இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி!

வெள்ளி, 13 மார்ச் 2020 (14:39 IST)
இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த புதன்கிழமை அன்று இராக்கில் உள்ள ராணுவத்தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
 
அமெரிக்கா மற்றும் இராக் ஆதரவு படைகள் மீது ஏற்கனவே மறைமுக தாக்குதல் நடத்திய குழு இரான் ஆதரவு குழுவினர் தான் என்று செனட் சபையில் பேசிய அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி கென்னத் மேக் கேன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க மக்கள் அல்லது அமெரிக்க ஆதரவு படைகள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் மார்க் எஸ்பெர் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் மார்க் எஸ்பெர் கூறுகிறார்.
 
இது போன்ற தாக்குதல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கர் ஒருவரை கொல்லப்பட்டதை கண்டிக்க அமெரிக்கா மற்றும் இரான் தொடர்ந்து பல பதில் தாக்குதலை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே இரானின் அதிகாரம் மிக்க மூத்த ராணுவ தளபதி குவாசெம் சுலேமானீயை கொல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்