழத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிடவில்லை.இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இஸ்ரேலை தாக்குவதற்கு ஹமாஸ் பயன்படுத்திய ஒரு பொறிமுறையை பறிக்கும் வழியாக இந்த நடவடிக்கையை கொண்டாடினார்.எவ்வாறாயினும், இந்த சுவர் பற்றி விமர்சிப்பவர்கள், அதன் கட்டுமானமானது காஸாவை "உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை" என உறுதிப்படுத்த மட்டுமே உதவுகிறது என்று கூறுகின்றனர்.
4. ஒரு மறைமுக பேச்சுவார்த்தை
மோதலின் முடிவில் இருந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன, அவை எகிப்தின் மத்தியஸ்தத்துடன், போர் நிறுத்தத்தை நடைமுறையில் வைத்திருக்க அனுமதித்தன.
அப்தெல் ஃபத்தா அல் சிசியின் அரசாங்கம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு தரப்பும் அதன் கோரிக்கைகளைக் கொண்ட நீடித்த சண்டை நிறுத்தத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. பாலத்தீன பக்கத்தில், சரக்குகள் மற்றும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதைத் தவிர்த்து, முக்கிய நோக்கமாக காஸாவின் மறுவாழ்வை ஊக்குவிக்க விரும்புகிறது. இதற்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்கிறது உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை. இஸ்ரேலிய பத்திரிகைகளின் கூற்றுப்படி, பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு மேலதிகமாக, அந்நாட்டு அரசாங்கம் கைதிகள் பரிமாற்றத்தை அடைய உறுதிபூண்டுள்ளது, அதில் ஹமாஸ் மனநல பிரச்னைகளின் வரலாற்றைக் கொண்ட இரண்டு குடிமக்களான அவேரா மென்கிஸ்டு மற்றும் ஹிஷாம் அல்-சயீத் ஆகியோரை விடுவித்து, ஒப்படைப்பது அடங்கும். 2014இல் பாலத்தீன போராளிகளால் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்ட வீரர்களான ஹதர் கோல்டின் மற்றும் ஓரோன் ஷால் ஆகியோரின் உடல்களை ஒப்படைப்பதும் இந்த உத்தரவாதத்தில் அடங்கும்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் அல்லது அமெரிக்கா உட்பட காஸாவின் புனரமைப்புக்கான சாத்தியமான நன்கொடையாளர்கள் நிதியை வழங்குவதற்கான நிபந்தனைகளை போட்டதால், இந்த பேச்சுவார்த்தை மறைமுகமாக பல நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.சமீபத்தில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, இறுதியில் கைதிகளை பரிமாறிக்கொள்வதில் இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளால் தடங்களை சந்தித்ததாக தெரிகிறது.
2020ஆம் ஆண்டு டிசம்பரில் பாலத்தீன குழுக்களும் காஸாவில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த அதிருப்தியின் அறிகுறியாக, பாலத்தீன போராளிக் குழுக்கள் டிசம்பர் 15ஆம் தேதி ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டன. அந்த இஸ்லாமியவாத குழுவிடமிருந்து அதிக சலுகைகளைப் பெறும் நோக்கில், காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையை எகிப்து தேவையில்லாமல் தாமதப்படுத்துகிறது என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர்களைக் குற்றம்சாட்டி பிராந்தியத்தில் உள்ள பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.