கொரோனா வைரஸ்: பரவும் கொரோனா, போராடும் உலகம் - வெவ்வேறு நாடுகளில் என்ன நிலை?
அமெரிக்காவின் இரு கடலோர பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது நாட்டில் தேவைப்படும் 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை இந்த வாரத்துக்குள் தயாரிக்க இயலாது என்று அமெரிக்காவின் துணை அதிபரான மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரம் பேரை கடந்துள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 3,042 பேர் இறந்துள்ளதாகவும், இரண்டாவது நாளாக அதிகரித்து வரும் பாதிப்புகளால் மேலும் 30 பேர் இறந்துள்ளதாகவும் ஏஎஃபி முகமை குறிப்பிட்டுள்ளதை ஏஎன்ஐ செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது கிட்டதட்ட 80,000க்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். உலக அளவில் இந்நோய்த்தொற்றால் 3,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தாக்கத்தை சமாளிக்க தேவையான பெரும் அவசர நிதியை ஒதுக்கீடு செய்ய முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக விரைவாக அமெரிக்க காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை அமெரிக்காவில் 20 மாகாணங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரானில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு; 591 பேர் பாதிப்பு
கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க தனது முக்கிய நகரங்களுக்கிடையேயான பயணத்தை இரான் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை இரானில் குறைந்தது 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரானில் பள்ளிகள் ஏப்ரல் மாதம் வரை மூடப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை பயணம் செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சயீத் நமாகி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோன்று, மக்கள் பணத்தாள்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியை சில நாடுகள் சரிவர முன்னெடுக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்த நிலையில், மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள நடவடிக்கைகளை இரான் எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவை அடுத்து அந்நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இரான் விளங்குகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இரானில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். அதே போன்று கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,513 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் நிலவரம் என்ன?
நேற்று (வியாழக்கிழமை) வரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சீனாவில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,552 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொண்ட 6,70,854 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், இதுவரை 53,726 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனாவின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் 148-ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பை தடுக்க தற்போது 10 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளையும் இத்தாலி அரசு மூடியுள்ளது.
இதனிடையே பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளது. பெர்க்ஷைர் மருத்துவமனையில் ஏற்கனவே உடல்நல பிரச்சனைகள் உள்ள ஒரு வயதான நபர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தயாராகி வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 3 முதல் தங்கள் நாட்டில் நடக்கவுள்ள சர்வதேச பொருளாதார மன்ற கூட்டத்தை கொரோனா வைரஸ் பரவலால் ரஷ்யா ரத்து செய்துள்ளது.
கொரோனா வைரஸால் பூட்டானில் முதல்முறையாக ஒருவர் பாதிக்கப்படுள்ளது மார்ச் 5-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.