சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்: ஐ.எஸ் அமைப்பு

சனி, 11 ஜனவரி 2020 (14:34 IST)
இரான் புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். குழு அறிவித்துள்ளது.
 
சுலேமானீயின் மரணம் ஆயுதமேந்திய ஜிகாதிய போராளிகளுக்கு நன்மை அளிப்பதற்காக கடவுள் செய்த குறுக்கீடு," என்று ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த 3ஆம் தேதி இராக் தலைநகர் பாக்தாத்தில் காசெம் சுலேமானீயை திட்டமிடப்பட்ட ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்ற அமெரிக்கா குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
 
அதாவது, சுலேமானீ கொல்லப்பட்டது முதல் அதன் காரணமாக அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான தொடர் நிகழ்வுகள் தங்களது இயக்கத்தின் செயல்பாட்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரிப்பதற்கு உதவும் என்பதன் அடிப்படையிலேயே ஐ.எஸ். இயக்கம் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
 
சுலேமானீயை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரான் மற்றும் இரானால் நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் இராக்கில் இருக்கும் ஆயுத போராளிகள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்