மகாராஜா: விஜய் சேதுபதியின் படம் எப்படியிருக்கிறது?

Prasanth Karthick

வெள்ளி, 14 ஜூன் 2024 (13:42 IST)
தமிழ்த் திரையுலகில் சாதாரண பாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தைப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 50-ஆவது திரைப்படம் மகாராஜா.



குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் ஜூன் 14 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
திருடுபோன ஒரு பொருளைத் தேடி கதாநாயகன் காவல்நிலையத்துக்குச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொருள் மதிக்கத்தக்க ஒன்றும் இல்லை என்பதால், அந்தப் புகார் வேறுபல கோணங்களுக்குப் பயணிக்கிறது.

"மகாராஜா வைத்திருக்கும் சவரக்கத்தியிலிருந்து தொலைந்துபோன லட்சுமி வரை உயிரற்ற பொருள்கள் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என சின்னச் சின்ன இடங்களிலும் பெரிய கதைகளைச் சொல்கிறார்." என்று இந்தத் திரைப்படத்தின் கதையைப் பாராட்டியிருக்கிறது தினமணி நாளிதழ்.

ஆனால் திரைக்கதையை ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எதிர்மறையாக விமர்சித்திருக்கிறது.

"மிகப் பெரிய பலவீனம் படத்தில் மகாராஜாவாக இருக்க வேண்டிய திரைக்கதை பரதேசியாக இருப்பதுதான். " என்று தனது விமர்சனக் கட்டுரையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் குறிப்பிட்டிருக்கிறது.

படத்தின் திரைக்கதையை இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி இணையதளமும் விமர்சித்திருக்கிறது.

"நான் லீனியர் பாணியில் கதை சொல்லப்பட்டதால் எந்த சம்பவம் முன்னர் நடந்தது? எந்த சம்பவம் பின்னர் நடந்தது? என்பதனை புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிகிறது." என்று வீரகேசரி குறிப்பிட்டிருக்கிறது.

படத்தின் எடிட்டிங், பிற நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை கல்கி பாராட்டியிருக்கிறது.

"படம் நல்ல ஆக்ஷன் திரில்லர் அனுபத்தைத் தருகிறது. இந்த அனுபவம் கிடைப்பதில் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, அனல் அரசு மாஸ்டரின் சண்டை பயிற்சி, அஜனீஷ் லோகநாதின் இசை, இந்த மூவரின் பங்களிப்பும் முக்கியமானது. " என 'கல்கி' தனது இணையதளத்தில் எழுதியிருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது உதட்டசைவுக்கு ஏற்பட் டப்பிங் குரல் இல்லை என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

"அவரது உதடு ஒத்திசைவு சிக்கல் நடிப்பின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கிறது" என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

எனினும் அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறது.

"படத்தில் ஹீரோ அழுகின்றபோது படம் பார்க்கும் ரசிகர்களும் அழுவார்கள். ஆனால், ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக நடிக்கும் அனுராக் காஷ்யப் அழுகின்றபோது ரசிகர்கள் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது. நடிப்பில் மிரட்டியும் அசத்தியும் இருக்கிறார்" என்று கல்கி கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் விஜய் சேதுபதி கதாநாயாகனாக நடித்துக் கொண்டே வில்லன் உட்பட வேறு பல பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ஆயினும் அவருக்கு புத்துயிர் கொடுக்கும் படமாக இது இருக்கும் என்கிறது தினமணி.

"பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் 96 படத்திற்குப் பின் கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு வெற்றிப்படம் என எதுவும் அமையவில்லை. மகாராஜா அவரின் 50-வது திரைப்படம். இதுவரை அவர் நடித்ததிலேயே இதுவே சிறந்த திரைப்படம் எனத் தோன்றுகிறது. காதில் வெட்டுக்காயத்துடன் நரைதாடியுடன் பழிவாங்கத் துடிக்கும் வெறியை தன் பக்குவமான நடிப்பால் கடத்தி கைதட்டல் பெறுகிறார்." என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

துணைநடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களது நடிப்பையும் தினமணி பாராட்டியிருக்கிறது.

"நடிகர்கள் நட்ராஜ் (நட்டி), முனிஷ்காந்த், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்டோரின் கதாபாத்திர அறிமுகங்களும் அதை படம் முழுக்க வளர்த்துக் கொண்டு சென்ற விதமும் மிகச்சிறப்பு. நகைச்சுவைக்காக மட்டுமே நாம் ரசித்த சிங்கம் புலி, மகாராஜாவில் வேறு பரிணாமத்தை எடுத்திருக்கிறார். சிரித்துக்கொண்டே அவர் சொல்லும் வார்த்தைகள் திரையரங்கை அமைதிபடுத்துகிறது. விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஜனா நெமிதாஸ் நல்ல தேர்வு." என்று தினமணி குறிப்பிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்