தனது காரில் சீட் பெல்ட் அணிந்த நிலையில், ரத்தம் தோய்ந்த மனிதர் இறந்துகிடக்கும் காட்சியைக் காட்டும் படங்கள் சம்பவ இடத்தில் இருந்து வருகின்றன என்று கூறும் பிபிசி மத்திய கிழக்குப் பிரிவு ஆசிரியர் செபாஸ்டியன் உஷர், கர்னல் கொதாய் இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் ரகசியப் பிரிவான குத்ஸ் படையில் மூத்த அதிகாரி என்றும், இந்தப் படை வெளிநாடுகளில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படை பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு தருவதாகவும், மத்தியக் கிழக்கு நெடுகிலும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தப் படையே பொறுப்பு என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. "உலக அளவிலான அடாவடியில் ஈடுபடும் பயங்கரவாத முகவர்களான இரானின் பரம எதிரிகள்" கர்னல் சயாத் கொதாயை கொன்றிருப்பதாக இரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதீப்சாதே கூறியுள்ளார்.
அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையுமே அவர் இப்படி மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் பிற நாடுகள் வருந்தத்தக்க விஷயத்தில் அமைதிகாப்பதாகவும், இதை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.