மகராஷ்டிர அரசியல் நெருக்கடி: மாலை 5 மணிக்கு சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

புதன், 22 ஜூன் 2022 (15:05 IST)
சிவசேனை கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 ஆளும் கூட்டணி எம்.எல்..க்கள் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இன்று மாலை சிவசேனைக் கட்சி தமது எம்.எல்..க்கள் கூட்டத்தை கூட்டவுள்ளது.

மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் உத்தவ் தாக்கரே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவார் என்று ஐயம் இருந்தது. அது நடக்கவில்லை.

அதற்குப் பதிலாக சிவசேனைக் கட்சி தமது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடக்கும் என்று அறிவித்துள்ளது. கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்துக்கு வரவேண்டும் என்றும், வர முடியாதவர்கள் காரணத்தை தெரிவித்து கடிதம் அனுப்பவேண்டும் என்றும், அப்படி வரவும் வராமல் கடிதமும் அனுப்பாதவர்கள் கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கருதப்பட்டு அவர்களை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவசேனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே இன்று ஜுன் 22 மாலை மகாராஷ்டிராவை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியின் எதிர்காலம் பற்றித் தெரியவரும்.

சஞ்சய் ராவத் கருத்து

முன்னதாக, சிவசேனை கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், தற்போது மகராஷ்டிர அரசியலில் ஏற்பட்டிருக்கும் சூழல் ஆட்சியை கலைக்க வழி செய்யலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், "ஏக்நாத் ஷிண்டே எங்கள் கட்சியின் நீண்டகால உறுப்பினர். எங்களின் நண்பர். நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். ஒருவரை ஒருவர் விட்டுச் செல்வது அத்தனை எளிதானது இல்லை. இன்று காலை நான் அவரிடம் பேசினேன். இதை கட்சித் தலைவரிடமும் தெரிவித்துள்ளேன்." என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சஞ்சய் ராவத் பகிர்ந்த ஒரு ட்வீட்டில், "தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சூழல் சட்டசபை கலைப்பை நோக்கி செல்கிறது," என்று தெரிவித்தார்.

மேலும், ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்த ராவத், அனைவரும் சிவ சேனாவில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று தெரிவித்தார்.

"நமது கட்சி போராளிகள் நிறைந்த கட்சி. நாம் தொடர்ந்து போராடுவோம். இறுதியில் நாம் ஆட்சியை இழந்தாலும், தொடர்ந்து போராடுவோம்." என்று தெரிவித்தார் ராவத்.

உத்தவ் தாக்கரேவால் அரசை காப்பாற்ற முடியுமா?

மகாராஷ்டிராவின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் சிவ சேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக குரல் எழுப்பியபோது மகாராஷ்டிராவின் கூட்டணி அரசியலில் பிளவு ஏற்பட்டது.

மகராஷ்டிர சட்டசபையில் 288 இடங்கள் உள்ளன. இதில் சிவ சேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே உயிரிழந்துவிட்டார். எனவே தற்போது சட்டசபையில் 287 எம் எல் ஏக்கள் உள்ளனர்.

ஒரு தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணி கட்சியோ ஆட்சி அமைக்க 144 எம் எல் ஏக்கள் தேவை. தற்போது மகராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் 2019ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்த கூட்டணி ஆட்சி அமைந்தது.

இந்த கூட்டணிக்கு ஆதரவாக 169 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

தற்போது சிவ சேனாவில் 55 எம் எல் ஏக்களும், தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸில் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பந்தர்பூர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்சிபியிடம் இருந்த தொகுதி பாஜகவிடம் சென்றது.

தற்போது 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 பேர் சிவசேனா கூட்டணியில் அமைச்சர்களாக உள்ளனர்.

6 பேர் பாஜக ஆதரவாளர்களாகவும், ஐந்து பேர் சிவசேனா ஆதரவோடும், ஒருவர் காங்கிரஸ் ஆதரவோடும் ஒருவர் என்சிபி ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளனர்.

இதைத் தவிர வேவ்வேறு கட்சிகளை சேர்ந்த இரு எம் எல் ஏக்கள் பாஜக ஆதரவாளர்களாகவும், இரு எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்