கொழும்பு துறைமுகம் அருகே கப்பலொன்றில் பெரிய வெடிப்பு

செவ்வாய், 25 மே 2021 (16:35 IST)
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பர்ல் (X-PRESS PEARL) கப்பலில் தீ பரவியிருந்த நிலையில், இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. 

இந்த கப்பலில் வைக்கப்பட்டிருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு  சம்பவத்தை அடுத்து, கப்பலில் இருந்த 25 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு  வருவதற்காக இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
 
சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில், இரசாயன பொருட்கள் காணப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில்  நங்கூரமிடப்பட்டிருந்த இந்த கப்பலில் கடந்த 19ம் தேதி தீ பரவியது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்த நிலையில், இன்று  காலை அந்த கப்பலில் வெடிப்பு சம்பவமொன்று நேர்ந்துள்ளது. 

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் துறைமுக அதிகார சபை ஆகிய தரப்பினர் இணைந்து, கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்