"விடுதலைப்புலிகள்" பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா?

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (23:15 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதியும் எம்.பியுமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தபோது இந்த கருத்தை வெளியிட்டார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனிற்கு உணவு, தண்ணீர் வழங்கி, அவரை இலங்கை இராணுவமே சுட்டுக் கொலை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

கஜேந்திரனின் கருத்தை அடுத்து, சபையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலையில், எஸ்.கஜேந்திரனின் கருத்து உண்மைக்கு புறம்பானது என்பதனால், அதனை ஹன்சார்ட் பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேனா, பாலச்சந்திரன் கூட பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இராணுவ சீருடையில் இராணுவ படையை வழிநடத்தியதாகவும், பிரபாகரனின் மனைவி புலிகளின் விநியோக பிரிவிற்கு பொறுப்பானவராக செயல்பட்டதாக சரத் பொன்சேனா குறிப்பிட்டார்.

அத்துடன், பிரபாகரனின் மூத்த மகன் அந்த அமைப்பின் கர்னலாக செயல்பட்டதுடன், அவரது மகள் பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில் மேஜராக செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், பிரபாகரனின் குடும்பத்தில் எவரும் அப்பாவிகள் கிடையாது என சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

யுத்தத்தில் பிரபாகரனின் குடும்பமே நாசமாகியதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரின் சடலங்கள் மாத்திரமே தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

'பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட பாலச்சந்திரன்'
'இலங்கை - போர் குற்றங்களை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம்'
ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதை கே.பி பின்னரான ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார் என சரத் பொன்சேகா சபையில் நினைவூட்டினார்.

பிரபாகரனின் இளைய மகன் பதுங்கு குழியொன்றில் இருப்பதை போன்றதொரு புகைப்படத்தையே தாம் பின்னர் அவதானித்ததாகவும், தமிழர்கள் அணியும் சாரத்தை போன்றதொரு உடையை அவர் அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த சிறுவன் இராணுவத்திடம் கிடைத்திருந்தால், சாரம் அணிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது என்பதுடன், அவர் சேர்ட் மற்றும் கால்சட்டை அணிந்திருந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த சிறுவனிடம் இருந்த நபர் அணிந்த சீருடையானது, விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தும் ஆடை எனவும் சரத் பொன்சேகா சபையில் கூறினார்.

எனவே, உண்மைகளை மூடி மறைக்க வேண்டாம் எனவும், இலங்கை இராணுவத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டாம் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்