காஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை மிகவும் குறைவு

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (17:13 IST)
இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சில பள்ளிகள் திறந்தன. ஆனால், மாணவர்கள் வருகை மிகக் குறைவாகவே இருந்தன.

இரு வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இந்திய ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

போராட்டங்களின் காரணமாக ஸ்ரீநகரில் மூடப்பட்ட பள்ளிகளில் 200 தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன என்று அரசு நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அந்த பள்ளிகளை பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். அவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தாங்கள் அஞ்சுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகக்கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள போதிலும், காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில போராட்டங்கள் வன்முறையாக மாறின.

பிரிவினைவாதிகள் ஜம்மு காஷ்மீரில் நடத்திய போராட்டங்களில் கடந்த முப்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.
 

இதனையடுத்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காஷ்மீரை முழுமையாக அரசு முடக்கி வைத்திருந்தது.

ஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட அளவு லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசு கடந்த வார இறுதியில் அறிவித்தது.

போராட்டங்கள் இன்னும் குறையாததால், மொபைல் சேவைகளும், இணைய சேவைகளும் இன்னும் முடக்கியே வைக்கப்பட்டுள்ளன.
 

எப்படி எதிர்பார்க்க முடியும்?


மொபைல் சேவை செயல்பாட்டுக்கு வரும் வரை பிள்ளைகளை வீட்டிலேயே வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

ஒரு நிலையற்ற நிலை நீடிக்கும் போது பிள்ளைகள் பள்ளிக்கு வர வேண்டுமென நாம் எதிர் பார்க்க முடியாது என ஆசிரியர் ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கின்றது.
திறக்கப்பட்ட சில பள்ளிகளும் அரசு பள்ளிகள்தான். தனியார் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கின்றது.
திறக்கப்பட்ட பள்ளிகளில் வருகை தந்த மாணவர்கள் எத்தனை பேர் என அறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

வளர்ச்சி

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து ஆதரித்து பேசி வருகிறார் பிரதமர் மோதி.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது என்கிறார் அவர்.

ஆனால், காஷ்மீர் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், இந்த நடவடிக்கையை ஒரு துரோகமாக பார்க்கின்றனர்.

பல காஷ்மீர் அரசியல் தலைவர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்