மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் வல்லுறவு செய்த வளர்ப்பு தந்தைக்கு 1,050 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் - மலேசிய நீதிமன்றம்

வியாழன், 28 ஜனவரி 2021 (14:12 IST)
வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 2 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த  வழக்கில் நீதிபதி குணசுந்தரி நேற்று தமது தீர்ப்பை அளித்தார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
 
நேற்றைய வழக்கு விசாணை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. இந்த இறுதிநாள் விசாரணையில் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளைத் தனித்தனியே  வாசிக்குமாறு நீதிபதி தெரிவித்தார்.
 
இத்தகைய குற்றம் மிகக் கடுமையானது மட்டுமல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய அருவருப்பான செயல் என்றார் நீதிபதி குணசுந்தரி.
 
"இத்தகைய வன்முறைச் செயலில் நீங்கள் ஈடுபட்டிருக்கக்கூடாது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறைவான தண்டனைதான். சிறையில் இருக்கும்போது  நீங்கள் மனம் திருந்துவீர்கள் என நம்புகிறேன்," என்று நீதிபதி குணசுந்தரி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
 
எந்த வேலையும் பார்க்காத குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆடவர் தமது 12 வயது வளர்ப்பு மகளைக் கடந்த 2018, ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 2020 பிப்ரவரி 24ஆம்  தேதி வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். இத்தகைய குற்றத்துக்கு மலேசிய சட்டத்தில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முதல் அதிகபட்சம் 30  ஆண்டுகள் மிகாத சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் வழங்க வழி உள்ளது.
 
இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு கடுங்காவல் தண்டனையும் மிக அதிகபட்ச பிரம்படிகளும் வழங்கவேண்டும் என  அரசுத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
 
பொதுநலனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தண்டனை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 
"வளர்ப்புத்தந்தை என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பொறுப்புடன் பாதுகாத்திருக்க வேண்டும். மாறாக, அச்சிறுமியின்  சுயமதிப்பை இவரே அழித்துள்ளார். இத்தகைய செயல்பாடு பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்நாள் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்,"  என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
 
இத்தகைய முறையற்ற உடலுறவு மற்றும் பலாத்காரங்கள் திகிலூட்டுபவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்டு இத்தகைய செயல்பாடு  சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் தீவிரமான செயலாகவே பார்க்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பில் மேலும் குறிப்பிடப்பட்டது. இத்தகைய செயல்பாடுகள்  சட்டத்துக்கு மட்டும் அல்லாமல் மதபோதனைகளுக்கும் எதிரானவை என்றார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.
 
குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் சார்பில் யாரும் முன்னிலையாகாத (ஆஜராகாத) நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடும்  செய்யப்படவில்லை.
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் தற்போது குற்றம் இழைத்துள்ள  ஆடவரைக் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
 
குற்றச்செயல் நிகழ்ந்த சமயங்களில் எல்லாம் பாதிக்கப்பட்ட சிறுமியும் அந்த வளர்ப்புத் தந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். தனது பலாத்கார செயல்  குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தச் சிறுமியை மிரட்டியும் அடித்தும் உள்ளார் அந்த வளர்ப்புத் தந்தை.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தங்கையையும் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் சிறுமியின் தாய். அப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அந்தச் சிறுமி தெரியப்படுத்தியதை அடுத்து இந்தக் கொடுஞ்செயல் வெளியே தெரியவந்தது.
 
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக  வழங்கப்பட்டுள்ளது.
 
"சிறையில் மனம் திருந்துங்கள். நீங்கள் புரிந்திருப்பது அருவருப்பான செயல்," என்று நீதிபதி குற்றவாளியைப் பார்த்து அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்