வாழ்க்கையை புரட்டிப்போடும் கொரோனாவின் நீண்டகால பாதிப்புகள்
சனி, 17 அக்டோபர் 2020 (10:33 IST)
கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்புகள் ஒருவரை நான்கு வேறுபட்ட வகைகளில் பாதிக்கக் கூடும் என்று மதிப்பாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பிறகு தனக்கு நீண்டகால வைரஸ் பாதிப்புகள் இருப்பதை நம்ப முடியாதவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அதற்கேற்ற சிகிச்சையை சுகாதார பணியாளர்கள் வழங்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
மேலும், கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளுடன் வாழ்பவர்கள் மிகப் பெரிய உளவியல் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வாழ்க்கையை புரட்டிப்போடும் அனுபவங்கள்
கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரங்களிலும் அதைவிட கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைவதாக அறியப்படுகிறது.
ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நீண்டகால நோய்த்தொற்று பாதிப்புகளுடன் வாழ்ந்து வரலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களுக்கு உதவும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு ஃபேஸ்புக் குழுவினருடனான நேர்காணல், இதுதொடர்பான சமீபத்திய ஆராய்ச்சி முடிவு உள்ளிட்டவற்றை முதலாக கொண்டு பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது இந்த மதிப்பாய்வு முடிவுகள். கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளால் சுவாசம், மூளை, இதயம், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் தோல் உள்ளிட்டவற்றில் நாள்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகள் தொடருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிகுறிகளுக்கு கீழ்க்காணும் நான்கு வெவ்வேறு நோய்க்குறிகள் காரணமாக இருக்கலாம்:
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடுமையான கோவிட்-19 பாதிப்புகளுடன் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியுள்ளனர். ஆனால், லேசான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலானோருக்கு ஒருபோதும் பரிசோதனை செய்யப்படவில்லை அல்லது கண்டறியப்படவில்லை.
"சிலருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு என்பது நீண்டகால பிரச்சனை என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"இதுபோன்ற நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களில் சிலருக்கு மருத்துவமனை சிகிச்சை மற்றும் அதைத்தொடர்ந்த மறுவாழ்வு நடவடிக்கைகள் போதுமானதாக உள்ள நிலையில், தொடக்கத்தில் வீட்டிலேயே சிகிச்சை அளித்து பின்பு அறிகுறிகள் தீவிரமடையும் இன்னும் சிலருக்கு இது வாழ்க்கையை புரட்டிப்போடக் கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது."
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இந்த அறிக்கை தயாரிப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் எலைன் மேக்ஸ்வெல், கோவிட்-19 நோய்த்தொற்றால் தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களே இதன் நீண்டகால பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்றும், லேசான நோய்ப்பாதிப்புகளை கொண்டவர்கள் இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்குமென்றும் தான் இந்த மதிப்பாய்வுக்கு முன்புவரை கருதியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், மதிப்பாய்விலோ முற்றிலும் வேறுபட்ட தகவல் தெரியவந்துள்ளது.
"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பல வாரங்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தவர்களை விட கொரோனா பாதிப்பே கண்டறியப்படாத சிலருக்கு அவர்களை விட மோசமான நோய்ப்பாதிப்புகள் உள்ளதாக தெரிகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
'என் மகன்கள் வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டனர்'
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான பிறகுகூட பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ஜோ ஹவுஸ் இன்னும் பணிக்கு திரும்பவில்லை.
இது மோசமான இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்டவற்றுடன் தொடங்கி பிறகு கடுமையான சோர்வு, தலைவலியாகவும் அடுத்து இதயம் மற்றும் தசை வலி சார்ந்த பிரச்சனைகளாகவும் உருமாறின.
"இந்த நிலையில், ஒரு நாள் நான் காலையில் எழும்போது சற்றே களைப்பாக உணர்ந்த சில நிமிடங்களில் மயக்கமுற்றேன். பிறகு, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர வேண்டியதாகிவிட்டது."
இவரது இதய செயல்பாடிலும், மூச்சுவிடுவதிலும் முன்னேற்றம் இருந்தாலும், தொடர்ந்து இருந்து வரும் அறிகுறிகள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.
இவரது கணவரும் கொரோனாவின் நீண்டகால அறிகுறிகளால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், இவர்களது மகன்களே தற்போது சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் கவனித்து வருகின்றனர்.
"பலருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக வகைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், உண்மையில் அவை லேசான அறிகுறிகள் அல்ல. எங்களுக்கு மேலதிக உதவிகள் வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களுக்கு மருத்துவரீதியிலான ஆதரவு மட்டுமின்றி சமூகத்திலும் ஆதரவு அவசியம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கறுப்பினத்தவர்கள் அல்லது ஆசியர்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட குழுக்களை சேர்ந்தவர்களுக்கு இடையேயும் ஏற்கனவே உளவியல் மற்றும் கற்றல் குறைபாடுகளை கொண்டவர்களுக்கு மத்தியிலும் கோவிட்-19 நோய்த்தொற்று சரிசமமற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அந்த மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நோயாளிகள் எதிர்கொள்ளும் அனுபவங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவை அணுகுவதற்கும் சுகாதார பணியாளர்களை தயார்படுத்துவதே எங்களது நோக்கம்" என்று டாக்டர் மேக்ஸ்வெல் மேலும் கூறினார்.