சபரிமலை கனகதுர்கா - "வீட்டிற்கு திரும்பியும் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை"

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (12:22 IST)
சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த இரு பெண்களில் ஒருவரான கனகதுர்கா, குடும்பத்தினரால் கைவிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுடன் இறுதியாக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். யாருமே இல்லாத வீட்டிற்கு சென்ற அவர் தன் பிள்ளைகளை பார்க்க முடியாமல் இருப்பதால் வருத்தத்தில் உள்ளார்.


"தற்போது வரை என் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை. போனில்கூட தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. என் கணவரும் அவரது தாயாரும் என் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்கள். அமைதியான சூழலில் விரைவில் அவர்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன்" என கனகதுர்கா தெரிவித்தார்.

"அந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன்" என்று பிபிசி இந்தி சேவையிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

கேரளா மலப்புரம் மாவட்டத்தின் பெரிந்தளமன்னா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டினுள் நீதிமன்ற உத்தரவுடன் கனகதுர்கா சென்றுள்ளார்.

சுவாமி ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் 39 வயது கனகதுர்காவும், 40 வயது பிந்து அம்மிணியும் கடந்த ஜனவரி 2-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு மலையில் ஏறிச் சென்று தரிசனம் செய்தனர்.

அவர்கள் கோயிலுக்கு சென்ற வீடியோ வைரலானதை அடுத்து, இருவரும் தலைமறைவானர்.



கனகதுர்கா சபரிமலை கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக கூறி, அவரது மாமியார் அடித்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வீட்டிற்குள் நுழைவதற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கனகதுர்கா ஒரு தற்காலிக அரசாங்க தங்குமிடத்தில் தங்கி வந்தார்.

தற்போதுகூட தன் கணவர் தன்னிடம் பேசுவதில்லை எனக் கூறும் கனகதுர்கா "என்னிடம் பேசவோ அல்லது என்னை தொடர்பு கொள்ளவோ என் கணவர் ஆர்வம் காட்டவில்லை. போனில்கூட என்னிடம் பேச அவர் முயற்சிக்கவில்லை. என் அழைப்புகளையும் ப்ளாக் செய்துள்ளார்" என தெரிவித்தார்.

ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி கலங்காமல் உள்ளார் கனகதுர்கா.

சாதாரணமாகவே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். "மக்களுக்கு உதவும் அமைப்புகளில் பணியாற்ற விரும்புகிறேன். அதே நேரத்தில், என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறன்" என்று கூறினார்.


அரசு அமைப்பு ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரியும் கனகதுர்கா, தான் செய்ததற்காக எந்த விதமான வருந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார். "நான் செய்தது தவறு என்று நான் நினைக்கவில்லை. அனைவருடன் சேர்ந்து அமைதியான வாழ்க்கையையே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.




சட்டப்படி வீட்டிற்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று கூறும் அவர், தன் குழந்தைகளை பார்க்க முடியாமல் போனது வருத்தமே என்கிறார்.

வீட்டில் இருந்து சபரிமலைக்கு கிளம்பி சென்ற கடந்த டிசம்பர் 22ஆம் தேதிதான், தனது இரட்டை ஆண் பிள்ளைகளை கனகதுர்கா கடைசியாக பார்த்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்