நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்டது ஏன்? முக்கியத் தீர்ப்புகள் என்னென்ன?

வியாழன், 10 ஜூன் 2021 (15:17 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர், பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கில்,தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையின்போது, தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய புரிதல் ஏற்படுவதற்காக, தொழில்முறை மனநல ஆலோசககரின் உதவியை நாடியதாகத் தெரிவித்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முயற்சி செய்தது இந்திய அளவில் பேசப்பட்டது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சிறப்பு சட்டம் இல்லாததால், வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாலின புரிதல் பற்றிய சிந்தனைகளில் மாறவேண்டியது சமூகம் தான் என்றும் தெரிவித்திருந்தார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் முயற்சிக்கு பாராட்டு குவிந்துவரும் வேளையில் அவர் இதற்கு முன்னதாக வழங்கிய தீர்ப்புகள், அவரின் பின்னணி பற்றிய தேடல்களும் இணையத்தில் அதிகரித்துள்ளன. யூடியூப் வலைதளத்தில் பதிவாகியுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசிய காணொளிகள் பலவும் தற்போது பகிரப்படுகின்றன.

1993ஆம் ஆண்டு வழக்குரைஞர் பணியைத் தொடங்கியவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2016ல் நியமிக்கப்பட்டார். 2020ல் பதவி உயர்வு பெற்று நீதிபதி ஆனார். பி எல் பட்டம் முடித்த பின், முதல்தலைமுறை வழக்குரைஞராகப் பணியாற்றியதால், தன்னிடம் வரும் எல்லா வழக்குகளையும் கையாண்டதாக பொது மேடைகள் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக, நீதிபதி ஆவதற்கு முன், பலவிதமான வழக்குகளை கையாண்ட அனுபவம் தனக்கு கிடைத்தாக கூறுகிறார்.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் கண்காணிப்பாளர் ஒருவரை காவல்துறை சிறப்பு தலைமை இயக்குநர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வெளியான புகாரை, தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட இவர், இது போன்ற பொதுநல வழக்குகளில் ஆர்வம் காட்டியுள்ளார்.

சமீபத்தில் நாட்டுப்பற்று குறித்த ஒரு வழக்கில் அவர் அளித்த தீர்ப்பு கவனம் பெற்றது. இந்திய அரசின் மூவர்ண கொடி வடிவத்தில் கேக் வெட்டியது தேசபக்திக்கு எதிரானது என பதிவான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். கோவையில் 2013ல் நடந்த ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய நபர்கள் தேசபக்திக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற வாதத்தை அவர் ஏற்கவில்லை. தேசபக்தி என்பது அடையாளங்களில் இல்லை, நல்லாட்சி நடப்பதற்கு வேலை செய்வது தான் தேசபக்தி என தீர்ப்பளித்தார்.

மதுரையைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாக கூறி டாஸ்மாக் கடையை உடைத்தது பற்றிய வழக்கில், டாஸ்மாக் கடையை சேதப்படுத்தியதாக அந்த பெண்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அந்த பெண்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தார். வருமானத்திற்காக டாஸ்மாக் நடத்துவது என அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவு செய்தால், அந்த கடைகளால் பாதிக்கப்படுவதாக கூறுபவர்கள் அதனை எதிர்ப்பதற்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தார்.

தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கில், வழக்கின் தீர்ப்பை தனது மனதில் இருந்து எழுதவேண்டும் என முடிவு செய்ததால், தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்ள பல முயற்சிகளை எடுத்துகொண்டதாக கூறியிருக்கிறார். தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும், தன்பாலின ஈர்ப்பாளரான ஒரு பெண்ணின் தாயார் சந்திக்கும் சிக்கல் பற்றியும் தெரிந்துகொண்ட பின்னர்தான் வழக்கில் முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறுகிறார். அதோடு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி தன்னிடம் இருந்த முன்முடிவுகளை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த ஒரு சில தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதில், 2019ல், குற்றவியல் நீதிவழங்கல் முறையில் சீர்திருத்தம் தேவை என்றும் அதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கவேண்டும் என அவர் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் பல கோணங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை அளித்திருந்தாலும், இது அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்ற பணிகளை தாண்டி, திருவள்ளுவர் மற்றும் கம்பரின் எழுத்துக்கள் மீது பற்று, புத்தக வாசிப்பு, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் மிக்க நபர் என அறியப்படுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், 2021 மார்ச்சில், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கிரிக்கெட் விளையாட்டில் 'மேன் ஆப் தி மேட்ச்' விருதை பெற்றார். அந்த மேட்சில் அரைசதம் அடித்ததோடு, பந்துவீச்சின்போது, வழக்குரைஞர் அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருந்தார்.

மதுரையில் உள்ள பெண் வழக்குரைஞர்கள் அமைப்பு நடத்திய ஓர் உரையாடலில், தனது குடும்பத்தைப் பற்றி பேசும்போது, தமது மனைவி உஷா ஒரு வழக்குரைஞர் என்பதில் தனக்கு பெருமை என்றும், அவர் தொடர்ந்து வழக்குரைஞராகப் பணியாற்றியிருந்தால், அவரும் தற்போது நீதிபதியாகி இருப்பார் என்றும் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்