இந்தியாவில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்

சனி, 21 பிப்ரவரி 2015 (18:14 IST)
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாத மத்தியிலிருந்து 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த வாரத்திற்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது இந்நோயால் பதினோராயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய்க்கான மருந்துகளை விநியோகிப்பதற்கு அரசு தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
எச்1என்1 வைரசின் காரணமாக ஏற்படும் இந்த நோய், 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவியது. அதற்குப் பிறகு இப்போது மீண்டும் பரவியிருக்கிறது.
2009ஆம் ஆண்டில் முதன்முதலில் மெக்ஸிகோவில் இந்நோய் தென்பட்டது. அதற்குப் பிறகு உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.
 
ராஜஸ்தான் மாநிலம்தான் இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இக்காய்ச்சலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தியாவில் இந்த நோய்க்கான மருந்திற்குத் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுவதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மறுத்துள்ளார்.
"மருந்துச் சீட்டைக் காண்பித்தும் எந்த மருந்துக் கடையிலாவது மருந்தைத் தர மறுத்தால், அதை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். அந்தக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.
 
நிலைமையை அரசு தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் இது குறித்து யாரும் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
தமிழகத்தில் தடுப்பு முயற்சிகள்
 
தமிழ்நாட்டிலும் இந்நோய் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இந்நோயைக் குணப்படுத்துவதற்கான டாமி ஃப்ளு மாத்திரைகள் 4 லட்சம் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
இந்நோய் தாக்கியவர்களுக்கென தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்