வருமான வரி விலக்கு - நீங்கள் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

புதன், 1 பிப்ரவரி 2023 (14:42 IST)
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயில் இருந்து 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரிவு 87A-இன்படி தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

3 ஆண்டுகளுக்கு முன்பு 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதில் 6 வரம்புகள் இருந்தன. அதனை தற்போது 5 வரம்புகளாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது.


ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 30% வரி

9 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் ரூ.45 ஆயிரம் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

7 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 7 லட்ச ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் 3 லட்சம் ரூபாயில் இருந்து வரி கட்ட வேண்டும்.

உதாரணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒருவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகிதமும், 6 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும்.

அந்த அடிப்படையில் 9 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுபவர் 3 லட்ச ரூபாயில் இருந்து 6 லட்ச ரூபாய் வரை 15 ஆயிரம் ரூபாயும், 6 லட்ச ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாய் வரை 10 சதவிகிதம் என்ற அளவில் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

இது அடுத்தடுத்த வருவாய் வரம்பில் உள்ளோருக்கும் பொருந்தும்.

புதிய நடைமுறையா? பழைய முறையைத் தொடர்வதா?

அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, வருமான வரி தாக்கலின் போது புதிய நடைமுறையா? அல்லது பழைய நடைமுறையைத் தொடர்வதா? என்பதை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால் தாமாகவே அது புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறிவிடும்.

பழைய வருமான வரி நடைமுறையைத் தொடர விரும்பினால், நீங்கள் அதனை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம்.

புதிய வருமான வரி நடைமுறையின் கீழ் ரூ.7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையை நிறைவு செய்ய ஆகும் காலம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நவீன வருமானவரி கணக்கு விண்ணப்ப படிவங்களை அறிமுகப்படுத்தவும், வருமான வரி குறைதீர் நடைமுறைகளை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்